சுசித்ரா
To read the article in English: Suchitra.
சுசித்ரா (சுசித்ரா ராமச்சந்திரன்) (பிறப்பு: டிசம்பர் 16, 1987) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தொடர்ந்து சிறுகதைகள் விமர்சன கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருத்தலியல் சார்ந்த வாழ்வின் ஆதார கேள்விகளை கலை, அறிவியல் பின்புலங்களில் எழுப்பி கதைகளில் விவாதிக்கிறார். சுசித்ராவின் 'ஒளி' சிறுகதை பரவலாக வாசக மற்றும் விமர்சக கவனத்தை பெற்றது.
பிறப்பு, கல்வி
சுசித்ராவின் இயற்பெயர் கோதை. சென்னை மயிலையில் ராமச்சந்திரன், ஜானகி இணையருக்கு மகளாக டிசம்பர் 16, 1987இல் பிறந்தார். குன்னூர், சென்னை, விஜயவாடா, ஹைத்ராபாத், மதுரை ஆகிய ஊர்களில் பள்ளிக்கல்வி பயின்றார். பள்ளி இறுதிக்கல்வி மதுரை டி.வி.எஸ்.லட்சுமி மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். விருதுநகர் காமராஜ் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். முழு உதவித்தொகையுடன் அமெரிக்கா பிட்ஸ்பர்கில் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் ஆய்வுமேற்கொண்டார். நரம்பணுவியல் துறையில் மூளை சூழலிலிருக்கும் ஒழுங்குகளை தானாகவே கற்கும் திறன் (Statistical learning) பற்றி முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
சுசித்ரா அறிவியல் ஆய்வாளரான வருணை ஜூன் 1, 2014 அன்று மணந்தார். மகன் ராகேந்து. சுவிட்சர்லாந்தில் உள்ள அறிவியல் ஆய்வு கூடம் ஒன்றில் விஞ்ஞானியாக பணியாற்றினார். குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திலுள்ள பாசலில் வசிக்கிறார்.
அமைப்புப் பணிகள்
சுசித்ரா, மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதாவுடன் இணைந்து மொழிபெயர்ப்புக்கான "Mozhi" என்ற தளத்தை 2022இல் உருவாக்கினார். இந்திய இலக்கியங்களுக்கிடையேயான உரையாடலை மொழிபெயர்ப்பு மூலமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தைக் கொண்டதென அதனை வரையறை செய்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
சுசித்ராவின் முதல் படைப்பு 'குடை’ (சிறுகதை) 2017-ல் விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் நடத்திய வாசகர் சந்திப்பில் வாசித்து விவாதிக்கப்பட்டது. 2017-ல் பதாகை இதழில் வெளியான 'சிறகதிர்வு' (சிறுகதை) எனும் அறிவியல் புனைவுகதையே பிரசுரமான முதல் கதை. சுசித்ராவின் ‘ஒளி’ சிறுகதைத்தொகுப்பு 2020இல் யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்தது.
Asymtote, Scroll போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும், ஜெயமோகன் தளத்திலும், தமிழ் சிற்றிதழ்களிலும் இலக்கியம் சார்ந்த விமர்சனக் கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆதர்ச எழுத்தாளர்களாக கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், ஜெயமோகன், அர்சுலா ல குவின், ஐசக் தினேசென் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
மொழியாக்கம்
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். எழுத்தாளர் அ. முத்துலிங்கம், ஜெயமோகன், ஜேனிஸ் பரியத், அனிதா அக்னிஹோத்ரி, ஆஷாபூர்ணாதேவி ஆகியோரின் சிறுகதைகளை மொழிபெயர்த்தார். அருணவா சின்ஹாவை ஆசிரியராகக் கொண்ட South Asia Speaks Class of 2022 என்ற மொழிபெயர்ப்பு சார்ந்த பட்டறைக்கான குழுவில் மாணவராக இருந்தார். இதன் மூலம் எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை மொழிபெயர்ப்பு செய்து ஜாகர்னட் பதிப்பகம் வெளியீடாக 2023இல் வெளியிட்டார்.
இலக்கிய இடம்
தன் கதைகளைப் பற்றிச் சொல்லும்போது ’என் மொழியின் மரபு மட்டும்மல்லாது, மானுடத்தின் அகம் இந்தப் பிரபஞ்ச வெளியை அர்த்தப்படுத்த கதைகளை உருவாக்கும் பெருமரபில் என் இருப்பை உணர்கிறேன். அறமும் மறமும் ரௌத்திரமும், அருளும் கனிவும் மானுடமும், தவமும் அழகும் பேரிருப்பும், எல்லாம் வந்தது கதை வழியே’ என்று கூறுகிறார் (ஒளி தொகுப்பின் முன்னுரை).[1]
அடிப்படை மெய்யியல் வினாக்களை நோக்கிச் செல்லும் சுசித்ராவின் கதைகள் பெரிதும் கவனிக்கப்பட்டவை. அறிவியல் புனைகதைகளிலும் அறிவியல் குறியீடுகளை பயன்படுத்தி அவ்வகையான உசாவல்களையே முன்னெடுக்கிறார். தமிழில் அறிவியல் புனைகதைகளின் புத்தெழுச்சியை முன்னெடுக்கும் படைப்பாளிகளில் சுசித்ரா முக்கியமானவர். சுசித்ரா இன்றைய அறிவியல் புனைகதைகளைப்பற்றிச் சொல்கையில் 'இன்று எழுதப்படும் அறிபுனை கதைகளில் உள்ள நெகிழ்ச்சி ஒருவகையில் இந்த எல்லைகளை கடந்து தூய கதைகளாக நிற்க முற்படுவதன் வழியாக உருவாகி வருகிறது’ என்கிறார்.[2]
கதை சொல்லல் தன்மை கூடியிருக்கும் அதே சமயம், விளையாட்டாக நின்றுவிடாமல் இக்கதைகள் வலுவான கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணத்துக்கு – கலை மற்றும் அறிவியலிடையே உள்ள முரண்பாடு, அது விளைவிக்கும் மோதல், கலை மானுடனுக்கு அளிப்பதென்ன, பயம் என்ற உணர்வை சமூகமும் அரசும் தனிமனிதனுக்கு எப்படி புகட்டி ஆள்கிறது என்பவை என்று விமர்சகர் பிரியம்வதா குறிப்பிடுகிறார்.[3]
விருதுகள்
- 2017இல் Asymptote புனைவு மொழியாக்கத்துக்கான சர்வதேச பரிசு (பெரியம்மாவின் சொற்கள் மொழியாக்கம்)
- 2020இல் 'ஒளி’ தொகுப்புக்காக வாசகசாலை இளம் எழுத்தாளர் விருது
நூல்பட்டியல்
சிறுகதைத்தொகுப்பு
- ஒளி (2020, யாவரும் பதிப்பகம்)
மொழியாக்கம்
தமிழிலிருந்து ஆங்கிலம்
- Periyamma’s Words (ஜெயமோகனின் 'பெரியம்மாவின் சொற்கள்’ சிறுகதை ஆங்கிலத்தில் Asymptote பத்திரிக்கையில் வெளியானது, 2017)
- Goat Milk Puttu (அ.முத்துலிங்கத்தின் ஆட்டுப்பால் புட்டு ஆங்கிலத்தில், narrativemagazine)
- Devaki Chithi’s Diary (ஜெயமோகனின் தேவகி சித்தியின் டைரி மொழியாக்கம்)
- The Abyss (எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் ஆங்கில மொழிபெயர்ப்பு) (ஜாக்கர்னட் பதிப்பகம், 2023)
ஆங்கிலத்திலிருந்து தமிழ்
- எரிகல் ஏரி (அனிதா அக்னிஹோத்ரி, 2018)
- தங்க மாஸீர் குறித்த கனவு (ஜேனிஸ் பரியத், ‘நிலத்தில் படகுகள்’ தொகுப்பு, 2018, நற்றினை பதிப்பகம்)
- வெற்று பக்கம் (ஐசக் டினேசன், 2017)
இணைப்புகள்
- சுசித்ரா வலைதளம்: ஆகாசமிட்டாய்
- மொழி - இணையதளம்
- பொற்றாமரையின் கதைசொல்லி - சுசித்ரா ஒளி சிறுகதைத் தொகுப்பு முன்னுரை
- அறிவியல் புனைகதைகள்: வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்
- ஒளி: வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்: பிரியம்வதா
- தல்ஸ்தோய் மனிதநேயரா?- எதிர்வினை- சுசித்ரா: ஜெயமோகன் தளம்
- சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா: ஜெயமோகன் தளம்
- சிறகதிர்வு சிறுகதை விமர்சனம்: ஏ.வி. மணிகண்டன், விஷால்ராஜா
- Asymptote Podcast: In Conversation with Suchitra Ramachandran
- பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா: ஜெயமோகன் தளம்
✅Finalised Page