அனுமன் ஆட்டம்

From Tamil Wiki
Revision as of 23:14, 19 January 2022 by Navingssv (talk | contribs) (அனுமன் ஆட்டம்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இராமாயணம் அனுமன் போல் வேஷமிட்டு ஆடப்படும் ஆட்டம் என்பதால் அனுமன் ஆட்டம் எனப் பெயர் பெற்றது. இதனை “குரங்காட்டம்”, “மந்தியாட்டம்” எனவும் சொல்வர். கரகாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இக்கலை பிற விழா ஊர்வலங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் பரவலாக நிகழ்த்தப்படும் இக்கலை தென்மாவட்டங்களில் வைணர் சாதி அதிகம் இருக்கும் பகுதியில் நிகழ்த்தப்படுகிறது.

அனுமன் ஆட்டம்

நடைபெறும் முறை

அனுமன் ஆட்டம் பரவலாக நையாண்டி மேளத்திற்கு ஏற்ப இசைக்கப்படும். ஒரு சில பகுதிகளில் பம்பை என்னும் இசைக்கருவிக்கு ஆடுபவர்களும் உண்டு. அனுமன் ஆட்டம் ஆடும் கலைஞர்கள் குரங்கினைப் போல் முகமூடியிட்டு, பிடரிக்கு பச்சை மயிர் உறை வைத்து, பின்னால் நீண்ட வாலுடனும் கால்களில் சலங்கையுடனும் ஆடுவர்.

ஊர் திருவிழாக்களில் நிகழும் கூத்து என்பதால் குரங்கு வேஷம் கட்டியவர் கூட்டத்தை சிரிக்க வைப்பதற்காக குரங்கைப் போல் சேட்டை செய்வார். பார்ப்பவர்களை நோக்கி கண்களை சுருக்குவது, பல்லை இளிப்பது, ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் தாவுவது என குரங்கு சேட்டைகளை செய்வார். பார்வையாளர்கள் அருகில் சென்று அவர்களை சிரிக்க வைப்பது, குழந்தைகளை பயம் காட்டுவது என ஈடுபடுவர். சில நேரங்களில் இளநீரை பல்லால் ஒடைத்து நீரை அருந்துவதும், வாழைப்பழத்தை குரங்கைப் போல் சாப்பிடுவதும் நிகழும்.

இத்தனை குரங்கு சேட்டைக்கு நடுவிலும் தாளத்திற்கும், நாதஸ்வர இசைக்கும் ஏற்ப ஆடுவர்.

பிறவடிவங்கள்

இந்த கூத்து கலையின் பிற வடிவங்கள் பரவலாக தமிழ் நாட்டில் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் அதனை நாட்டுப்புற அறிஞர்கள் ஒரு கலை வடிவமாக ஏற்றுக் கொள்ளவதில்லை.

அனுமனின் சித்து பெற்றவர்கள் ஆடும் ஆட்டமும் அனுமன் ஆட்டம் என்றே அழைக்கப்படும். ஆனால் அவை இந்த கலை வடிவத்தில் அமையாது.

நிஜக் குரங்கை வைத்து அதனை ஆடச் செய்து காண்பிப்பதும் குரங்காட்டம் என்பர். இதனை தென் மாவட்டங்களில் உள்ள காட்டு நாயக்கர், புல்லுக்கெட்டு நாயக்கர்கள் சாதியை சேர்ந்தவர்கள் நிகழ்த்துவர். இவை பெரும்பாலும் இவர்கள் வளர்ப்பு குரங்குள் செய்யும் சாகசங்கள் ஆரங்கேற்றவும், வீடுகளில் கொடுக்கப்படும் அரிசி, பருப்பு அல்லது காசுக்காகவும் நிகழ்த்தப்படுகிறது. இதனையும் ஒரு கூத்து வடிவமாக அறிஞர்கள் கருதுவதில்லை.

மேற் சொன்னவற்றிற்கும் அனுமன் ஆட்டத்திற்கும் உள்ள வேறுபாடு அனுமன் ஆட்டத்தில் இசைக்கப்படும் இசைக்கருவிகளுக்கு ஏற்பவும், தாளத்திற்கு ஏற்பவும் ஆடப்படும். அதே வேளையில் மேற் சொன்ன பார்வையாளர்கள் குதூகலப்படுத்துவதும் நிகழும்.

நிகழ்த்துபவர்கள்

அனுமன் வேஷமிட்டவர்: கரகாட்டக் கலையின் துணையாட்டக்காரர்கள் அனுமன் போல் வேஷமிட்டு ஆடுவர்.

அலங்காரம்

  • குரங்கு முகமூடி
  • பச்சை மயிர் உறை
  • குரங்கு வால்
  • கால் சலங்கை

நிகழும் ஊர்கள்

  • தமிழகத்தில் பரவலாகவும், தென்மாவட்டங்களில் வைணர் சாதி அதிகம் இருக்கும் பகுதியிலும் நிகழும்

நடைபெறும் இடம்

இந்த கலை கரகாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்வதால் கரகாட்டம் நடக்கும் திடலிலும். பிற ஊர்வலங்களில் நிகழ்வதால் ஊர் விழா நடைபெறும் வீதிகளிலும் நிகழும்.

உசாத்துணைகள்

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்
  • Tamil Virtual Univerity

காணொளி