under review

எஸ். எஸ். சர்மா

From Tamil Wiki
Revision as of 20:10, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
எஸ். எஸ். சர்மா

எஸ். எஸ். சர்மா (1930) மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ஓர் எழுத்தாளர். இதழாளர், நாடக ஆசிரியர், பயணக் கட்டுரையாளர் எனப் பல களங்களில் செயல்பட்டார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பாலர் சேனையில் பணியாற்றினார். இந்தியன் மூவி நியூஸ் இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பல்வேறு இதழ்களைத் தொடங்கி நடத்தினார். தமிழவேள் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

எஸ். எஸ். சர்மா, 1930-ல், மலேசியாவில், காரை நகர் சே.மு. சாம்பசிவ ஐயர்-செல்லம்மாள் இணையருக்குப் பிறந்தார். மலேசியாவின் பாகாங் மாநிலத்தில் உள்ள கோலாலிபீஸ் என்ற ஊரில் உள்ள கிளிபோர்ட் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். சிறம்பான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பள்ளியில் இறுதி ஆண்டுப் படிப்பை முடித்தார். மலேசியாவில் ஜப்பானிய ஆட்சியின்போது ஜப்பான் மொழியைக் கற்றார்.

எஸ்.எஸ். சர்மா

தனி வாழ்க்கை

எஸ். எஸ். சர்மா, மணமானவர். மனைவி வசந்தி. மகள்கள் சாந்தி, ஜெயந்தி. மகன் ஆனந்த்.

சர்மா கலைக்குழு

இலக்கிய வாழ்க்கை

எஸ். எஸ். சர்மா தமிழ் முரசு, தமிழ் நேசன், வீரகேசரி, ஈழகேசரி, பேசும்படம் இதழின் ‘திங்கள்’ மாத இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். தமிழ் மலர், மலேசியா மலர், வேல், மயில், சில்வர் ஸ்க்ரீன் போன்ற இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அதற்காக ஏகலைவன், பிர்மா, கிரிதரன் போன்ற புனை பெயர்களைச் சூட்டிக் கொண்டார். ஆன்மிக மாநாட்டு மலர்கள், ஆலயக் குடமுழுக்கு மலர்களில் பங்களித்தார். பல நாடுகளுக்கும் பயணப்பட்ட அனுபவங்களை பயணக்கட்டுரை நூல்களாக எழுதினார். தான் நடத்திய நாடகங்களை நூல்களாக்கி வெளியிட்டார். பொதுவாசிப்புக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட கதை, கட்டுரைகள், எழுதியுள்ள சர்மா, நாவல்களும் எழுதினார். 25-க்கும் மேற்பட்ட நூல்களை எஸ்.எஸ். சர்மா எழுதினார்

எஸ்.எஸ். சர்மா, சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 1977-ல் நடத்திய ஆய்வரங்கில் சிங்கப்பூரில் 100 ஆண்டுகள் நடைபெற்ற தமிழ் நாடகங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். தொடர்ந்து 1991-ல், 1979-க்குப் பின்னர் சிங்கப்பூரில் அரங்கேறிய நாடகங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார். பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வரங்குளில் கலந்துகொண்டு கட்டுரைகள் படைத்தார்.

இதழியல்

எஸ். எஸ். சர்மா, தமிழ் முரசின் ஆசிரியர் குழுவில் எட்டாண்டுகள் பணியாற்றினார். ’இந்தியன் மூவி நியூஸ்’ இதழின் ஆசிரியராக நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்தார். மலேசியா மலர், வேல், அலை ஓசை போன்ற இதழ்களை நடத்தினார். சிங்கைச் சுடர் இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். குண்டூசி, கலை போன்ற இதழ்களின் நிருபராகப் பணியாற்றினார். மோஷன் பிரிண்டர்ஸ் என்ற அச்சகத்தின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தார்.

எஸ்.எஸ். சர்மா நாடக நூல்கள்
எஸ்.எஸ். சர்மாவின் நாடக விளம்பரம்

நாடகம்

1957 ஆகஸ்ட் 31-ல் மலேசியா சுதந்திரம் அடைந்த நாளில், எஸ்.எஸ். சர்மா கதை வசனம் எழுதிய ‘பவானி’ என்ற நாடகம் மலேசியாவின் ஐந்து ஊர்களில் அரங்கேறியது. தொடர்ந்து ’பாஞ்சாலி சபதம்’ உள்ளிடபல நாடகங்களை எழுதி மேடையேற்றினார். ‘சர்மா கலைக் குழு’ என்பதனை ஏற்படுத்தி அதன் மூலம் பல கலை நிகழ்ச்சிகளை முன்னெடுத்தார். இந்தோனேசியாவுக்கு மூன்று தடவை தமது கலைக் குழுவுடன் பயணம் மேற்கொண்டு பல நாடகங்களை, கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். இலங்கை, தமிழ் நாடு, சீசெல்ஸ் நாடுகளிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினார்.

எஸ்.எஸ். சர்மா, சிங்கப்பூரில் இயல், இசை, நாடகக் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தியக் கலை மன்றத்தை 1968-ல் தொடங்கினார். அனார்கலி, ரோமியோ ஜூலியட், அம்ரபாலி, சியாமா, சகுந்தலை, போன்ற நாட்டிய நாடகங்களை அரங்கேற்றினார். சிங்கப்பூர்த் தேசிய நாடக விழாவில் சர்மா கதை வசனம் எழுதி இயக்கிய ஏழு நாடகங்கள் வரவேற்பைப் பெற்றன. ‘சிங்கப்பூர் இரவு’ என்ற கலை நிகழ்ச்சியை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடத்தினார். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் சர்மாவின் நாடகங்கள் பல ஒலிபரப்பாகின. தனது நாடக அனுபவங்கள் பற்றி சர்மா எழுதியிருக்கும் ‘நாடகம் நடத்தினோம்' நூல் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

எழுத்தாளர் அகிலன் உடன் எஸ்.எஸ். சர்மா

பொறுப்புகள்

  • இந்தியக் கலை மன்றத் தலைவர் மற்றும் நிறுவனர்
  • சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழக மதிப்பியல் செயலாளர்
  • சிங்கப்பூர் இந்தியர் சங்கச் சமூக, கலாசாரச் செயலாளர்
  • ஹொங்கா வட்டார அடித்தளச் செயற்குழு உறுப்பினர்
  • ஹொங்கா சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுத் தலைவர்
  • சமூகத் தற்காப்புக் குழுச் செயலாளர்
சர்மாவுக்கு மலேசியாவில் பாராட்டு

விருதுகள்

  • அமெரிக்காவின் அரிஸோனா பல்கலைக்கழகம் வழங்கிய முனைவர் பட்டம்
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் அளித்த தமிழவேள் விருது
  • சிங்கப்பூர் இந்தியா நுண்கலைக் கழகம் வழங்கிய கலாரத்னா விருது
  • தமிழ்மொழி பண்பாட்டுக்குக் கழகம் அளித்த திருவள்ளுவர் விருது
  • கவிமாலை அமைப்பு வழங்கிய கணையாழி விருது
  • கலைமகள் அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சேவை விருது
  • அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய இலக்கியக் கலைச் செம்மல் விருது
  • சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் வழங்கிய கலைக் காவலர் பட்டம்
  • செந்தமிழ்க் கலைமணி விருது
  • சென்னை நெல்லைக் கலாசாரச் சங்கம் வழங்கிய நாடகச் செம்மல் பட்டம்
  • கலையரசு பட்டம்

இலக்கிய இடம்

எஸ். எஸ். சர்மா பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை, புதினங்களை எழுதினார். தான் நடத்திய ‘இந்தியா மூவி நியூஸ்’ இதழில் பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். பலரது சிறுகதைகளை வெளியிட்டார். நாடகத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. சிங்கப்பூரின் முன்னோடி இதழாளராக, நாடகவியலாளராக எஸ்.எஸ். சர்மா அறியப்படுகிறார்.

நூல்கள்

நாடக நூல்கள்
  • எல்லாம் நன்மைக்கே!
  • கல்யாணம் ஒரு கால்கட்டு
  • அமளி துமளி
  • நினைவெல்லாம் நீயே!
  • சுழல்
  • அவள் ஒரு மேனகை
  • மாப்பிள்ளை வந்தாரு
  • ஆனந்தம் இன்று ஆரம்பம்
பயணக் கட்டுரைகள்
  • ஹாய் ஹாவாய்!
  • பூபாளம் பாடும் நேபாளம்
  • கும்பகோணம் மாமாங்கம்
  • கம்போடியாவில் கலைக்கோயில்கள்
  • ஈழத்தில் இனிய நாட்கள்
  • காஞ்சியின் மகிமை
  • சுமத்ரா ஒரு சுவர்க்கம்
  • சீசெல்ஸ் நாட்டில் சில நாட்கள்!
  • தமிழ் நாட்டில் எட்டு நாட்கள்
  • அடேயப்பா ஐரோப்பா
கட்டுரை நூல்
  • நாடகம் நடத்தினோம்
  • இந்து சமயத்திற்கு இனிய விழா
  • கடல் கடந்த தமிழ்க் கலாச்சாரம்
  • என் அன்பே : நாடகச் சிறப்பு மலர்
  • எஸ். எஸ். சர்மா நாடக படைப்புகளின் சிறப்பு மலர்களும் சுவரொட்டிகளும்
நாவல்
  • இனியவளே
  • வள்ளி
  • கபுகா
  • என்னை விட்டுவிடு
  • உஷ்.. பேசாதே...
  • என் அன்பே

உசாத்துணை

  • நாடகம் நடத்தினோம் - நூல், எஸ்.எஸ்.சர்மா, சர்மா வெளியீடு, முதல் பதிப்பு, ஜூன் 2004,
  • சிங்கைத் தமிழ் எழுத்துச் சிற்பிகள், தொகுப்பாசிரிய நா. ஆண்டியப்பன், சிங்கப்பூர் எழுத்தாளர் கழக வெளியீடு, 2000.


✅Finalised Page