தமிழ்வாணன்

From Tamil Wiki
Revision as of 16:58, 9 February 2022 by Jeyamohan (talk | contribs)


தமிழ்வாணன் ( 22 மே 1926 -10 நவம்பர் 1977) எழுத்தாளர், இதழாளர் மற்றும் பொது ஆளுமை. சிறுவர்களுக்கான இதழாக தொடங்கப்பட்டு முதிரா இளைஞர்களுக்கான பொதுஅறிவு இதழாக நடத்தப்பட்ட கல்கண்டு இதழின் ஆசிரியர். பல்துறை வித்தகர் என தன்னை அறிவித்துக்கொண்டு அனைத்து துறைகளைப் பற்றியும் அடிப்படைத்தகவல்களை எழுதினார். துப்பறியும் கதைகளையும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

தமிழ்வாணனின் இயற்பெயர் இராமநாதன் செட்டியார். தமிழ்நாட்டின் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். தேவகோட்டையில் பள்ளி இறுதி வரை கல்விகற்றார். திருச்சியில் பட்டப்படிப்பை முடித்தார். தமிழ்வாணனின் தந்தை லெட்சுமணன் செட்டியாரும் இலக்கிய வாசிப்பு கொண்டவர். அன்று தேவகோட்டையில் நகரத்தார் பலர் பதிப்பாளராகவும் விளங்கினர். ஆகவே இளமையிலேயே இலக்கிய அறிமுகம் உருவாகியது

தனிவாழ்க்கை

தமிழ்வாணனின் மனைவி பெயர் மணிமேகலை. அவருக்கு இரண்டு மகன்கள். லெட்சுமணன் (லெனா தமிழ்வாணன்) ரவி தமிழ்வாணன். லெனா தமிழ்வாணன் அவருக்கு பின் அவர் ஆசிரியராக இருந்த கல்கண்டு இதழின் ஆசிரியரானார். ரவி தமிழ்வாணன் மணிமேகலை பிரசுரம் நிறுவனத்தை நடத்திவருகிறார்.

இதழியல் வாழ்க்கை

வல்லிக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரின் ‘கிராம ஊழியன் என்னும் இதழில் தமிழ்வாணன் 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் செட்டிநாட்டுக்காரரும் ‘சக்தி’ என்ற மாத இதழை வெளியிட்டு வந்தவருமான வை.கோவிந்தன் தொடங்கிய ’அணில்’ என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதில் ’துணிவே துணை’ என்ற சொற்றொடரை குறிக்கோளுரையாக அறிமுகப்படுத்தினார்.இக்காலகட்டத்தில் சக்தி இதழில் பணியாற்றிய ரா.கி.ரங்கராஜன் கண்ணதாசன் போன்றவர்களிடம் அணுக்கமான உறவு உருவாகியது.

தனது பள்ளித் தோழரான வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து ’ஜில்ஜில் பதிப்பகம்’ என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு ’சிரிக்காதே!’. அதில் ‘அணில் அண்ணா’ என்ற பெயரில் சிறு செய்திகளை எளிமையாக எழுதினார். பின்னாளில் அதுவே கல்கண்டு இதழின் பாணியாக மாறியது. ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். ’அல்வாத் துண்டு’, ’சுட்டுத் தள்ளு’, ’பயமா இருக்கே’ என்ற பல தலைப்புகளில் சிறுவர்களுக்கான நூல்களை எழுதினார். அணில் இதழிலும் பின்னர் ஜில்ஜில் பிரசுரத்திலும் இவர் உருவாக்கிய ‘கத்தரிக்காய்’ என்னும் சிறுவர்களுக்கான துப்பறியும் கதாபாத்திரம் புகழ்பெற்றது.

தமிழ்வாணன் மதர் இந்தியா என்னும் இதழை நடத்திய பாபுராவ் பட்டேலின் ரசிகர். அவரை முன்மாதிரியாகக் கொண்டு கல்கண்டு ஆசிரியராக பொறுப்பேற்ற பிறகு தன்னை பல்துறை வித்தகர் (Master Of All Subjects) என அறிவித்துக்கொண்டார். கறுப்புக்கண்ணாடியும் தொப்பியும் கோட்-சூட் உடையுமாக மட்டுமே வெளிப்பட்டார். அவருடைய அடையாளமாகவே கறுப்புக்கண்ணாடியும் தொப்பியும் மாறின. அவை இளைஞர் நடுவே ஈர்ப்பை உருவாக்கின. கல்கண்டு இதழில் அனைத்து துறைகளைப் பற்றியும் அடிப்படைச் செய்திகளை சுருக்கமாக வெளியிட்டார். வேடிக்கையும், நையாண்டியும், எளிய தகவல்களும் கொண்ட தமிழ்வாணன் பதில்கள் கல்கண்டு இதழில் புகழ்பெற்றிருந்தது.

தமிழ்வாணன் துப்பறியும் நாவல்களை எழுதினார். அவற்றில் சங்கர்லால் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தார். பின்னர் தமிழ்வாணன் என்னும் துப்பறியும் கதாபாத்திரம் அறிமுகமாகியது. தமிழ்வாணனின் துப்பறியும் கதைகள் எளிமையான ஆனால் தூயதமிழில், சிறிய சொற்றொடர்களும் சிறிய பத்திகளுமாக தொடக்கநிலை வாசகர்கள் வாசிப்பதற்குரியவை. குற்றங்களும் சரி அவற்றை கண்டுபிடிக்கும் முறைகளும் சரி எளிமையாக, அறிவியல் அறியாதோரும் புரிந்துகொள்ளும்படி அமைந்திருக்கும்..

கல்கண்டு வார இதழ்

குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி. அண்ணாமலை கல்கண்டு என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். ’துணிவே துணை’ என்ற முகப்பு வரியுடன் கல்கண்டு சிறுவர் இதழாக சிலகாலம் வெளிவந்தபின் முதிரா இளைஞர்களுக்கான இதழாக ஆகியது.

மணிமேகலை பிரசுரம்

தமிழ்வாணன் தன் மனைவிபேரில் மணிமேகலை பிரசுரத்தை தொடங்கி தன் நூல்களை வெளியிட்டார். மணிமேகலை பிரசுரம் பலதுறைகளில் பயன்பாட்டு நூல்களையே முதன்மையாக வெளியிட்டது. ‘தேனீ வளர்ப்பது எப்படி?’ முதல் ‘தென்னை வளர்ப்பது எப்படி?’ வரை பரந்துபட்ட தலைப்புக்களில் நூல்களை வெளியிட்டது. பெரும்பாலும் அவற்றை அவரே வெவ்வேறு ஆங்கில நூல்களைத் தழுவி எழுதினார். தமிழில் சுயமுன்னேற்ற இதழ்களுக்கு முன்னோடியாக அமைந்த நூல்களையும் அவர் எழுத மணிமேகலை பிரசுரம் வெளியிட்டது.

வேறு துறைகள்

  • "தமிழ்ப் பற்பொடி" என்ற பெயரில் பற்பொடியை தயாரித்து விற்பனை செய்தார்.
  • தெலுங்கில் வெளிவந்த திரைப்படங்கள் இரண்டை பிள்ளைப்பாசம், துடிக்கும் துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.
  • காதலிக்க வாங்க என்ற தமிழ்த் திரைப்படத்தை தானே கதை, வசனம் எழுதித் தயாரித்து வெளியிட்டார்.

உசாத்துணை