under review

சிற்றட்டகம்

From Tamil Wiki
Revision as of 14:41, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

சிற்றட்டகம் ஓர் மறைந்த பழந்தமிழ் இலக்கண நூல். இந்நூலின் சில செய்யுள்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. இந்நூலை சிற்றெட்டகம் என்று எஸ். வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

நூல் இருந்ததற்கான சான்றுகள்

பொ.யு. 12 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாற்கவிராச நம்பி என்பவர் இயற்றிய நம்பியகப்பொருள் என்னும் நூலின் 251-ஆம் நூற்பாவுக்கு எழுதப்பட்ட உரையில் சிற்றட்டகம் என்னும் நூலின் பாடல்கள் சில காணப்பட்டன[1]. களவியற் காரிகையிலும் சிற்றட்டகத்திலிருந்து சில பாடல்கள்மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. நம்பியகப்பொருளின் உரையாசிரியர் மயக்கத்துக்கு ஐங்குறுநூறு, கலித்தொகை, திணைமாலை நூற்றைம்பது முதலான நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தரும்போது ‘சிற்றட்டகம்’ என்னும் நூலின் பாடல்கள் என்னும் குறிப்புடன் நான்கு பாடல்களைத் தந்துள்ளார். ஐந்து திணைகளின் மேல் வரும் குறும்பாடல்கள் 100 கொண்ட நூல் ஐங்குறுநூறு. அதுபோலச் சிறுபாடல்கள் எட்டு, ஐந்து திணைக்கும் வந்த நூல் எனக் கருதி இதில் (5 X 8) 40 பாடல்கள் இருந்திருக்கவேண்டும் எனக் கருதப்படுகிறது. ஆசிரியப் பாவாலான இந்த இலக்கியப் பாடல்கள் அகப்பொருள் பற்றியவை. பாடலமைதி சங்ககாலப் பாடல்களைப் போல உள்ளதையும், பாட்டிலுள்ள சொல்லாட்சி, பாடலமைதி முதலானவற்றையும் கருத்தில் கொண்டு இந்நூல் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு நூல் எனக் கருதப்பட்டது.

உசாத்துணை

நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் : பாடநுண் பதிப்பு

அடிக்குறிப்புகள்


✅Finalised Page