first review completed

சூலுக்

From Tamil Wiki
Revision as of 22:15, 23 January 2023 by Tamizhkalai (talk | contribs)
சூலுக் பழங்குடி

சூலுக் பழங்குடிகள் சபா மாநிலத்தில் வாழும் பழங்குடி மக்கள். சபா மாநிலத்தின் பூர்வக்குடிகளில் ஒன்றான சூலுக் பழங்குடி மக்கள் தங்களை தவுசுக் இனத்தினர் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

இனப்பரப்பு

சூலுக் மக்கள் சபா மாநிலத்தின் சண்டாக்கான், தாவாவ், லஹாட் டத்து, செம்போர்னா, குனாக், கூடாட், கோத்தா கினாபாலு ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர்.

வரலாற்றுப் பின்னணி

சூலுக் பழங்குடி

சபா முன்னர் வட போர்னியோ என அறியப்பட்டது. சுலு சுல்தானிய ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக சபா மாநிலம் கருதப்பட்டது. வட போர்னியோ பகுதியை ஆங்கிலேயர்களிடம் குத்தகைக்கு சுலு ஆட்சியாளர்கள் கையளித்தனர். சூலு ஆட்சியாளர்களின் குடிகளாகக் கருதப்பட்ட சூலுக் மக்கள் பின்னர் சபா மாநிலத்திலும் பரவி வாழத் தொடங்கினர்.

மொழி

சூலுக் மக்கள் தவுசுக் மொழியைப் பேசுகின்றனர். தவுசுக் மொழி 'ஆஸ்திரோனேசுயன்'(Austronesian) மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தவுசுக் மொழி மலாய் மொழிக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கிறது. தவுசுக் மொழியில் அரபு மொழிச் சொற்களுடன் பிலிப்பைன்ஸின் மிண்டானாவ் பகுதியில் வாழும் மற்ற இன மக்களின் மொழிச்சொற்களும் பெருமளவில் கலந்திருக்கின்றன. சபாவில் சூலு சுல்தான்களின் ஆட்சிக் காலந்தொட்டே சூலுக் மக்கள் தவுசுக் மொழியைப் பேசுகின்றனர்.

சமயம்

சூலுக் மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியச் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

பண்பாடு

சூலுக் மக்கள் பெரும்பாலும் மலாய் மக்களின் பண்பாட்டை ஒத்த வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கின்றனர். சூலுக் மக்கள் சபா மாநிலத்தில் வாழும் மற்ற இனத்தவர்களான திடுங், இபான், பஞ்சார், ஜாவா ஆகிய மக்களுடன் கலப்பு மணம் புரிந்திருக்கின்றனர். பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவின் கலிமந்தான் தீவுப்பகுதியிலும் சூலுக் மக்கள் வாழ்கின்றனர். கலப்பு மணம் புரிந்து மலாய் பண்பாட்டு அடையாளங்களை ஏற்றுக் கொண்ட சபா மாநில சூலுக் மக்களிடமிருந்து மொழி, பண்பாடு ஆகிய அடிப்படையில் பிலிப்பினோ சூலுக் மக்களும் இந்தோனேசியா சூலுக் மக்களும் பெரிதும் வேறுபாடுடையவர்களாக இருக்கின்றனர்

வாழ்க்கைமுறை

சூலுக் மக்களில் பெரும்பாலானோர் மீனவர்கள. கடல் வளங்களான முத்துகள், சிப்பிகள், ஆகியவற்றைத் தேடியெடுத்து மற்ற இனத்தவரிடம் பண்டமாற்று முறையில் விற்கின்றனர். கடலுடன் நெருங்கிய தொடர்புடைய மக்களாக சூலுக் மக்கள் அமைந்திருக்கின்றனர். இதனால் அலை மக்கள் எனப் பொருள்படும் 'ஒராங் அருஸ்' என மலாய் மொழியில் சூலுக் மக்கள் அழைக்கப்படுகின்றனர்.

திருமணச்சடங்குகள்

சூலுக் பழங்குடித் திருமணம்

சூலுக் மக்கள் திருமணத்தின் போது மணமகன் பெண் வீட்டாரின் சமூக நிலைக்கேற்ப சீர் அளிக்கவேண்டும். திருமணப் பேச்சுவார்த்தையின் போது இருவீட்டாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட 'சுக்காட் உங்சுட்' என்றழைக்கப்படும் சீர்பொருட்களுடன் பணம், எருமை நெய், பூகாஸ் அரிசி, சிகா புகையிலை, பலகாரங்கள் நிரம்பிய தட்டு, நகைகள் ஆகியவை சேர்த்து அளிக்கப்படுகின்றன. சூலுக் மக்களின் திருமணம் பாக்- பாசிஹில் (மணப்பெண் பார்த்தல்), பாக்-பங்சாவா (திருமண நிச்சயதார்த்தம்) பாக் துருல் தைமா, (திருமண ஒப்புதல் சடங்கு) பாக் தியாவுன் (திருமண நாள்) ஆகிய சடங்குகளுடன் நடத்தப்படுகிறது.

பிறப்புச்சடங்குகள்

குழந்தை பிறப்பின் போது மக்திம்பாங் சடங்கினை சூலுக் மக்கள் செய்கின்றனர்.  குழந்தைக்கு எவ்வித தீதும் ஏற்படாதிருக்க கடவுளின் ஆசியை வேண்டும் சடங்காக இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. குழந்தை பிறந்து ஒரு வாரம் கழிந்தபின் இச்சடங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. குழந்தையைத் தொட்டிலில் வைத்து ஆட்டும் சடங்கு 'மக்திம்பாங் சடங்கு' எனப்படுகிறது.

கலை

டாலிங் டாலிங் நடனம்
டாலிங் டாலிங் நடனம்

பிலிப்பைன்ஸ் நாடு ஸ்பானியர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த சமயத்தில் ஸ்பானிய ராணுவ வீரர்களால் உள்ளூர் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற நடனமே 'டாலிங் டாலிங்' நடனம். காபுங் எனப்படும் தாளக்கருவியும் போலாக்-போலாக் இசைக்கருவியும் 'டாலிங் டாலிங்' நடனத்தின் போது இசைக்கப்படுகிறது. இந்நடனத்தில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் பங்கேற்கின்றனர். பெண் நடனக்கலைஞர்கள் தலையணியும் வெள்ளியிலும் செப்பிலுமான பொய்நகங்களையும் அணிந்திருக்கின்றனர். திருமண நிச்சயத்தார்த்தம், திருமணம், அல் குரான் ஓதும் சடங்கு, நோன்பு பெருநாள் போன்ற சிறப்பு நாட்களின் போது இந்நடனம் ஆடப்படுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.