first review completed

நீதிநெறி விளக்கம்

From Tamil Wiki
Revision as of 13:56, 2 November 2023 by Tamizhkalai (talk | contribs)
தமிழ் இணைய கல்விக் கழகம்
நீதிநெறி விளக்கம்-சில உரைப்பதிப்புகள்

நீதிநெறி விளக்கம் (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) தமிழில் தோன்றிய பிற்கால அறநூல்களில் ஒன்று. குமரகுருபரரால் இயற்றப்பட்டது. இதிலுள்ள் செய்யுள்கள் தமிழ் மக்களால் மூன்று நூற்றாண்டுகளா பயிலப்பட்டும் மேற்கோள் காட்டப்பட்டும் வருகின்றன.

ஆசிரியர்

நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் குமரகுருபரர். காசி மடத்தை நிறுவியவர். தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடையவர்.மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களை இயற்றியவர்.

பதிப்பு,வெளியீடு

நீதிநெறி விளக்கம் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் உரையுடன் 1835-ல் வெளிவந்தது. 1864-ல் சி. முத்தைய பிள்ளையின் உரையுடன் வெளிவந்தது. ஆறுமுக நாவலரின் 1933-ன் மூலப்பதிப்பு இதை பத்தாம் பதிவு எனக் குறிப்பிடுகிறது. அதன்பின் பல பதிப்புகள் கண்டது.

நூலின் தோற்றம்

திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கேற்ப திருக்குறளில் கூறப்பட்ட அறக்கருத்துக்களை வைத்து நீதிநெறி விளக்கத்தை இயற்றினார். குமரகுருபரை மதுரையில் திருமலை நாயக்கன் அவையில் இருந்தபோது திருக்குறளின் கருத்துக்களை மன்னருக்கு எடுத்துக் கூற, அவற்றால் கவரப்பட்ட மன்னர் அது போன்ற நீதி நூல் ஒன்று இயற்றுமாறு வேண்டினார். குமரகுருபரர் திருக்குறளில் கூறப்பட்ட அறக்கருத்துக்களை வைத்து நீதிநெறி விளக்கத்தை இயற்றினார். இதனால் மகிழ்ந்த மன்னர் திருமலை நாயக்கர் இருபதினாயிரம் பொன் வருவாயை உடைய அரியநாயகிபுரம் என்ற ஊரை அவருக்குப் பரிசாகத் தந்தார்.

நூல் அமைப்பு

நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடல் உட்பட 102 வெண்பாக்கள் உள்ளன. தேவபிரான் கவிராயர் இந்நூலுக்கு சிறப்புப் பாயிரம் இயற்றினார். இந்நூல் மனிதனுக்குத் தேவையான அறநெறிகளைத் தெரிவிக்கிறது. கல்வியின் பயனையும், செல்வத்தின் சிறப்பையும், முயற்சியின் பெருமையையும், செயல் ஆற்றும் திறத்தையும், சான்றோர் புகழையும் கூறுகிறது. துறவியர் பின்பற்ற வேண்டியவற்றையும், பின்பற்றக் கூடாதவற்றையும் கூறுகிறது.

காப்புச் செய்யுள் இளமை, செல்வம், உடல் இவற்றின் நிலையாமையைக் குறிப்பிடுகிறது. இந்நூலில் உள்ள காப்புச் செய்யுள் குமரகுருபரரின் சிதம்பர செய்யுட் கோவையில் இடம்பெறுகிறது.

நீரில் குமிழி இளமை, நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்து ஆகும் யாக்கை, நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று

நூலில் கூறப்படும் நீதிகள்

நீதிநெறி விளக்கம் கல்வியின் சிறப்பையும் செல்வத்தின் தேவையையும் எடுத்துக் கூறுகிறது. மனிதன் தனது விடா முயற்சியின் உதவியால் ஊழையும் மாற்றி அமைக்கமுடியும் எனவும்,செயல்திறம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதையும் எடுத்துரைக்கிறது.

ஆசைகளைத் துறந்து துறவியர் வாழவேண்டும் என்பதையும் அவர்கள் அறுசுவை உணவையும் தூக்கத்தையும் மிகுதியாக விரும்பக் கூடாது என்பதையும் அறியமுடியும். போலித் துறவியர் கொண்டுள்ள தவ வேடத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்னும் உண்மையையும் நீதிநெறிவிளக்கம் சொல்கிறது. மாதா, பிதா, குரு மூவரும் தெய்வமாகும் தன்மையை உரைக்கிறது.

மொழியாக்கங்கள்

நீதிநெறி விளக்கத்தின் ஆங்கில மொழியாக்கங்கள்

  • ரெவ. ஸ்டோக்ஸ் (1830)
  • சி. முத்தையா பிள்ளை (1864)
  • ரெவெ. வின்ஃப்ரெட்(1914)
  • கிருஷ்ணசாமி முதலியார்( 1937)

பாடல் நடை

கல்வியே சிற்றுயிர்க்கு உற்ற துணை

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்இசையும் நாட்டும் உறும்கவல்ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை

ஈயாத செல்வம்

இவறன்மை கண்டும் உடையாரை யாரும்
குறையிரந்தும் குற்றேவல் செய்ப; பெரிதும்தாம்
முற்பகல் நோலாதார், நோற்றாரைப் பின்செல்லல்
கற்புஅன்றே; கல்லாமை அன்று

கருமமே கண்ணாயினார்

மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

போலித் துறவியர்

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுகம் அன்று; பிறிதுஒன்றே- கஞ்சுகம்
எப்புலமும் காவாமே, மெய்ப்புலம் காக்கும்;மற்று
இப்புலமும் காவாது இது

உசாத்துணை

நீதிநெறி விளக்கம்-தமிழ் இணைய கல்விக் கழகம்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.