first review completed

கலிப்பா உறுப்புகள்

From Tamil Wiki
Revision as of 07:11, 3 August 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )

கலிப்பா ஆறு உறுப்புகளை உடையது. தரவு, தாழிசை என்பன முதல் உறுப்புகள். அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் ஆகியன துணை உறுப்புகள்.

கலிப்பாவின் உறுப்புகள்.

கலிப்பா ஆறு உறுப்புகளை உடையது. அவை, தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் ஆகியனவாம்.

தரவு

கலிப்பாவின் முதல் உறுப்பு தரவு. பாடல் கருத்தைத் தொடங்கி வைக்கும் பகுதியாக இது அமையும். குறைந்த அளவாக மூன்று அடிகளும், மிகுந்த அளவாகப் பன்னிரண்டு அடிகளும் பெற்றுவரும். எருத்தம், பிடரி என வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

உதாரணப் பாடல்:

பூமாது நிலன்மணிப்பூண் பொதியவீழ்பொன் னிதழ்புனிதத்
தேமாலை நறுங்களபஞ் செறிமார்பத் திடைமுயங்க
அளப்பரிதாம் பகிரண்டத் தப்புற மகத்தடக்கி
உலப்பிலிளங் கதிருதயத் தொளிகிளர்பே ருருவாயும்
நன்னரங்கத் தணுக்கடொறு நயந்தணுவா கியுமெழில்கூர்
தென்னரங்கத் தரவணைமேற் செந்திருகண் வளர்ந்துள்ளாய்
- இது ஆறடியால் வந்த தரவு.

தாழிசை

கலிப்பாவின் இரண்டாவது உறுப்பு தாழிசை. தரவின் அடியளவை விட இது குறைந்து வரும். இது ஒருபொருள் மேல் மூன்றேனும் ஆறேனும் அடுக்கி வரும். இடைநிலைப் பாட்டு என்ற பெயரும் இதற்கு உண்டு. குறைந்த அளவு இரண்டு அடியாகவும் மிகுந்த அளவு பன்னிரண்டு அடியாகவும் அமையும்.

உதாரணப் பாடல்:

1. ஒருசுடராஞ் சொருபமுடனுபருமைந் தொருசுடரோ
டிருசுடராய்க் குணமொருமுன் றெனலாகி முறைமுறையே
படைப்பதையு மழிப்பதையும் புறம்போக்கிப் பழிபிறங்கா
திடைப்படுகாவலைநினதென் றெடுத்தெதவ னருளுதியே.


2. நின்றனவா யியங்கினவாய் நீடியபல் லுருவளித்தோன்
பொன்றியநா ளெழுந்தபெரும் புனற்படிந்த வுயிர்களைநீ
எம்மானே திருவுதரத் திருத்தியகா லவற்கவற்றால்
கைம்மாறங் கொவனோமுன் கைக்கொண்ட தருளிதியே.


3. புறம்பயின்ற வினைவழிசார் போக்குவா வினும்பிரியா
தறம்பயின்ற தணுவுளதே லதற்கவற்றை யெடுத்தணையாய்
உண்ணீர்மை யற்றனமாய்ந்த துறுநரகர் புரிவதுரீஇயக்
கண்ணீர்கொண் டகன்றகலாக் காவலெவ னருளுதியே.

- இவை மூன்றும் தரவைத் தொடர்ந்து வந்த தாழிசைகள். இவை தரவை விடக் குறைந்த நான்கு அடிகளால் அமைந்துள்ளன.

அராகம்

கலிப்பாவின் மூன்றாவது உறுப்பு அராகம். அளவடி, நெடிலடி, கழிநெடிலடி இவற்றில் ஒன்றாக இதன் அடிகள் அமையும். சிந்தடியோ, குறளடியோ வராது. இது நான்கடிக்குக் குறையாமலும் எட்டடிக்கு மிகாமலும் வரும். இதற்கு வண்ணகம், முடுக்கியல், அடுக்கியல் என்னும் பெயர்களும் உண்டு.

உதாரணப் பாடல்:

1. தரணியிலெவரொடு முரணிய பெருவிற
லிரணிய வானெனு மாரறு விகலினை

2. ஒருபது சிரமுட னிருபது கரமுள
நிருதனதுயிர்மிசை பொருகணை சிதறினை

3. மறைய ரிறையல ருறைவயின் வடுவுரை
பறைபலனுயிர்புகு மறைகழ லிணையினை

4. முதலையி னிடருறு மதமலை மடுவினுள்
உதவுக வெனுமுரை யதனொடு முதவினை

- இவை அளவடிகள் இரண்டு கொண்ட நான்கு அராகங்கள்.

அம்போதரங்கம்

அராகத்தை அடுத்து வரும் உறுப்பு, அம்போதரங்கம். அலை கரையைச் சேரும் போது தன் அளவு சுருங்கி வருவது போல் இவ்வுறுப்பும் முதலில் அளவடிகளாலும், பின் சிந்தடிகளாலும், பின் குறளடிகளாலும் படிப்படியாகக் குறைந்து வருவதால் அம்போதரங்கம் எனப் பெயர் பெற்றது. தரங்கம் என்னும் சொல் அலை என்பது இதன் பொருள். இது அசையடி, பிரிந்திசைக்குறள், சொற்சீரடி எனவும் கூறப்பெறும்.

பேரெண்

இரண்டடி இரண்டு கொண்ட அம்போதரங்கம் பேரெண் எனப்படும்.

உதாரணப் பாடல்:

1. வஞ்சனையோர் வடிவெடுத்து மாதுலனா முறைபயின்ற
கஞ்சனைக் கொன்று ரகேசன் கடும்பொறையைத் தவிர்த்தனையே

2. குருகுலத்தார் நூற்றுவரைக் கூற்றுவனாட் டினிலிருத்
தித்தருமன்முத லவர்க்கவனி தனியாளக் கொடுத்தனையே

இடையெண்

பேரெண்ணை அடுத்து இடம்பெறும் சிந்தடிகள் எட்டு அல்லது நான்கு, இடையெண் எனப்படும்.

உதாரணப் பாடல்:

1. கழிபெருங்கற் பினளாடை கழியாம னயந்தனையே
2. வழிபடுந்தூ தனுமாகி மடக்கோலைச் சுமந்தனையே
3. ததிபாண்டன் றனக்கழியாத் தமனியநா டளித்தனையே
4. விதிகாண்டற் கெண்ணில்பல வேடமவை கொண்டனையே

சிற்றெண்

இறுதியில் இடம்பெறும் குறளடி பதினாறு அல்லது எட்டு சிற்றெண் எனப்படும். சிற்றெண்ணில் ஓரசையே சீராக வருவதும் உண்டு.

உதாரணப் பாடல்:

1. உறித்தயிர் கட்டுண்டனையே
2. உரலிடை கட்டுண்டனையே
3. மறித்துநிரை காத்தனையே
4. வழங்கினையைங் கரத்தனையே
5. குடநடமுன் பாடினையே
6. குழலினிற்பண் பாடினையே
7. படர்சகடம் பொடித்தனையே
8. பகட்டுமருட் பொடித்தனையே
9. நாவலன்பின் நடந்தனையே
10. நடித்தனைமன் னடந்தனையே
11. கோவலரில் விருந்தனையே
12. கௌவிடையே ழிறுத்தனையே
13. புள்ளின்வா யிடந்தனையே
14. புரந்தனையாரிடந்தனையே
15. தெள்ளமுதங் கடைந்தனையே
16. தேவருளங் கடைந்தனையே

தனிச்சொல்

ஐந்தாவதாக அமையும் இவ்வுறுப்பில் ஓரசை, அல்லது ஒரு சீர் தனித்து வரும். விட்டிசை, கூன் தனிநிலை, அடைநிலை என்பன இதன் வேறு பெயர்கள்.

உதாரணம்

'என வாங்கு...'

இது தனிச்சொல் ஆகும்.

சுரிதகம்

கலிப்பாவை முடித்து வைக்கும் இறுதி உறுப்பு இது. இவ்வுறுப்பு ஆசிரியப்பாவினாலோ, வெண்பாவினாலோ அமையும். ஒரு பாடலில், தரவு உறுப்பின் அடியளவிற்குச் சமமாகவோ அதன் பாதி அளவிலோ இவ்வுறுப்பு அமையும். இதற்கு அடக்கியல், வாரம், வைப்பு, போக்கியல் என்னும் பெயர்களும் உண்டு.

உதாரணப் பாடல்:

இனையதன் மையவா மெண்ணருங் குணத்தின்
நினைவருங் காவ னிகழ்த்தினை யதனான்
நின்னது கருணையு நீயுங்
மன்னிய திருவுடன் வாழிவா ழியவே.

- இது நாலடி ஆசிரியச் சுரிதகம்.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.