சுதா
சுதா( பிறப்பு : செப்டெம்பர் 7, 1983) சமூகச் செயல்பாட்டாளர். திருநங்கையருக்கான 'தோழி' என்னும் அமைப்பின் நிறுவனர், இயக்குநர்.
பிறப்பு, கல்வி
சுதா செப்டெம்பர் 7,1983 அன்று ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் அரிசிவணிகரான சுப்பா ரெட்டிக்கும் துராசனா அம்மாவுக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். சுதாகர் என்பது பழைய பெயர்.
நெல்லூரில் தொடக்கக் கல்வியையும், நெல்லூர் ஜூனியர் கல்லூரியில் புகுமுக வகுப்பையும் முடித்தார். சென்னை சவீதா பல்கலைக் கழகத்தில் பல்மருத்துவப் படிப்பை தொடங்கினார், படிப்பை முடிக்கவில்லை.
தனிவாழ்க்கை
இளமையிலேயே தன்னை பெண் என உணர்ந்த சுதாகர் சென்னையில் பல்மருத்துவருக்குப் படிக்கையில் தன் 19-ஆவது வயதில் தன்னை திருநங்கை என உணர்ந்து அவ்வாழ்க்கையை தெரிவுசெய்து சுதா என பெயர் மாற்றம் செய்துகொண்டார்.
இதன் காரணமாக குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட சுதா சென்னையில் வேலை தேடி கிடைக்காமல் குறுகியகாலம் சென்னையில் திருநங்கையருக்குரிய புறச்சமூக வாழ்க்கையை மேற்கொண்டார். சுனில் மேனன் என்பவரால் நிறுவப்பட்டு பால்புதுமையினரின் நலனுக்காக சென்னையில் செயல்பட்டு வந்த 'சகோதரன்' என்னும் அமைப்புடன் தொடர்புகொண்டு அதில் பணியாற்றினார்.
சுதாவின் குடும்பத்தில் அவரைவிட 13 வயது மூத்த சகோதரரும் இதழாளருமான ஹஸ்ரத் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு குடும்பத்தில் ஏற்பு உருவாக வழிவகுத்தார். சகோதரர் ஹஸ்ரத்தின் உதவியுடன் சுதா திருநங்கையருக்கான 'தோழி' என்னும் அமைப்பை உருவாக்கினார்.
சுதா 'தோழி' அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தார். அவர்கள் இன்று மின்னியல் போன்ற துறைகளில் பணியாற்றி நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
பணிகள்
சுதா 1990-களில் சுனில் மேனன் என்பவர் நடத்திவந்த 'சகோதரன்' என்னும் அமைப்புடன் இணைந்து பால்புதுமையினர் மற்றும் திருநங்கையரிடம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக உழைத்தார்.
2007-ல் சுனில் மேனன் உதவியுடன் 'தோழி' என்னும் அமைபை உருவாக்கினார். அதில் மேலும் ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர். அரசுசாரா தொண்டுநிறுவனமான 'தோழி' 2012-ல் தான் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றது. அதுவரை சொந்தச்செலவில் இந்த அமைப்பை நடத்திவந்தார்.
சுதா திருநங்கையரின் கல்வி, மறுவாழ்வுக்கான பணிகளை 'தோழி' அமைப்பு சார்பில் நடத்தி வருகிறார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதன்பொருட்டு பயணம் செய்துள்ளார். சென்னையில் சிம்ஸ் (SIMS ) மருத்துவமனையுடன் இணைந்து எய்ட்ஸ் ஒழிப்புப் பிரச்சாரத்தில் 'தோழி' ஈடுபடுகிறது. ஆதரவற்ற திருநங்கையருக்கான புகலிடத்தையும் அமைத்துள்ளது.
விருதுகள்
- பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் ( BBC) சுதாவின் வாழ்க்கையை பேட்டிகண்டு பதிவுசெய்துள்ளது.
- சர்வதேச தமிழ் பல்கலை ( International Tamil University, USA) சுதாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது
- சுதாவுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான மருத்துவர் ஜீவா அறக்கட்டளை (ஈரோடு) வழங்கும் மருத்துவர் ஜீவா பசுமைவிருதுகள் வழங்கப்பட்டன.
உசாத்துணை
- மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் செய்தி
- சுதா காணொளி
- From-ignominy-to-glory
- தோழி பணிகள் -இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி
- மூன்றாம்பாலினத்தோருக்கான புகலிடம். செய்தி
- சுதா முகநூல்
- Empty-nest Bhumi
✅Finalised Page