first review completed

ம.வே. சிவகுமார்

From Tamil Wiki
Revision as of 20:16, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
நன்றி:சிலிகான் ஷெல்ஃப்

ம.வே. சிவகுமார் (1955- ஜனவரி 9, 2016) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர். நகர்ப்புற மத்தியதர வாழ்க்கையைப் பேசுபொருளாகக் கொண்ட அவரது படைப்புகள் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியத்துக்கும், வெகுஜன எழுத்துக்கும் இடையில் பாலமாக இருந்தன.

பிறப்பு,கல்வி

ம.வே. சிவகுமார் 1955-ல் நெய்வேலியில் பிறந்தார். பள்ளிக்கல்வியை நெய்வேலியில் முடித்தார்.

தனி வாழ்க்கை

ம.வே. சிவகுமார் பரோடா வங்கியில் பணிபுரிந்தார். மணமானவர். ஒரு மகன், ஒரு மகள்.

மார்ச் 31, 2001-ல் பாங்க் ஆப் பரோடாவில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ம.வே. சிவகுமார் கி. கஸ்தூரிரங்கன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், சுப்ரமண்ய ராஜு ஆகியோரைத் தனது இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார்.

சிவகுமாரின் முதல் சிறுகதை 1979-ல் கணையாழியில் வெளிவந்தது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி, தினமணிகதிர் ஆகிய இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. 1985-ல் 'கடைச்சங்கம்' குறுநாவல் கணையாழியில் வெளியானது

ம.வே. சிவகுமார் 1983-ல் தினமணிகதிரில் 'வேடந்தாங்கல்' என்ற நாவலைத் தொடராக எழுதினார். அத்தொடர் பரவலாக கவனிக்கப்பட்டது. 1991-ல் கமல்ஹாசன் முன்னுரையுடன் நாவலாக வெளியானது. முதல் சிறுகதைத் தொகுதி ‘அப்பாவும், இரண்டு ரிக்ஷாக்காரர்களும்' 1986-ல் கி. கஸ்தூரி ரங்கன் முன்னிலையில் ஜெயகாந்தன் தலைமையில் வெளியிடப்பட்டது.

1987-ல் ‘நாயகன்' என்ற சிறுகதைத் தொகுதி வெளியானது

1992-ல் ‘நவீன சிறுகதைகள்' என்ற சிறுகதை தொகுப்பு கமல்ஹாசன் தலைமையில் வெளியிடப்பட்டது.

தன்னையும் தன் கனவுகளையும் மையமாக்கி ம.வே. சிவகுமார் எழுதிய 'பாப்கார்ன் கனவுகள்' தொடர் கல்கியில் வெளிவந்து பரவலான பாராட்டைப் பெற்றது (1992).

ம.வே. சிவகுமாரின் பிற்காலச் சிறுகதைகளின் தொகுப்பு ' வாத்தியார்' கிழக்குப் பதிப்பகத்தால் 2005-ல் வெளியிடப்பட்டது.

நாடகம்/தொலைக்காட்சி

ம.வே. சிவகுமார் தன் வங்கியின் சார்பாக ஒவ்வொரு வருடமும், வெவ்வேறு மாநிலங்களில் நடத்தப்படும் அகில இந்திய நாடகப்போட்டிகளுக்காக நாடகங்களை எழுதி இயக்கினார். அவரது நாடகங்கள் தொடர்ந்து பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. 1997-ஆம் வருடம் மூன்றே நாட்களில் ஒத்திகையேயில்லாமல் ஜெய்ப்பூரில் அரங்கேற்றிய ‘விமோசனம்' நாடகம் அகில இந்திய அளவில் நடந்த வங்கி நாடகப்போட்டியில் சிறந்த கதை, சிறந்த நாடகம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் பரிசுகளைப் பெற்றது

1995-ல் 'பாப்கார்ன் கனவுகள்' பூர்ணம் விஸ்வநாதன் முன்னிலையில், குருகுலம் நண்பர்கள் ஆதரவில் மேடையேறியது

ம.வே. சிவகுமார் ‘ரங்கோலி' நாடகத்திற்காக மைலாப்பூர் அகாடமி வழங்கிய சிறந்த நடிகருக்கான பரிசும், கேடயமும் பெற்றார்.

சன் தொலைக்காட்சியில் அவரது திரைக்கதை, வசனத்தில் 'ஆலயம்' தொடராக வெளிவந்தது.

கவிதாலயாவின் சார்பாக ‘வீட்டுக்கு வீடு லூட்டி' என்ற தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடரின் முக்கிய எழுத்தாளராக 500 எபிசோடுகள் திரைக்கதை, வசனம் எழுதினார். (2002 – 2004).

தேவர்மகன் படப்பிடிப்பில் நன்றி: குங்குமம் இதழ்

திரைத்துறை

திரைத்துறையில் இருந்த ஆர்வத்தால் முக்தா சீனிவாசனின் முக்தா ஃபிலிம்சில் உதவி இயக்குனராக இணைந்து பயிற்சி பெற்றார். மருதநாயகம் திரைப்படத்தில் கதைத்துறையில் கமல் சிவகுமாரை இணைத்துக் கொண்டார். 'தேவர் மகன்' திரைப்படத்தில் கமலுடன் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். 'பாப்கார்ன் கனவுகள்' தொடரை 'உங்கள் ஜூனியர்' என்ற பெயரில் திரைப்படமாக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

திரைப்பட முயற்சி தோல்வியில் முடிந்ததால் கடன்கள் பெருகின. தன் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காததால் ஜனவரி 26, 2007 குடியரசு தினத்தன்று காலை பத்து மணியிலிருந்து அன்ன ஆகாரமின்றி வடக்கிருந்து உயிர் நீப்பதாக எழுதிய கடிதம் 'கருணை மனு' என்ற பெயரில் ஜனவரி 2007 திண்ணை இதழில் வெளிவந்தது. பிறகு நண்பர்களின் அறிவுரைகளின் பேரில் அம்முயற்சியைக் கைவிட்டார்.

விருதுகள், பரிசுகள்

  • இலக்கியச் சிந்தனை- சிறந்த சிறுகதைக்கான பரிசு 'முடிகொண்டான்' சிறுகதைக்காக -1982
  • இலக்கியச் சிந்தனை- சிறந்த சிறுகதைக்கான பரிசு 'உக்கிராணம்' -1985
  • மைலாப்பூர் அகாடமி வழங்கிய சிறந்த நடிகருக்கான பரிசும், கேடயமும்-'ரங்கோலி நாடகத்துக்காக (2000).
  • அசோகன் பாக்கெட் நாவல் சிறப்பிதழாக அவரது படைப்புகளை வெளியிட்டார்

இலக்கிய இடம்

ம.வே. சிவகுமாரின் படைப்புகள் நகர்ப்புறம் சார்ந்த மத்தியதர வர்க்கத்தைப் பேசுபொருளாகக் கொண்டவை. எளிய, நகைச்சுவை கொண்ட மொழியில் எழுதப்பட்டவை.

"சிவகுமாரின் எழுத்து குழப்பம் இல்லாமல் தெளிவாக இருக்கிறது. பாஷையைக் கையாளும் லாவகம் புதுசாய் இருக்கிறது. மன நிகழ்வுகளைப் பதிவு செய்யும் இடங்கள் பிசிறில்லாமல் இருக்கிறது" என சுப்ரமண்ய ராஜு குறிப்பிடுகிறார். பா. ராகவன் " எனக்குக் கதை எழுத சொல்லித் தந்த ம.வே. சிவகுமார் ஆதவனின் தாக்கம் அதிகமுள்ளவர்" என்று குறிப்பிட்டார்.

மறைவு

ம.வே. சிவகுமார் ஜனவரி 9, 2016 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • அப்பாவும், இரண்டு ரிக்ஷாக்காரர்களும்
  • நாயகன்
  • வாத்தியார்
  • நவீன சிறுகதைகள்
  • கடைச்சங்கம்(குறுநாவல்)
நாவல்
  • வேடந்தாங்கல்
  • பாப்கார்ன் கனவுகள்
தொலைக்காட்சித் தொடர்
  • வீட்டுக்கு வீடு லூட்டி
  • ஆலயம்
நாடகம்
  • ரங்கோலி
  • பாப்கார்ன் கனவுகள்
  • விமோசனம் மற்றும் பல

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.