first review completed

போந்தைப் பசலையார்

From Tamil Wiki
Revision as of 14:48, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

போந்தைப் பசலையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கிய தொகுப்பில் இவரது ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

போந்தைப் பசலையார் என்னும் பெயரிலுள்ள போந்தை என்பதின் பொருள் பனங்குருத்து. அதனைப் போல பிரிவாற்றாமையினால் பசலையுண்ணப்பட்டவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் இவருக்கு போந்தைப் பசலையார் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

போந்தைப் பசலையார் இயற்றியதாக சங்கத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றின் 110- வது பாடல் மட்டும் இடம்பெற்றுள்ளது. புகார்த் தெய்வத்தை நோக்கிப் பெண்கள் சூளுரைக்கும் வழக்கம் இப்பாடலுள் காணப்படுகின்றது . காதலன் செயலெல்லாம் தன் கண்ணுள்ளேயே நிற்கின்றதென்று கூறும் காதலியின் மனோபாவம் சொல்லப்படுகிறது.

பாடலால் அறியவரும் செய்திகள்

  • தொடலை என்பது தொட்டு விளையாடும் விளையாட்டு. ஒருவரைத் தொட்டுவிட்டு ஓடுவது. இளம்குமரியர் கடற்கரையில் தொடலையாடினர்.
  • புகார்த்தெய்வத்தை மக்கள் வணங்கினர்
  • தெய்வத்தின்மீது ஆணையிட்டு சூளுரைக்கும் வழக்கம் இருந்தது

பாடல் நடை

அகநானூறு 110

நெய்தல் திணை

தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி,
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி,
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல்
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்,
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
இருந்தனமாக, எய்த வந்து,
'தட மென் பணைத் தோள் மட நல்லீரே!
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்;
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?'
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு,
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி,
'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென.
'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ?' எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்!
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
யான் 'பெயர்க' என்ன, நோக்கி, தான் தன்
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே

தோழி செவிலியிடம் கூறியது:

இவளைப் பெற்ற தாய்க்குத் தெரிந்தாலும் தெரிந்துவிட்டுப் போகட்டும். ஊர்த்தெருவில் உள்ள மகளிர் அலர் தூற்றுவதைத் தாய் கேட்டாலும் கேட்டுவிட்டுப் போகட்டும். வேறு வழியே இல்லை. ஆற்றுச் சுழியில் நிற்கிறதே, புகார்த் தெய்வம், அதன் மேல் சூளுரைத்து (சத்தியம் செய்து) இதனை உனக்குச் சொல்கிறேன்..நாங்கள் தோழிமாரோடு சேர்ந்து ஓடித் தொடலை விளையாடினோம். கடலில் இறங்கி விளையாடினோம். சிறுவீடு கட்டிச் சிறுசோறு ஆக்கி விளையாடினோம். களைப்பைப் போக்க ஓரிடத்தில் அமர்ந்திருந்தோம். ஒருவன் எங்களிடம் வந்தான். எங்களது தோளழகைப் பாராட்டி 'நல்லவர்களே' என்றான். “பொழுது போய்விட்டது. களைப்பாக இருக்கிறேன்” என்றான். நீரில் மிதக்கும் மெல்லிலைகள் பரந்துகிடக்கும் உங்கள் சிறுகுடியில் விருந்து உண்டு தங்கிச் சென்றால் என்ன என்று நினைக்கிறேன்” என்றான். அவனைக் கண்டதும் நாங்கள் முகம் குனிந்தோம். “இப்படி முகம் குனிந்து நடந்துகொள்வது உங்களுக்கு உரிய செயல் ஆகாது” என்றான். நாங்கள் “மீன் உணவுதான் இருக்கிறது” என்றோம். அவன், “அங்கே பாருங்கள், நாவாய்க் கப்பல்கள் தோன்றுகின்றன” என்றான். (அவை அவனுடைய கப்பல்கள் என்று சுட்டிக் காட்டினான்) நாங்கள் கால் விரல்களால் நிலத்தைக் கீறிக்கொண்டு நின்றுகொண்டே கேட்டுவிட்டுச் சென்றுவிட்டோம். இப்படிச் சென்ற பலருள்ளே அவன் இவளை மட்டும் பார்த்து, “நன்னுதால் (முகவெட்டுக்காரியே) நான் போகட்டுமா” என்று வருத்தத்தோடு கூறினான். இவள் “போங்கள்” என்றாள். அவனோ அவன் வந்த தேரின் இருக்கையைப் (கொடிஞ்சி) பிடித்துக்கொண்டு நின்றான். இப்படி நான் (தோழி) கூறியதும், “அவன்தான் என் மகளுக்கு உரியவன் போலும்” என்று செவிலித்தாய் தலையசைத்தாள்.

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம் அகநானூறு 110, தமிழ் இணையக் கல்விக் கழகம்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.