being created

மாலன்

From Tamil Wiki

மாலன் (மாலன் நாராயணன்) (செப்டம்பர் 16, 1950) எழுத்தாளர், இதழாசிரியர், ஊடகவியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

மாலன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வி.எஸ்.வி. மணி, லலிதா இணையருக்கு செப்டம்பர் 16, 1950-ல் பிறந்தார். அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றார்.

தனி வாழ்க்கை

மாலன் சரஸ்வதியைத் திருமணம் செய்து கொண்டார். மகன் சுகன். இந்தியப் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் ஆகியோருடன் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார். கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்காற்றினார்.

இதழியல்

சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். புதிய தலைமுறை இதழின் ஆசிரியராக இருந்தார்.இந்தியா டுடே(தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதிய தலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். கணையாழி ஆசிரியர் குழுவிலும் சிறிது காலம் பங்களித்தார்.

திசைகள்

1981 ஜனவரியில் ’திசைகள்’ இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அச்சில் வார இதழாக வந்தது. 2003ல் இணையத்தில் மின் இதழாக வந்தது. ஒருங்குறி எழுத்துருவில் அமைந்த முதல் தமிழ் இணைய இதழாக இருந்தது.

அக்ஷர

அக்ஷர 24 மொழிகளில் வெளியாகும் இணைய இதழ்.

இலக்கிய வாழ்க்கை

எழுத்து இதழில் எழுதிய கவிதைகள் மூலம் தன் பதினாறாவது வயதில் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1970-1985 ஆண்டுகளில் இலக்கியச் சிற்றிதழ்களில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதினார். இந்தியாவில் அவசர நிலைக்கு எதிராக இவர் எழுதிய கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, டஃப்ட் பல்கலைக் கழக அமெரிக்கப் பேராசிரியர் ஆலிவர் பெரி தொகுத்த ஒரு நூலில் (Voices of Emergency) இடம் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள் சீனம், மலாய், பிரன்ச் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் ஆங்கிலம், பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, டெக்கான் ஹெரால்ட், இந்தியா டுடே (மலையாளம்), மாத்ருபூமி (மலையாளம்), விபுலா(இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகின. கல்கத்தாவில் உள்ள எழுத்தாளர்கள் பயிலரங்கு (Writers Workshop) தனது ஆங்கிலத் தொகுப்பில் இவரது கதைகளை வெளியிட்டது.

சிறப்புகள்

இவரது சிறுகதைகள் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் சமகால இலக்கியத்திற்கான நூலாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதுநிலை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவரது படைப்புக்கள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் நான்கு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

அமைப்புப் பணிகள்

  • சாகித்ய அகாதெமியின் பொதுக் குழுவிலும், லலித் கலா அகாதெமி, ஆகியவற்றின் பொதுக் குழு உறுப்பினர்.
  • ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையின் உறுப்பினர்.
  • சாகிததிய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சிங்கப்பூர் அரசு நிறுவனமான சிங்கப்பூர் தேசியக் கலைமன்றம் ஆதரவில் நடைபெறும் எழுத்தாளர் வார நிகழ்ச்சிக்கும், தேசிய நூலக வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட்டார்.

விருதுகள்

  • பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017)
  • தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019)
  • கண்ணதாசன் விருது
  • கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றவர்.
  • சிங்கப்பூர் தேசிய நூலகம் அளிக்கும் லீ காங்சியான் ஆய்வுக் கொடையைப் பெற்ற முதல் இந்தியரும் தமிழரும் இவரே.
  • 2021ஆம் ஆண்டின் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது (ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் நூல் சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய "குரோனிக்கல் ஆஃப் கார்பசு பேரியர்" என்னும் ஆங்கிலப் புதினத்தை மொழிபெயர்த்து எழுதப்பட்டது.)

நூல்கள் பட்டியல்

கவிதை
  • மனம் எனும் வனம்
  • புனைவற்ற புனைவு
  • உயிரே உயிரே
நெடுங்கதை
  • நந்தலாலா
  • வழிதவறிய வண்ணத்துப்பூச்சிகள்; 1980 சூலை; (மோனா இதழ்)
  • ஜனகனமண
  • எம்.எஸ்.
கட்டுரைகள்
  • நேற்றின் நிழல்
  • என் ஜன்னலுக்கு வெளியே (இரு பாகங்கள்); புதியதலைமுறை வெளியீடு
  • காலத்தின் குரல்; புதியதலைமுறை வெளியீடு
  • கடைசி பக்கம்
  • சொல்லாத சொல்
  • இலக்கிய ஆய்வு
  • புரட்சிக்காரர்கள் நடுவே
  • கயல் பருகிய கடல்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.