first review completed

தில்லையாடி வள்ளியம்மை

From Tamil Wiki
Revision as of 14:15, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
தில்லையாடி வள்ளியம்மை

தில்லையாடி வள்ளியம்மை (பிப்ரவரி 22, 1898 - பிப்ரவரி 22, 1914) தென்ஆப்பிரிக்காவில் கிறுத்தவ முறைப்படி நடக்காத திருமணங்களை அங்கீகரிக்காத ஆங்கிலேய அரசை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தி சிறை சென்றவர். தன் பதினாறு வயதில் உயிரிழந்த இவரையே காந்தி தனக்கு முதன்முதலில் விடுதலையுணர்வை ஊட்டியவராகக் கருதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898-ல் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். நெசவுத் தொழிலாளியான முனுசாமி முதலியார் 1897-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் வணிகத்தைத் தொடங்கினார். வள்ளியம்மை அங்கு பிறந்தார்.

செயற்பாட்டாளர்

தில்லையாடி வள்ளியம்மை அஞ்சல்தலை

கிறித்தவ தேவாலயத்தில் தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன் படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தபோது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காந்தியின் முன்னெடுப்பில் அங்கிருந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பங்குபெற்று அறவழியில் போராடிய தில்லையாடி வள்ளியம்மை டிசம்பர் 22, 1913-ல் சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டபோதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாததால் வெளியே வர மறுத்தார். பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி நீக்கப்பட்ட பின்பே தம் விடுதலையை ஏற்று பிப்ரவரி 11, 1914-ல் வெளியே வந்தார் வள்ளியம்மை.

மறைவு

பிப்ரவரி 22, 1914-ல் தில்லையாடி வள்ளியம்மை காலமானார்.

நினைவு

  • 1916-ல் ஜோகன்ஸ்பெர்க்கில் தில்லையாடி வள்ளியம்மை மற்றும் அவருடன் இணைந்து போராடிய நாகப்பனுக்கும் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது.
  • தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை, தரங்கம்பாடி, தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. காந்தி தில்லையாடிக்கு மே 1, 1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் இந்த நினைவுத் தூண் கட்டப்பட்டது. அதன் எதிரில் 'தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம்' கட்டப்பட்டுள்ளது. இங்கு தில்லையாடி வள்ளியம்மையின் சிலை ஒன்று முன்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.