first review completed

பீட்டர் பெர்சிவல்

From Tamil Wiki
Revision as of 01:50, 23 September 2023 by Tamizhkalai (talk | contribs)
பீட்டர் பெர்சிவல்

பீட்டர் பெர்சிவல் (ஜூலை 24, 1803 - ஜூலை 11, 1882) ஆங்கிலேய நற்செய்தி அறிவிப்பாளர், மொழியியலாளர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர். பைபிளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பீட்டர் பெர்சிவல் ஜூலை 24, 1803-ல் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். 1824-ல் மேரி பெலிச்சரை மணந்தார். இலங்கைக்கு மத போதகராகச் சென்றார். யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியில் மதபோதகராகப் பணிபுரிந்தார். மனைவியுடன் இணைந்து பெண் கல்விக்காக சேவை செய்தார். இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த காலத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈபாடுபட்டார். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதிரியாராக தன் சேவையைத் தொடர்ந்தார். இருபத்தி நான்கு ஆண்டுகள் கல்விச் சேவையில் ஈடுபட்டார். சமஸ்கிருதம் பயின்று பட்டம் பெற்றார்.

சமயப் பணி

பீட்டர் பெர்சிவல் கல்லறை, ஏற்காடு

அமெரிக்க மிஷனரிகளில் ஒன்றான வெஸ்லியன் மெத்தடிஸ்ட் மிஷனை நிர்வகித்து மதம் பரப்புவதற்காக 1926-ல் இலங்கை வந்தார் பெர்சிவல். 23 வயது இளைஞராக வருகை தந்த பீட்டர் பெர்சிவல் மூன்றாண்டுகளில் தமிழ் கற்று, சமயச் சொற்பொழிவுகள், பிரச்சாரத் துண்டறிக்கைகள் தயாரித்தல் என மிஷனரியின் தலைமைப் பதவிக்கு வந்தார். இவரது சமயப் பிரச்சாரத் துண்டறிக்கைகள் தமிழகம் முழுதும் விநியோகிக்கப்பட்டன.

1840-ல் நான்காம் விவிலியத்தின் திருத்திய மொழிபெயர்ப்புப் பணிக்கான குழுத்தலைவர் பொறுப்பை ஏற்றார். தமது பள்ளியில் பயின்ற மாணவரான ஆறுமுக நாவலர் உதவியுடன் 1848-ல் பெர்சிவல் இப்பணியை நிறைவுசெய்தார். இம்மொழிபெயர்ப்பைச் சரிபார்ப்பதற்றகாக ஆறுமுகநாவலரை அழைத்துக்கொண்டு பெர்சிவல் சென்னை வந்தது, 1829 முதல் 1832 வரை மூன்றாண்டுகள் கல்கத்தா சென்றது ஆகிய நிகழ்வுகள் பெர்சிவல் வாழ்விலும் தமிழியல் சூழலிலும் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தின.

இலக்கிய வாழ்க்கை

பீட்டர் பெர்சிவல் ஆங்கிலம்-தெலுங்கு மற்றும் ஆங்கிலம்-தமிழ் அகராதிகளைத் தொகுத்தார். தெலுங்கிலும், தமிழிலும் 'தினவர்த்தமணி' என்ற இதழை வெளியிட்டார்.

'திருட்டாந்த சங்கிரகம்' என்ற தமிழ்த் தலைப்புடனும் 'A Collection of Proverbs in Tamil with Their Translation In English' என்ற ஆங்கிலத் தலைப்புடனும் பெர்சிவல் பாதிரியாரால், 1843-ல் யாழ்ப்பாணத்தில், அமெரிக்கன் மிஷன் வெளியீடாகத் தமிழ்ப் பழமொழிகள் அச்சில் கொண்டுவரப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

மொழிபெயர்ப்பாளர்

பெர்சிவல் பைபிள், பழமொழிகள், நீதி இலக்கியங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஔவையாரின் நீதி பாடல்கள், சாதி சமத்துவம் முதலான நீதிகளைப் பேசக்கூடிய கபிலரகவல் போன்றவற்றையும் பெர்சிவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

பைபிள் மொழிபெயர்ப்பு

சீகன் பால்கு (1863 - 1719), பெப்ரீஷயஸ் (1711 -1796), கிரேனியஸ் (1790 - 1838) போன்றவர்கள் தமிழில் விவிலியத்தை மொழியாக்கம் செய்திருந்தனர். எனினும், புதிய காலச் சூழலுக்கு ஏற்ப பைபிளை எளிமைப்படுத்த வேண்டியும் பல்வேறு திருச்சபையினர்களும் (மிஷனரிகள்) ஏற்றுக்கொள்ளும்படியான ஒருமித்த பதிப்பை உருவாக்கும் பொருட்டும் பெர்சிவல் தலைமையில் நான்காம் பைபிள் திருத்திய மொழிபெயர்ப்புக் குழு 1840-ல் அமைக்கப்பட்டது. ஆறுமுக நாவலரின் உதவியுடன் பெர்சிவல் பைபிளை மொழியாக்கம் செய்தார்.

மறைவு

பெர்சிவல் 1882-ல் தன் எழுபத்தி எட்டாவது வயதில் தமிழ்நாட்டிலுள்ள ஏற்காட்டில் காலமானார்.

நூல் பட்டியல்

பதிப்பு
  • Tamil Proverbs with their English Translation (1877)
  • Tamil Proverbs with their English Translation (AES First Reprint) (1996)
  • Tamil Proverbs with their English Translation (AES Second Reprint) (2001)
  • Tamil Proverbs with their English Translation (AES Third Reprint) (2002)
  • தமிழ்ப் பழமொழிகள் (2010)
  • Tamil Proverbs with their English Translation (2019)

உசாத்துணை

இதர இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.