சிற்றிலக்கியங்கள்

From Tamil Wiki
Revision as of 13:57, 10 February 2022 by Jeyamohan (talk | contribs)

சிற்றிலக்கியங்கள் : தமிழில் பொயு ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றிய ஓர் இலக்கிய வகை. பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், புராணங்கள் ஆகியவை அல்லாத சிறியவகை நூல்களை இவை குறிக்கின்றன.

சிற்றிலக்கியம் எனும் சொல்

சிற்றிலக்கியம் என்னும் பெயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானது. அதற்கு முன்பிருந்த பெயர் பிரபந்தங்கள். மு.அருணாச்சலம் ’பிரபந்தம் என்ற சொல் வடமொழி. செம்மையாக்கப்பட்டது என்பது இதன் பொருள்.இக்காலத்தில் இதைச் சிற்றிலக்கியம் என்று சொல்கிறோம். காப்பியங்களை பேரிலக்கியங்கள் என்று சொல்லி இதனால் பிரபந்தத்தை சிற்றிலக்கியம் என்று சொல்கின்ற மரபு புதிதாகப் படைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.’

சிற்றிலக்கிய எண்ணிக்கை

பிரபந்தங்கள் 96 என்பது பிற்காலத்துக் கணக்கு. ’தொண்ணூற்றாறு கோல பிரபந்தங்கள் கொண்ட பிரான்’ என படிக்காசுப்புலவர் தன்னை ஆதரித்த சிவந்தெழுந்த பல்லவராயன் என்னும் சிற்றரசனைப்பற்றி பொயு 1686 ல் பாடிய உலாவில் குறிப்பிட்டிருப்பதை உ.வே.சாமிநாதய்யர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அதற்கு முந்தைய சிற்றிலக்கிய இலக்கணங்களை வகுக்கும் தொன்மையான பாட்டியல் நூல்களில் அவ்வெண்ணிக்கை இல்லை என மு.அருணாசலம் சொல்கிறார்.வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி பொயு பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதில்தான் 96 பிரபந்தங்களின் எண்ணிக்கையும் பட்டியலும் வருகிறது. ஆனால் சதுரகராதி சொல்லும் சில பிரபந்த வகைகள் பிற்காலத்தைய பாட்டியல் நூல்களில் இல்லை. அவற்றில் வேறு நூல்வகைகள் குறிப்பிடப்படுகின்றன.

பிள்ளைக் கவி முதல் புராணம் ஈறாக

தொண்ணூற்றாறெனும் தொகையதான

முற்பகரியல்பு முன்னுற கிளர்க்கும்

பிரபந்த மரபியல்

என்று 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனப்படும் பிரபந்த மரபியல் 96 என்னும் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. இந்நூல் முழுமையும் சிதைந்த நிலையில் கிடைக்கின்றது

96 என்ற எண் சாத்திரங்களின் எண்ணிக்கையாக பொதுவாகச் சொல்லப்பட்டு வந்தது என்று மு.அருணாசலம் சொல்கிறார். மணிமேகலையில் பாசண்ட சாத்தன் “பண்ணாற் திறத்திற் பழுதின்றி மேம்பட்ட தொண்ணூற்றாறு வகை கோவையும் வல்லவன்” என்று சொல்கிறான். 96 என்னும் எண் முக்கியமாதலால் எழுதப்பட்ட எல்லாவகை பாடல் வகைகளையும் இணைத்து அந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது மு.அருணாச்சலம் கூற்று

தமிழ் டிஜிட்டல் லைப்ரரி பிரபந்த மரபியல். முன்னுரை. மு.அருணாச்சலம்