being created

அண்ணாத்துரை

From Tamil Wiki
Revision as of 14:48, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
hindutamil.in

அண்ணாத்துரை (செப்டம்பர் 15,1909-பிப்ரவரி 3,1969) சி.என்.அண்ணாத்துரை, அறிஞர் அண்ணா. தமிழக அரசியல்வாதி, தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியில் இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சியை நிறுவியவர். பேச்சாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

சி,என்.அண்ணாதுரையின் முழுப்பெயர் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாத்துரை.சின்னகாஞ்சிபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54-ல் உள்ள வீட்டில் செங்குந்தக் கைக்கோள முதலியார் குடியில் கைத்தறி நெசவாளர் நடராஜ முதலியார் - பங்காரு அம்மாள் இணையர் மகனாக செப்டம்பர் 15,1909- ல் (செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள்) பிறந்தார். அண்ணாத்துரையின் அன்னை பங்காரு அம்மாள் அவர் சிறுவனாக இருக்கும்போது இறந்துவிட்டதால் நடராஜ முதலியார் இராஜாமணி அம்மையாரை மறுமணம் செய்து கொண்டார். சித்தியால் வளர்க்கப்பட்டார்.

சி.என்.அண்ணாத்துரை ஐந்தாம்‌ வகுப்புவரை சின்னக்காஞ்சிபுரம் பச்சையப்பர்‌ கிளைப்‌பள்ளியில்‌ படித்தார்‌. காஞ்சிபுரம்‌ பச்சையப்பர்‌ உயர்நிலைப்‌ பள்ளியில்‌ முதல்‌ படிவம்‌ முதல்‌ ஆறாம்‌ படிவம்‌ வரை கல்வி கற்றார்‌. பள்ளி இறுதி வகுப்பில்‌ ஏற்பட்ட இரண்டு தோல்விகளுக்குப்‌ பிறகே தேர்ச்சி பெற்றார்‌.சென்னை பச்சையப்பன்‌ கல்லூரியில்‌ இன்டர்‌ முதல்‌ எம்‌.ஏ. வரை பயின்றார்‌. உயர்நிலைப்‌ பள்ளிப்‌ படிப்பு முடிந்ததும்‌ கல்லூரியில்‌ படிக்க ஆசைப்பட்டார்‌. பொருளாதாரச் சூழல் இடம்‌ கொடுக்கவில்லை. எனவே நகராட்சி அலுவலகத்தில்‌ வேலை பார்த்தார். அரசு வேலையில்‌ இருக்கும்‌ சலுகையால்‌ கல்லூரியில்‌ படிக்க வாய்ப்பு வந்தது. அதில்‌ முதல்‌ வகுப்பு மாணவராக வெற்றி பெற்றார்‌. பி.ஏ. ஆனர்ஸ்‌ படிக்க கல்லூரித்‌ தலைவர்‌ உதவினார்‌.1932-ல்‌ கல்லூரியில்‌ மாணவர்‌ சங்கச்‌ செயலாளராகவும்‌ ,ஆங்கில மாணவர்‌ கழகச்‌ செயலாளராகவும்‌, பொருளாதாரக்‌ கழகச்‌ செயலாளராகவும்‌ பணியாற்றினார்‌. 1934-ல்‌ அரசியல்‌, பொருளாதாரம்‌, சரித்திரம்‌ மூன்றிலும்‌ பி.ஏ. ஆனர்ஸ்‌ பட்டம்‌ பெற்றார்‌. 1935-ல்‌ சென்னை சட்டக்‌ கல்லூரியில்‌ சேர்ந்தும்‌ பொருளியல் நெருக்கடியால் மூன்று மாதங்களே படித்தார்‌.

தனிவாழ்க்கை

சி.என்.அண்ணாத்துரை 1930- ல்‌ இராணி அம்மையாரை மணந்தார். அவர்களுக்குக் குழந்தை இல்லை. பரிமளம்‌, இளங்கோவன்‌, கவுதமன்‌, 'இராசேந்திர சோழன்‌ (பாபு} ஆகிய நால்வரை தத்து எடுத்து வளர்த்தனர். இவர்கள் ராணி அம்மையாரின் தமக்கையின் குழந்தைகள்.

அரசியல் வாழ்க்கை

சி.என்.அண்ணாத்துரை கல்லூரியில் படிக்கையிலேயே ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஈ.வெ.ராமசாமிப் பெரியார் அப்போது நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்தார். 1935-ல்‌ கோவை செங்குந்தர்‌ இளைஞர்‌ மாநாட்டில்‌ அண்ணாத்துரை ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை முதன்‌ முதலாகச்‌ சந்தித்தார்‌. ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் குடியரசு இதழில் எழுதத் தொடங்கினார். 1939- ல்‌ குடியரசு இதழில்‌ நக்கீரன்‌ எனும்‌ புனைப்‌ பெயரில்‌ 'பெரியாரும்‌ பிறரும்‌' என்ற தலைப்பில்‌ ஈ.வெ.ராமராமிப் பெரியாரே தன் தலைவர் என கட்டுரை எழுதினார்‌. ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சாதியொழிப்பு, தனித்தமிழியக்க ஆதரவு, பகுத்தறிவுப்பார்வை ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.

நீதிக்கட்சி

அண்ணாத்துரை ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தலைமையில் நீதிக் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1936-ஆம்‌ ஆண்டில்‌ பெத்து நாயக்கன்‌ பேட்டையில்‌ நீதிக்கட்சியின்‌ சார்பாக சி.என்.அண்ணாத்துரை தேர்தலில்‌ நின்று தோற்றார்‌. நீதிக்கட்சியின்‌ செயற்குழு உறுப்பினராகவும்‌ நீதிக்கட்சிக்‌ கருத்துப்‌ பரப்பல்‌ குழு முன்னவராகவும்‌ விளங்கியுள்ளார்‌. ஆகஸ்டு 15, 1937-ல் திருச்சி மாவட்டம்‌ முசிரி வட்டத்தில்‌ தன்மான இயக்க மாநாட்டில் தலைமை வகித்துப்‌ பேருரையாற்றினார்‌. 1939-இல்‌ நீதிக்கட்சியின்‌ பொதுச்‌ செயலாளர்‌ ஆனார்‌.

திராவிடர் கழகம்

ஆகஸ்லட் 24, 1940-ல்‌ திருவாரூர்‌ நீதிக்கட்சி மாநில மாநாட்டில்‌ திராவிடநாடு பிரிவினைத்‌ தீர்மானத்தை வழி மொழிந்தார்‌. 1944-இல்‌ நீதிக்கட்சியைத்‌ 'திராவிட கழகமாக" மாற்றத்‌ தீர்மானம்‌ கொண்டு வந்தார்‌.

திராவிட முன்னேற்றக் கழகம்

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதை துக்கநாளாக கொண்டாடவேண்டும் என்று ஈ.வெ.ராமசாமிப் பெரியார் சொன்னதை சி.என்.அண்ணாத்துரை ஏற்கவில்லை. அது கருத்துவேறுபாடாக மாறிக்கொண்டிருக்கையில் ஜூலை 9,1949- அன்று ஈவெ.ராமசாமிப் பெரியார்‌ மணியம்மையை இரண்டாவது திருமணம்‌ செய்து கொண்டபோது அறிக்கை வழியாக எதிர்ப்பு தெரிவித்தார். ஈ.வெ.ராமசாமிப் பெரியார் அவர்மேல் கடுமையான தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்தமையால் ஜூலை 27,1949- அன்று ஈவெ.ராமசாமிப் பெரியார் மீது அவதூறு வழக்குத்‌ தொடர்ந்தார்‌.

செப்டெம்பர் 17,1949-ல் திராவிடர் கழக மையச்செயற்குழுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. கே.கே. நீலமேகம்‌ தலைமை தாங்கினார்‌. அண்ணாத்துரை அறிவுரைக்கேற்ப அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. அதன்‌ மூலம்‌ 'திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌' என்னும் புது அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அண்ணாத்துரை அதன் பொதுச்‌ செயலாளராக்கப்பட்டார்‌. அன்று மாலை இராயபுரம்‌ ராபின்சன்‌ பூங்காவில்‌ திராவிட முன்னேற்றக் கழக துவக்க விழா தொடங்கப்பட்டது.

இந்தி எதிர்ப்பு

1926-ல் இந்தியத்‌ தேசிய காங்கிரஸ் இந்தி இந்தியாவின்‌ பொது மொழி என்று அறிவித்தது. ஈ.வெ.ராமசாமிப் பெரியார்‌ அதை எதிர்த்தார். 1937-ஆம்‌ ஆண்டு ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது இந்தியைப்‌ பள்ளிக்‌ கூடங்களில்‌ கட்டாயப்‌ பாடமாக்கினார்‌. அதை எதிர்த்து ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தலைமையில் சி.என்.அண்ணாத்துரை போராடினார். செப்டெம்பர் 26,1938- அன்று நான்கு மாத வெறுங்காவல்‌ தண்டனையைப்‌ பெற்றார்‌. 1940-ல் ராஜகோபாலாச்சாரியார் அந்த அரசாணையை திரும்பப் பெற்றார்.

மே,1946-ல் கட்டாய இந்தி எதிர்ப்புப்‌ படை முதல்‌ தளபதியாக நியமிக்கப்பட்டார்‌. 1946 ஜூலை 17 -ல்‌ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச்‌ சிறை தண்டனை அடைந்தார்‌. ஆகஸ்ட்‌,1952-ல் இந்தி எதிர்ப்பு அறப்போரை ஒட்டி புகை வண்டி நிலையங்கள்‌ உள்ளிட்ட மைய அரசு அலுவலகங்களின்‌ பெயர்‌ பலகைகளில்‌ இருந்த இந்தி எழுத்துகளை அழித்தார்‌.

ஜனவரி 26,1965- முதல்‌ இந்தியாவின்‌ ஒரே ஆட்சிமொழியாக இந்தி விளங்கும்‌. ஆங்கிலம்‌ துணை ஆட்சி மொழியாக இருக்கும்‌’ என்று அரசு முடிவெடுத்தது.திராவிட முன்னேற்றக் கழகம் குடியரசு நாளை துக்க நாளகக்‌ கொண்டாட வேண்டும்‌ என்று முடிவ செய்தது. போராட்டம்‌ பெரிதாகி துப்பாக்கிச்‌ சூட்டில்‌ மாணவர்கள்‌ இறந்தனர்‌.அண்ணாத்துரையும் பிற தலைவர்களும்‌ கைது செய்யப்பட்டனர்‌.

ஜூலை 13,1953 -ல்‌ நடந்த மும்முனைப்‌ போராட்டத்தில்‌ அண்ணாத்துரை கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார்‌. செப்டெம்பர் 1,1953-இல்‌ மூன்று மாத வெறுங்காவல்‌ தண்டனை பெற்று சிறைக்குச்‌ சென்றார்‌.ஏப்ரல் 5, 1955- அன்று நெடுஞ்செழியனை பொதுச்‌செயலாளர்‌ ஆக்கினார்‌. மே 31,1958- ல்‌ ஜவகர்லால் நேருவுக்குக்‌ கறுப்புக்‌ கொடி காட்டுவது பற்றி நடைபெற இருந்த கூட்டத்தில்‌ தடையை மீறி பேசுவதற்குச்‌ சென்று கைதானார்‌. இரண்டு நாட்களுக்குப்‌ பின்‌ விடுதலை செய்யப்பட்டார்‌. ஜூலை 19,1962 -ல்‌ வேலூரில்‌ விலைவாசி உயர்வு போராட்டத்தில்‌ கலந்ததால்‌ கைதாகி தன்‌ வழக்குக்குத்‌ தானே வாதாடினார்‌. அப்பொழுது அவர்‌ 10- வாரக்‌ கடுங்காவல்‌ தண்டனை பெற்று அக்டோபர் 24, 1962 -ல்‌ விடுதலை செய்யப்பட்டார்‌.

முதலமைச்சர்‌

சி.என் அண்ணாத்துரை 1967-ஆம்‌ ஆண்டு மார்ச்சு மாதம்‌ 6-ம்‌ தேதி தமிழகத்தின் முதலமைச்சர்‌ ஆனார்‌. தி.மு.க. 138- சட்டமன்றத்‌ தொகுதிகளில்‌ வென்றது. தமிழில் பதவி ஏற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.

எழுத்து,இலக்கிய வாழ்க்கை

அண்ணாத்துரையின் எழுத்துக்களை 1995-ல் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, அவரது குடும்பத்தினருக்கு ரூ 75 லட்சம் பரிவுத்தொகை வழங்கியது.

இறப்பு

அண்ணாதுரையின் இறுதி ஊர்வலம்நன்றி:ஜூனியர் விகடன்

அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது பெப்ரவரி 3, 1969- அன்று மரணமடைந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளாக சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில். இடம் பெற்றுள்ளது. இவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.