பிரபுத்தபாரதம்
பிரபுத்தபாரதம் (The Prabuddha Bharata) (1896) சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தக் கருத்துக்களை பரப்பும்பொருட்டு சென்னையில் இருந்து நடத்தப்பட்ட தத்துவ இதழ். பின்னர் இமாச்சலப்பிரதேசம் அல்மோராவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழ் இந்தியாவின் மிகத்தொன்மையான அச்சிதழ்களில் ஒன்று.
தொடக்கம்
பிரபுத்தபாரதம் இதழ் சென்னையில் ஜூலை 1896ல் தொடங்கப்பட்டது. 1893ல் சென்னைக்கு வந்த சுவாமி விவேகானந்தரை சென்னையில் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்த இளைஞர்கள் சந்தித்துப்பேசினர். விவேகானந்தரின் நவவேதாந்தம் சார்ந்த கருத்துக்களை பரப்ப ஆங்கிலத்தில் பிரம்மவாதினி என்னும் இதழ் தொடங்கப்பட்டது. அவ்விதழ் வேதாந்தக் கருத்துக்களை மட்டுமே வெளியிட்டது. இளைஞர்கள் படிப்பதற்குரிய ஓர் இதழ் தொடங்கவேண்டும் என்னும் எண்ணம் இளைஞர்களுக்கு உருவானது.
1896 ல் பி.ஐயாசாமி, பி.ஆர். ராஜம் ஐயர் ,ஜி.ஜி.நரசிம்மாச்சாரியா, பி.வி காமேஸ்வர ஐயர் ஆகியோர் இணைந்து பிரபுத்த பாரதா என்னும் ஆங்கில இதழை தொடங்கினர். 1893 ஜூலையில் முதல் இதழ் வெளிவந்தது
பெயர்
பிரபுத்த பாரதா என்னும் சொல்லுக்கு அறிவுவிழிப்பு கொண்ட பாரதம் என்று பொருள் . இதழின் பெயரை விவேகானந்தர் தன் கடிதம் வழியாக அறிவித்தார்.
நோக்கம்
பிரபுத்தபாரத இதழின் நோக்கம் பற்றி சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தில் “இவ்விதழை நடத்தும்போது கல்வித்திறனைக் காட்டி இதன் நடை கடினமானதாக ஆகாமலிருப்பதற்காக கருத்தூன்ற வேண்டும். அப்படிச்செய்தால் இவ்விதழ் உலகமெங்கும் பரவும் என்பதற்கு ஐயமில்லை. எளியநடையில் எழுதினால்தான் உங்களுக்கு விரைவில் நோக்கம் நிறைவேறும். சனாதன தர்மம் பற்றிய செய்திகளை எளிய கதைகள் வழியாக வெளியிடுவதே உங்கள் முதன்மைநோக்கமாக இருக்கவேண்டும். அத்தகைய கதைகள் சம்ஸ்கிருதமொழியில் குவிந்து கிடக்கின்றன. அவற்றின் அழகும் சிறப்பும் மிக உயர்ந்தவை. அவற்றை நீங்கள் பலர் அறியச்செய்யவேண்டும். உங்கள் இதழில் நுட்பமான தத்துவ வேதாந்த விவாதங்கள் மிகுதியாக இருக்கலாகாது. துணிவுடன் செயலை இயற்றுங்கள். விரைவிலேயே உங்களுக்குச் சிறப்பு வந்துசேரும் என்னும் வீண்விருப்புக்கு மட்டும் இடம்கொடாதீர்கள். உளப்பூர்வமாக நீங்கள் உழைத்தால் நாளடைவில் உலகம் உங்களை மதிக்கும்” என்று குறிப்பிடுகிறார்.
ராஜம் ஐயர் பிரபுத்தபாரத இதழுக்கு எழுதிய முன்னோட்டக் குறிப்பில் அவ்விதழ் சாந்தானந்த சுவாமிகளிடம் ஆசி பெற்று தொடங்கப்படுவதாகவும் பிரம்மவாதினி முதியவர்களுக்கு பயன்படுவதுபோல பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைஞர்களுக்கு பிரபுத்தபாரதம் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.
வரவேற்பு
பி.ஆர்.ராஜம் ஐயர் வெளியிட்ட முன்னோட்டமே வரவேற்பைப் பெற்றது என்று அவர் முதல் இதழிலேயே குறிப்பிடுகிறார். “அயல்நாட்டில் உருவாகியுள்ள சனாதனதர்மம் பற்றிய ஆர்வத்தால் நம் தேசம் எழுப்பப்படும் காலத்தில் அதை தெளியும்படிச்செய்ய இவ்விதழ் திகழப்போகிறது’ என்றுகுறிப்பிட்டார். அட்டையில் இந்து துறவி ஒருவர் தவம் செய்வதை அயல்நாட்டவர் வியப்புடன் பார்ப்பதுபோல படம் அச்சிடப்பட்டிருந்தது
பிரபுத்தபாரதம் முதல் இதழுக்கே 1500 சந்தாதாரர்கள் அமைந்தனர். ஓராண்டுக்குள் 4500 சந்தாதாரர்கள் அமைந்தனர். அக்காலகட்டத்தில் இது மிகுதியான எண்ணிக்கையாகும்.
உள்ளடக்கம்
ஆசிரியர்கள்
பிரபுத்த பாரதா இதழின் ஆசிரியர்களின் பட்டியல்
| காலம் | ஆசிரியர் | |
|---|---|---|
| 1 | ஜூலை 1896 முதல் ஜூன் 1898 வரை | பி.ஆர்.ராஜம் ஐயர் |
| 2 | ஆகஸ்ட் 1898 முதல் ஜூலை 1906 வரை | சுவாமி ஸ்வரூபானந்தா |
| 3 | ஆகஸ்ட் 1906 முதல் டிசம்பர் 1913 வரை | சுவாமி விரஜானந்தா |
| 4 | ஜனவரி 1914 முதல் மே 1918 வரை | சுவாமி பிரஜ்ஞானந்தா |
| 5 | ஜூன் 1918 முதல் டிசம்பர் 1921 வரை | சுவாமி ராகவானந்தா |
| 6 | ஜனவரி 1922 முதல் டிசம்பர் 1924 வரை | சுவாமி யதீஸ்வரானந்தா |
| 7 | ஜனவரி 1925 முதல் டிசம்பர் 1926 வரை | சுவாமி விவிதிஷானந்தா |
| 8 | ஜனவரி 1927 முதல் டிசம்பர் 1930 வரை | சுவாமி அசோகானந்தா |
| 9 | ஜனவரி 1931 முதல் டிசம்பர் 1934 வரை | சுவாமி பவித்ரானந்தா |
| 10 | ஜனவரி 1935 முதல் டிசம்பர் 1937 வரை | சுவாமி மைதிலியானந்தா |
| 11 | ஜனவரி 1938 முதல் டிசம்பர் 1939 வரை | சுவாமி தேஜாசானந்தா |
| 12 | ஜனவரி 1940 முதல் டிசம்பர் 1941 வரை | சுவாமி விபுலானந்தா |
| 13 | ஜனவரி 1942 முதல் டிசம்பர் 1944 வரை | சுவாமி கம்பீரானந்தா |
| 14 | ஜனவரி 1945 முதல் டிசம்பர் 1947 வரை | சுவாமி யோகேஸ்வரானந்தா |
| 15 | ஜனவரி 1948 முதல் டிசம்பர் 1949 வரை | சுவாமி பிரம்மமயானந்தா |
| 16 | ஜனவரி 1950 முதல் டிசம்பர் 1954 வரை | சுவாமி வந்தானந்தா |
| 17 | ஜனவரி 1955 முதல் டிசம்பர் 1956 வரை | சுவாமி சத்வரூபானந்தா |
| 18 | ஜனவரி 1957 முதல் டிசம்பர் 1958 வரை | சுவாமி நிஹ்ஸ்ரேயாசனந்தா |
| 19 | ஜனவரி 1959 முதல் டிசம்பர் 1961 வரை | சுவாமி அனானந்தா |
| 20 | ஜனவரி 1962 முதல் டிசம்பர் 1963 வரை | சுவாமி சித்தத்மானந்தா |
| 21 | ஜனவரி 1964 முதல் டிசம்பர் 1965 வரை | சுவாமி கீர்த்திதானந்தா |
| 22 | ஜனவரி 1966 முதல் ஜூலை 1968 வரை | சுவாமி ஆதிஸ்வரானந்தா |
| 23 | ஆகஸ்ட் 1968 முதல் டிசம்பர் 1968 வரை | சுவாமி புத்தானந்தா |
| 24 | ஜனவரி 1969 முதல் டிசம்பர் 1970 வரை | சுவாமி ரசஞானந்தா |
| 25 | ஜனவரி 1971 முதல் டிசம்பர் 1976 வரை | சுவாமி தத்ரூபானந்தா |
| 26 | ஜனவரி 1977 முதல் பிப்ரவரி 1979 வரை | சுவாமி பலராமானந்தா |
| 27 | மார்ச் 1979 முதல் டிசம்பர் 1986 வரை | சுவாமி பஜானந்தா |
| 28 | ஜனவரி 1987 முதல் டிசம்பர் 1989 வரை | சுவாமி ஜிதாத்மானந்தா |
| 29 | ஜனவரி 1990 முதல் டிசம்பர் 1993 வரை | சுவாமி முக்திரூபானந்தா |
| 30 | ஜனவரி 1994 முதல் டிசம்பர் 1996 வரை | சுவாமி ஆத்மரானந்தா |
| 31 | ஜனவரி 1997 முதல் டிசம்பர் 1998 வரை | சுவாமி சத்யபிரியானந்தா |
| 32 | ஜனவரி 1999 முதல் டிசம்பர் 2001 வரை | சுவாமி சுனிர்மலானந்தா |
| 33 | ஜனவரி 2002 முதல் டிசம்பர் 2004 வரை | சுவாமி யுக்தாத்மானந்தா |
| 34 | ஜனவரி 2005 முதல் அக்டோபர் 2010 வரை | சுவாமி சத்யஸ்வரூபானந்தா |
| 35 | நவம்பர் 2010 முதல் ஜூலை 2014 வரை | சுவாமி சத்தியமயானந்தா |
| 36 | ஆகஸ்ட் 2014 முதல் ஜூலை 2020 வரை | சுவாமி நரசிம்மானந்தா |
| 37 | ஆகஸ்ட் 2020 முதல் தற்போது வரை | சுவாமி வீரானந்தா |
இலக்கிய இடம்
உசாத்துணை
- ராஜம் ஐயர் சரிதை- தமிழ் இணையநூலகம்
- பி.ஆர்.ராஜம் ஐயர் = தென்றல் இணைய இதழ்.
- தமிழகத்தில் ராமகிருஷ்ண இயக்கம் பெ.சு.மணி
