under review

கூழங்கைத் தம்பிரான்

From Tamil Wiki
Revision as of 19:30, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
நன்னூல் உரை

கூழங்கைத் தம்பிரான் (பிறப்பு: 1699-1795) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஆசிரியர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். தம்பிரானாக மடங்களில் இருந்தார். சைவ சித்தாந்த சாஸ்திரங்களில் பண்டிதர்.

வாழ்க்கைக் குறிப்பு

கூழங்கைத் தம்பிரானின் இயற்பெயர் கனகசபாபதி. தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் 1699-ல் பிறந்தார். தமிழ், வடமொழி புலமை கொண்டவர். தஞ்சை திருவத்தூர் மடத்தில் தம்பிரானாக இருந்தார். பிறருடன் ஏற்பட்ட மனத்தாங்கலால் யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கோபால் செட்டியார், அவரின் மகன் வைத்தியலிங்கச் செட்டியாரின் ஆதரவில் வாழ்ந்தார். செட்டியாருக்கும் அவருடைய மக்களுக்கும் ஆசிரியராகப் பணி செய்தார்.

கூழ்ங்கை பெயர்க்காரணம்

தம்பிரானாக திருப்பனந்தாள் மடத்திலிருந்தபோது, மடாதிபதி தம்முடைய கண்டிகை களவு போனதற்காக அவர்மேல் சந்தேகப்பட்டார். உருக்கிய நெய்யிலே கையிடச்சொன்னாலும் செய்வேனென்று கூறி, அவ்வாறு கையிட்டு கை கூழையாகப் பெற்றார்.

சைவ அறிஞர்

இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சித்தாந்த சாஸ்திரங்களிலும் பாண்டித்தியம் உடையவர். சைவ சித்தாந்த நெறியில் சரியை, கிரியை நிலை கடந்து யோக மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர். சிவபக்தியும் சிவானுபூதியும் உடையவர். தஞ்சை திருவத்தூர் மடத்து தம்பிரான்மாரிடம் சமய சார்ந்தவைகளைக் கற்றார். சைவ நூல்கள் பல எழுதினார்.

ஆசிரியப்பனி

கொழும்பிலுள்ள பாதிரிமார்கள் மற்றும் பலருக்கும் கல்வி கற்பித்தார். கோவாவிலிருந்து வந்து குருமார்கள் பலருக்கும் தமிழ் மொழி கற்பித்தார்.

மாணவர்கள்
  • நெல்லைநாத முதலியார்
  • சேனாதிராய முதலியார்
  • நல்லூர் பரமானந்தப்புலவர்
  • மாதகல் மயில்வாகனப்புலவர்
  • வைத்திலிங்கச் செட்டியார்

இலக்கிய வாழ்க்கை

தமிழ், ஆங்கிலம், போர்த்துக்கீச, ஒல்லாந்து ஆகிய மொழிகளில் புலமை உடையவர். தேவப்பிரசையின் கதை, யோசேப்பு புராணம் ஆகிய நூல்களை எழுதினார். யோசேப்பு புராணம் எனும் காவியத்தை 21 காண்டம், 1023 விருத்தத்தில் பாடி தமது நண்பரான பிலிப்பு தெ மெல்லோ பாதிரியாருக்கு அர்ப்பணம் செய்தார். நன்னூலுக்கு விருத்தியுரை எழுதினார். மாலை, கலிவெண்பா, புராணம், வண்ணம் போன்ற சிற்றிலக்கிய வகைகளில் சிற்றிலக்கியங்கள் பாடினார்.

மறைவு

1795-ல் இலங்கை யாழ்ப்பாணம் சிவியா தெருவில் ஞான ஒடுக்கத்திலமர்ந்து காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை
  • நல்லைக் கலிவெண்பா
  • தேவப்பிரசை திருக்கதை யோசேப்புப் புராணம்
  • கூழங்கையர் வண்ணம்
  • நன்னூற்காண்டிகையுரை

உசாத்துணை


✅Finalised Page