being created

லாஸ்யம்

From Tamil Wiki
Revision as of 23:24, 8 December 2023 by ASN (talk | contribs)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் சிவ தாண்டவங்கள் என்றும், பார்வதி தேவி ஆடிய நடனங்கள் லாஸ்யம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆண்மையும், உக்கிரமும் கொண்டு அங்கங்களை அசைத்து, பாட்டின் பொருளுக்கேற்றபடி ஆடுவது தாண்டவம். பிரத்யங்கம் உபாங்கம் அனைத்தையும் நளினமாக ரச பாவனையுடன் அபிநயித்து ஆடுவது லாஸ்யம். தாண்டவம், ஆண்மையையும் லாஸ்யம் பெண்மையையும் குறிப்பதாக பரத சாஸ்திரம் கூறுகிறது.

லாஸ்யம் தோற்றம்

லாஸ்ய நடனத்தை அருளிச் செய்தவர் பார்வதி தேவி என்பது தொன்மம். பார்வதி தேவி லாஸ்யம் என்னும் நடனத்தினை பாணனின் மகளும், அநிருத்தனின் மனைவியுமாகிய உஷைக்கு கற்றுக்கொடுத்தார். உஷை அதனை துவாரகையிலுள்ள இடைச்சேரிப் பெண்களுக்குக் கற்பித்தார். பின் அவர்கள் மூலம் இக்கலை உலகெங்கும் பரவியது என்பது தொன்மக் கதை.

மிக மென்மையானதாக ஆடத்தக்க கூத்துகளே லாஸ்யம். இதற்கு லலிதம் என்ற பெயரும் உண்டு. லாஸ்ய நடனங்கள் இன்பச் சுவையை அடிப்படையாக் கொண்டவை. மென்மையான கரண அங்ககாரங்களுடன் சிருங்காரத்தையோ, கருணையையோ முக்கியச் சுவையாகக் கொண்டு லலிதமாயும், மிருதுவாயும் பெண்களால் ஆடப்படுபவை.

லாஸ்ய நடனத்தில் அபிநயத்துக்கு முக்கியத்துவம் அதிகம் அளிக்கப்படுகிறது. தேவையான போது ஒரு பெண் தாண்டவத்தையும், ஒரு ஆண் லாஸ்யத்தையும் ஆடலாம்.

லாஸ்யத்தின் பிரிவுகள்

லாஸ்யம் ஏழு வகைகளைக் கொண்டது. அவை,

  • சுத்த லாஸ்யம்
  • தேசி லாஸ்யம்
  • பிரேரணா லாஸ்யம்
  • பிரேங்கணா லாஸ்யம்
  • குண்டலி லாஸ்யம்
  • தண்டிகா லாஸ்யம்
  • கலச லாஸ்யம்
சுத்த லாஸ்யம்

சுத்த லாஸ்யம் ஏழு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை,

  • தட்சிணப் பிரமணம்
  • வாமப் பிரமணம்
  • லீலாப் பிரமணம்
  • புஜங்கப் பிரமணம்
  • வித்யுத் பிரமணம்
  • லதாப் பிரமணம்
  • ஊர்த்துவ தாண்டவம்
தட்சிணப் பிரமணம்

இடது காலில் நின்றுகொண்டு, வலது முழந்தாளை வளைத்துத் தூக்கி, கைகளைக் கர்த்தரி முத்திரையாக அமைத்து, வலப்புறமாகச் சுழன்றாடுவது தட்சிணப் பிரமணம். இதற்குத் தாளம் மல்லிகா மோதம். கர்த்தரி கையோடு, இடது காலைப் பூமியிலிருந்து எடுக்காமலேயே நகர்ந்து ஆடுவது முதல் கதி. இரண்டாவது கதி ஹம்ச கதியாகிய அன்ன நடை. மூன்றாவதான கதி. கிருஷ்ணசார கதியென்னும் மானின் நடை.

தட்சிணப் பிரமணம், தாளத்தோடும் சொற்கட்டுகளோடும் ஆடப்பெறும்.

வாமப் பிரமணம்

தட்சிணப் பிரமணத்திற்குரிய அனைத்து நாட்டிய இலக்கணங்களும் வாமப் பிரமணத்துக்கும் பொருந்தும். ஆனால், இதில் வலப்புறத்திற்குப் பதிலாக, இடப்புறமாகச் சுழலவேண்டும். இதில் முதலாவதாக கஜகதி என்னும் யானை நடையும், கரி ஹஸ்த கரணமும், வக்கிர பந்தாசாரியும் அதாவது கோணல் நடையும் பயன்படுத்தப்படும்.

லீலாப் பிரமணம்

லீலாப் பிரமண நடனமாவது, சிகர முத்திரைக் கையோடு கூடிய இடது கையைத் தோளின் நடுவில் வைத்து, வலக்கையைப் பதாகை முத்திரையாகப் பிடித்து, வலது முழங்காலை வளைத்து உயர்த்தி இடது புறமாகச் சுழன்றாடுவது,

புஜங்கப் பிரமணம்

புஜங்கப் பிரமணமாவது வலது காலின் பின்புறத்தை இடது முழங்காலின்மீது வைத்து, இடுப்பைச் சிறிது வளைத்து, இடது காலை ஊன்றி, கைகளை நாகபந்த முத்திரையாகப் பிடித்துச் சொற்கட்டுகளுக்கு ஏற்ப ஆடுவது.

இதன் தாளம்: அபங்கம்; கதி: சிம்ம கதி; கரணம்: சிங்கவிக்ரீடிதகரணம்; சாரி: உத்ஸ்யந்திதம், ஹஸ்தம் ரேசிகம்.

வித்யுத் பிரமணம்

வித்யுத் பிரமண தாண்டவமாவது மின்னல் சுழலுவதுபோல இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்கிக் குதித்து, கால்களை கீழே வைத்து, இடது காலைச் சிறிது வளைத்து, கைகளைச் சதுஸ்ர முத்திரையாகப் பிடித்து, தலையை முன்னும் பின்னுமாக அசைத்து, வலப்புறமாக மும்முறை சுழன்றாடுவது. இதன் தாளம்: உத்கட்டிதம்.

லதாப் பிரமணம்

லதாப் பிரமணத் தாண்டவமாவது கொடிபோலச் சுழன்றாடுவது.. இடது காலில் நின்று கொண்டு, பாண முத்திரையோடு கைகளை நீட்டி, வலது காலையும் நீட்டி, வலப்புறமாக ஐந்து அல்லது ஏழு முறை சுழன்றாடுவதும், பின்பு வலது முழந்தாளை வளைத்து அம்முறையே சுழன்றாடுவதும் லதாப் பிரமணம்.

இதன் தாளம்: சரபலீலை; கதி: சுககதி; கரணம்; சீர பூஷணம்; சாரி: ஸ்யந்திதாசாரி.

ஊர்த்துவத்தாண்டவம்

ஊர்த்துவத்தாண்டவமாவது இடது காலில் நின்று, மேல் நோக்கிய பார்வையுடன், வலக்காலை வளைத்து மேலுயர்த்தி வலது காதுக்கருகில் பிடித்துக்கொண்டு, சிகர முத்திரையோடு கூடிய வலது கையை மார்பில் வைத்து, சிகர முத்திரையோடு இடது கையைத் தலைக்குமேலே உயர்த்தி வலது காலைப் பிடித்துக்கொண்டு ஆடுவது.

இதன் தாளம் - ஜம்பை. இதில் வியப்புச்சுவை தோன்றச் சொற்கட்டுகள் உச்சரிக்கப்படும்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.