க. கைலாசபதி

From Tamil Wiki
Revision as of 06:55, 1 March 2023 by Ramya (talk | contribs)

க. கைலாசபதி (ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், பேராசிரியர், ஒப்பியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

க. கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் இளையதம்பி, தில்லைநாயகி நாகமுத்து இணையருக்கு ஏப்ரல் 5, 1933-ல் பிறந்தார். தந்தை மலேசியாவில் பணிபுரிந்தார். ஆரம்பக் கல்வியை கோலாலம்பூரில் பயின்றார். 1946-ல் இலங்கை வந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடை நிலைக்கல்வி கற்றார். கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர் நிலைக்கல்வி பயின்றார்.

1953-57இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழும் மேலைத் தேய வரலாறும் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோர் இவரின் ஆசிரியர்கள். பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனின் வழிகாட்டுதலில் ”தமிழ் வீரயுகக் கவிதை” (Tamil Heroic Poetry) என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மூலம் இந்நூலை வெளியிட்டார்.

ஆசிரியப்பணி

1966-ல் இலங்கை திரும்பி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1969-ல் கொழும்பு பல்கலைக்கழக்த்தில் இடமாற்றம் பெற்றார். 1974-ல் இலங்கைப் பல்கலைக்கழக வித்தியாலங்கார பலகலைக்கழகத்தில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவரானார். 1977 வரை இப்பதவியில் இருந்தார். 1974-ல் இலங்கைப்பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம் உருவான போது அதன் முதல் தலைவரானார். அவ்வளாகத்தின் தமிப்பேராசிரியர் பணியையும் ஏற்றார். யாழ் பல்கலைக்கழகம் தனித்துவமாக உருவான போது அதன் கலைப்பீடாதிபதியாக ஆனார்.

இதழியல்

கொழும்பில் "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். 1957-ல் இந்நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனில் துணை ஆசிரியரானார். 1958-ல் பிரதம ஆசிரியராக ஆனார். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய ஆக்கங்கள், ஈழத்து மண் சார்ந்த எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படைப்புகளை பிரசுரம் செய்தார். 1961 வரை தினகரனில் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் ஈடுபட்டார். இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் வழிகாட்டியாக இருந்தார்.


இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகள் சார்ந்த நூல்களை எழுதினார். 1982-ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பு. "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.

மறைவு

க. கைலாசபதி யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது உடல் நலக் குறைவு காரணமாக தன் நாற்பத்தி ஒன்பதாவது வயதில் டிசம்பர் 6, 1982-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966)
  • தமிழ் நாவல் இலக்கியம் (1968)
  • ஒப்பியல் இலக்கியம் (1969)
  • அடியும் முடியும் (1970)
  • ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்) (1971)
  • இலக்கியமும் திறனாய்வும் (1976)
  • கவிதை நயம்(இ.முருகயனுடன்) (1976)
  • சமூகவியலும் இலக்கியமும் (1979)
  • மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து) (1979)
  • நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் (1980)
  • திறனாய்வுப் பிரச்சினைகள் (1980)
  • பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் (1980)
  • இலக்கியச் சிந்தனைகள் (1983)
  • பாரதி ஆய்வுகள் (1984)
  • ஈழத்து இலக்கிய முன்னோடிகள் (1986)
  • இரு மகாகவிகள் (1987)
  • சர்வதேச அரசியல் நிகழ்வுகள் (1979-1982)
ஆங்கிலம்
  • Tamil Heroic Poetry,Oxford,1968
  • The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist
  • The Relation of Tamil and Western Literatures
  • On Art and Literature (1986)
  • On Bharathi (1987)
  • Tamil (co-author A.Shanmugadas)

உசாத்துணை