first review completed

லீலா சாம்சன்

From Tamil Wiki
Revision as of 20:17, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
லீலா சாம்சன்

லீலா சாம்சன் (பிறப்பு: 1951) பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர், எழுத்தாளர். ஸ்பந்தா நடனக் கம்பெனியின் நிறுவனர்.

லீலா சாம்சன் குடும்பம்

வாழ்க்கைக் குறிப்பு

லீலா நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெஞ்ஜமின் ஆபிரகாம் சாம்சன், லைலா இணையருக்கு மகளாக 1951-ல் பிறந்தார். வாரணாசியிலுள்ள பெசண்ட் தியோசோஃபிகல் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தந்தை யூதர், தாய் கத்தோலிக்க கிறிஸ்துவர். லீலா தன்னை ஹிந்து என அறிவித்துக் கொண்டவர். ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை, தத்துவம் என்ற நம்பிக்கை கொண்டவர். மும்பையிலுள்ள சோஃபியா கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரு சகோதரி மற்றும் இரு சகோதரர்கள். லீலா திருமணம் செய்து கொள்ளவில்லை.

அமைப்புப் பணிகள்

  • 2005-ல் ருக்மிணி தேவி அருண்டேல் நிறுவிய கலாக்ஷேத்திராவின் இயக்குனராக இருந்தார். 2012-ல் ராஜினாமா செய்தார்.
  • 2010-ல் இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதெமியான சங்கீத நாடக அகாடமியின் தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். 2014-ல் ராஜினாமா செய்தார்.
  • 2011-ல் இந்திய திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராக சர்மிளா தாகூரை அடுத்து நியமிக்கப்பட்டார். 2015-ல் ராஜினாமா செய்தார்.
  • 2020-ல் JCB இலக்கிய விருதுக்கான தலைவராக ஆனார்.

கலை வாழ்க்கை

லீலா சாம்சன் 1961-ல் ருக்மிணி தேவி அருண்டேல் நிறுவிய கலாஷேத்ராவில் ருக்மிணி தேவி அருண்டேலிடம் பரதநாட்டியம் பயின்றார். 1970-ல் பாம்பேயில் லீலா சாம்சனின் முதல் அரங்கேற்றம் நிகழ்ந்தது. தில்லியில் உள்ள ஸ்ரீராம் பரதநாட்டிய பலா கேந்திரம், கந்தர்வ மஹாவித்யாலயா டெல்லியில் பல ஆண்டுகள் பரதநாட்டியம் ஆசிரியராக இருந்தார். ஆரம்பகாலங்களில் பரதநாட்டியத்தியில் தனி அரங்கேற்றங்கள் செய்தார். அதன்பின்னர் குழு அரங்கேற்றங்களும் செய்தார். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலுள்ள பல நாடுகளில் நிகழ்ச்சிகள் செய்தார்.

1995-ல் ஸ்பந்தா நடனக் கம்பெனியை நிறுவினார். லீலா சாம்சனால் அமைக்கப்பட்ட நடனங்கள், பரதநாட்டியத்தில் பல வகைகளைக் கற்றுக் கொடுப்பதையும் இவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டது.

லீலா சாம்சன்

எழுத்து

2010-ல் கலாஷேத்ராவில் கிடைத்த ருக்மிணி தேவி அருண்டேலின் கடிதங்களைக் கொண்டு அவரின் வாழ்க்கை வரலாற்றை ”Rukmini Devi: A Life” என்ற பெயரில் எழுதினார்.

திரை வாழ்க்கை

2015-ல் லீலா சாம்சன் மணிரத்னம் இயக்கத்தில் 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலயாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

விருதுகள்

  • 1982-ல் சன்ஸ்கிருதி விருது
  • 1990-ல் பத்மஸ்ரீ விருது
  • 1997-ல் நிருத்திய சூடாமணி விருது
  • 2005-ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
  • 2000-ல் சங்கீத நாடக அகாதமி விருது
  • 2015-ல் நாட்டிய கலா ஆச்சார்யா விருது

ஆவணப்படம்

  • 1991-ல் அருண் கோப்கர் ”Sanchari” என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.
  • 2020-ல் "The Flowering Tree" என்ற ஆவணப்படத்தை ஐன் லால் இயக்கினார்.

நூல்கள் பட்டியல்

  • Rhythm in Joy: Classical Indian Dance Traditions (1987)
  • Rukmini Devi: A Life (2010)

உசாத்துணை

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.