அம்மானை (சிற்றிலக்கிய வகை)
அம்மானை என்பது பண்டைத் தமிழ் மகளிர் விளையாட்டுகளின் அடிப்படையில் அமைந்த சிற்றிலக்கியம். இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுவரை உள்ள அரிவைப் பருவத்துப் பெண்களுக்குரிய விளையாட்டான அம்மானையை ஆடுகையில் பாடப்படுபவை அம்மானைப் பாடல்கள். பெண்களின் நுண்ணறிவு, சமயோசிதம்,வாக்கு வன்மையையும், பாடல்களைப் புனைந்து, இசையோடு பாடும் ஆற்றலையும், கண், கைகள், ஒத்திசையையும் வளர்க்கும் விளையாட்டு. பெண் குழந்தைகளைப் பாடும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் 'அம்மானைப்பருவம்' இடம்பெறுகிறது.
அம்மானை விளையாட்டு
அம்மானை இரண்டு அல்லது மூன்று பெண்கள் அம்மானைக் காய்கள் எனப்படும் மரத்தால் ஆக்கி வண்ணம் இடப்பட்ட சிறு உருண்டைகளை மேலே எறிந்து அவை கீழே விழுங்கால் அவற்றில் ஒன்றைக் கழித்து அல்லது கூட்டிப் பிடிப்பதாக அமைந்த விளையாட்டு. மரக்காய்களுக்குப் பதிலாகக் கற்களையோ, மணிகளையோ பயன்படுத்துவதும் உண்டு.
இன்றும் மூன்று கல் , ஐந்து கல் (அஞ்சாம்கல்), ஏழு கற்கள்(ஏழாம்கல்) என்று கற்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து , பெண்கள் ஆடும் வழக்கம் உள்ளது. பழங்காலத்தில் இப்படி விளையாடும்போது புதிர் அல்லது விடுகதை போன்ற கேள்வி பதில் முறையில் பாடல்களைப் பாடி விளையாடியதால் இந்தப் பாடல் முறை அம்மானை என்று அழைக்கப்பட்டது.
முதல் பெண் ஒரு இறைவனையோ, பாட்டுடைத்தலைவனையோ பற்றிய ஒரு செய்தியைப் பாட்டாகக் கூறிவிட்டு, கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து ‘அம்மானை’ என்று முடிப்பார்.
இரண்டாவது பெண் , முதல் பெண் சொன்ன செய்திக்குப் பொருத்தமாக ஒரு கேள்வியைப் பாடலாகச் சொல்லி, ‘அம்மானை’ என்று முடித்து கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பாள்.
மூன்றாவது பெண் அந்தக் கேள்விக்கு பாடல் மூலம் பதில் தந்து, ‘அம்மானை’ என்று சொல்லி கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துப் பாட்டை முடிப்பாள்.
தமிழ் இலக்கியத்தில் அம்மானை
சிலப்பதிகாரம்
தமிழில் முதன் முதலில் அம்மானைப் பாடல்கள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. வாழ்த்துக் காதையில் 'அம்மானை வரி' என்ற பகுதியில் மனுநீதிச் சோழன், கரிகால் சோழன், சிபி மன்னன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகிய சோழ மன்னர்களில் புகழைப் பாடியவை.
வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த உரவோன்யார் அம்மானை?
ஓங்கரணங் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை;
சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை"
என்று தொடங்கும் ஐந்து அம்மானைப் பாடல்கள்
திருவாசகம்
அரசர்களையன்றி, இறைவன் மேல் பாடப்பட்ட முதல் அம்மானை மாணிக்கவாசகரின் 'திருவம்மானை'
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
குமரகுருபரர் (காசிக் கலம்பகம்)
கலைமதியின் கீற்றணிந்த காசியகிலேசர்
சிலைமதனைக் கண்ணழலால் செற்றனர்காண் அம்மானை
சிலைமதனைக் கண்ணழலால் செற்றனரேயாமாகில்
மலைமகட்கு பாகம் அருளுவதேன் அம்மானை
வழங்காரோ அப்பாலும் மாலானால் அம்மானை
அம்மானை இலக்கியங்கள்
‘மூவர் அம்மானை’ என்ற நூலில் (1861) பல அம்மானைப் பாடல்கள் காணப்படுகின்றன. இவை பெண்கள் அம்மானை ஆடுவதாகக் கருதியோ, அம்மானை ஆடுவதற்காகவோ புலவர்களால் இயற்றப்பட்டவையாக இருக்கலாம்.
இராமப்பையன் என்பவர் எழுதிய அம்மானைப் பாடல்களால்[1] நாயக்கர் வம்சத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது.
வீரமாமுனிவர் ‘கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை’ என்ற நூலை எழுதியுள்ளார்.
உமறுப்புலவர் மகன் கவிக்களஞ்சியப் புலவர் சையத் மீராப் புலவர் காலிப் அலியைத் தலைவனாகக்கொண்டு ‘பரத்தியர் அம்மானை’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.
உசாத்துணை
- பெண்கள் விளையாடும் மூவர் அம்மானை-தினமணி-மார்ச் 2019
- அம்மானைப் பாடல்கள்
- பாடுதுங்காண் அம்மானை-மீனாக்ஷி பாலகணேஷ், சொல்வனம் நவம்பர் 2014
இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.