under review

குறிஞ்சிவேலன்

From Tamil Wiki
Revision as of 08:53, 10 February 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)
குறிஞ்சிவேலன்

குறிஞ்சிவேலன் (1964 ) தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து இலக்கியங்களை மொழிபெயர்க்கிறார். மொழிபெயர்ப்புக்காக திசை எட்டும் என்னும் சிற்றிதழை நடத்துகிறார். மொழிபெயர்ப்புக்கான நல்லி திசையெட்டும் விருதுகளை வழங்குகிறார். மொழிபெயர்ப்பாளருக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருதை பெற்றவர்.

பிறப்பு, கல்வி

குறிஞ்சிவேலனின் இயற்பெயர் செல்வராஜ். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிப்பேட்டை என்னும் ஊரில் 30 ஜூன் 1942ல் நெசவாளர் குடியில் பிறந்தார். கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்தார். 1964ல் கால்நடை ஆய்வாளராகப் பணிக்குச் சேர்ந்தார். நெய்வேலியில் வசிக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

குறிஞ்சிவேலன் இளமையிலேயே நெசவுத்தொழில் செய்து அவ்வருமானத்தில் நூல்களை வாங்கிப் படித்தார். சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த செம்மீன் (தகழி சிவசங்கரப் பிள்ளை) நாவல் வழியாக மொழியாக்கத்தில் ஆர்வம் கொண்டார். தொழிலுக்காக கேரள எல்லையோர சிற்றூர்களில் பணியாற்றியபோது மலையாளம் எழுதவும் படிக்கவும் கற்றார். மலையாளத்தில் வெளிவந்த ஒரு விமர்சனக்கட்டுரையை முதல் மொழிபெயர்ப்புப்பணியாகச் செய்தார். அது தீபம் இதழில் வெளிவந்தது.

நந்தனார் (பி.சி.கோபாலன்) மலையாளத்தில் எழுதிய பலியாடுகள் என்னும் கதையை மொழியாக்கம் செய்தார். அது கண்ணதாசன் இதழில் வெளிவந்தது. நா.பார்த்தசாரதியின் அறிமுகம் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபடச்செய்தது. மீனாட்சிமைந்தன் ,ஏ.எஸ்.ராஜூ, செல்வராஜ் ஆகிய பெயர்களில் மொழியாக்கங்கள் வெளியாயின. நா.பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழில் எழுதியபோது குறிஞ்சிவேலன் என்று பெயர்சூட்டிக்கொண்டார்

ஏ.எஸ்.நாயர் மலையாளத்தில் குங்குமம் இதழில் மலையாள எழுத்தாளர்களை பேட்டி கண்டு எழுதிவந்தார். ’அவற்றை தமிழில் முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்’ என்ற பெயரில் 1976 பிப்ரவரியில் தீபம் இதழ் முதல் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.அவை பின்னர் அதே பேரில் நூல்வடிவம் கொண்டன. தீபம் இதழிலேயே மலையாற்றூர் ராமகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய ஐந்து செண்ட் நிலம், சல்லிவேர்கள் ஆகிய நாவல்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

இதழியல்

குறிஞ்சிவேலன் 2003ல் ’திசை எட்டும்’ என்னும் சிற்றிதழை மொழியாக்கப் படைப்புகளுக்காக வெளியிடத் தொடங்கினார். திசை எட்டும் இது வரை 67 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழையும் சிறப்பிதழாகக் கொண்டுவருகிறார். நோபல் இலக்கியச் சிறப்பிதழ், புக்கர் இலக்கியச் சிறப்பிதழ், ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ், சரவதேச இலக்கியச் சிறப்பிதழ், ஸ்பானிஷ் இலக்கியச் சிறப்பிதழ், உலக அறிவியல் இலக்கியச் சிறப்பிதழ், உலக வாய்மொழி இலக்கியச் சிறப்பிதழ், ஸ்காண்டினேவியன் இலக்கியச் சிறப்பிதழ், கொரிய இலக்கியச் சிறப்பிதழ், அரபு இலக்கியச் சிறப்பிதழ் என பல சிறப்பிதழ்கள் வெளிவந்துள்ளன. தெலுங்கு, இந்திய ஆங்கிலம், கொங்கணி, குஜராத்தி, வடகிழக்கு மொழிகள், பஞ்சாபி மொழி இலக்கியங்களுக்கான சிறப்பிதழ்களையும் திசை எட்டும் வெளியிட்டுள்ளது.

குறிஞ்சிவேலன் ‘Tranfire‘ என்ற பெயரில் ஆங்கில மொழியாக்க காலாண்டிதழ் ஒன்றை 2011 ஆகஸ்டில் இருந்து வெளியிட்டு வருகிறார்

அமைப்புப்பணிகள்

2004 முதல் ‘நல்லி -திசை எட்டும்’ என்னும் மொழியாக்க விருதை உருவாக்கி மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்க ஆரம்பித்தார். இதுவரை 146 மொழிபெயர்ப்பாளர்களுக்கு பரிசுத்தொகையும் பட்டயமும் வழங்கியிருக்கிறார். நல்லி குப்புசாமி செட்டி நிதியுதவியுடன் இந்த விருது அளிக்கப்படுகிறது. முதன் முதலாக கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்திக்கு (நீலகண்ட பறவையைத் தேடி நாவலை மொழியாக்கம் செய்தவர்) விருது வழங்கப்பட்டது.

விருதுகள்

  • கேந்த்ரிய சாகித்ய அக்காதமி விருது-1994 (எஸ்.கே.பொற்றேக்காட்டின் விஷக்கன்னி நாவல் மொழியாக்கம்)
  • தஞ்சை தமிழ்ப்பல்கலை விருது, திசை எட்டும் இலக்கிய இதழுக்காக
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது (எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாமிடம்)
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது (பாண்டவபுரம்)

நூல்கள்

குறிஞ்சிவேலன் 38 நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்

  1. ஐந்து சென்ட் நிலம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1982,
  2. சல்லி வேர்கள் – மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1988,
  3. முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள் பாகம் 1-வி.பி.சி. நாயர்- 1990,
  4. காட்டு வெளியினிலே- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1991,
  5. விஷக்கன்னி-எஸ்.கே.பொற்றெகாட் – 1991,
  6. சிதைந்த சிற்பங்கள்-கே.வேணுகோபால் – 1992,
  7. ஒரு நெஞ்சத்தின் ஓலம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1993,
  8. நான்கு முகங்கள்-பலர் -1994,
  9. இரண்டு ஜென்மங்கள்-தகழி – 1994,
  10. தகழி- ஐயப்பபணிக்கர் – 1994,
  11. கண்ணாடியில் தோன்றும் உருவங்கள்-தகழி -1994,
  12. பாரதப்புழையின் மக்கள்- எஸ்.கே.பொற்றெகாட் -1994,
  13. ஆறாம் விரல்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1995,
  14. நெட்டுர் மடம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1995,
  15. முனைப்பு-கே.வேணுகோபால் -1996,
  16. அமிர்தம் தேடி- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1996,
  17. மற்போர்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1997,
  18. தேர்ந்தெடுத்த கதைகள்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1997,
  19. இப்போது பனிக்காலம்-கிரேசி -1997,
  20. மனமே மாணிக்கம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1998
  21. பாண்டவபுரம்-சேது – 1999,
  22. இரண்டாம் இடம்- எம்,டி,வாசுதேவன் நாயர் -2000
  23. வானப்பிரஸ்தம்-எம்,டி,வாசுதேவன் நாயர் -2001,
  24. எழுத்துமேதைகளின் முதல் கதைகள்-பலர் -2002,
  25. பஷீர்-இ.எம்.அஷ்ரப் -2003,
  26. முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள் பாகம் 2- வி.பி.சி.நாயர் -2003,
  27. ஆல்ஃபா-டி.டி.ராமகிருஷ்ணன் – 2005,
  28. சூஃபி சொன்ன கதை-கே.பி.ராமனுண்ணி -2006,
  29. காலம் முழுதும் கலை- இ.எம்.அஷ்ரப் -2006,
  30. பாண்டவபுரம்-மிமி -சேது – 2006,
  31. ராஜவீதி – பலர் – 2007
  32. கோவர்தனின் பயணங்கள்- ஆனந்த்- 2012,
  33. அடையாளங்கள்-சேது – (2013),
  34. ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா-டி.டி.ராமகிருஷ்ணன் – (2014),
  35. பிறை – சி.எஸ்.சந்திரிகா – (2015)
  36. மலையாற்றூர் இராமகிருஷ்ணனின் நாவல்கள் – 2016
  37. சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி-டி.டி.ராமகிருஷ்ணன்-2018
  38. ஆறாவது பெண் -சேது -(அச்சில்)
  39. வாரிசுகள்-விலாசினி (அச்சில்)

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.