பௌத்தமும் தமிழும்

From Tamil Wiki
Revision as of 20:04, 14 December 2022 by Jeyamohan (talk | contribs)

பௌத்தமும் தமிழும் ( 1940) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ஆய்வுநூல். தமிழிலக்கியத்திலும் பண்பாட்டிலும் பௌத்த மதம் ஆற்றிய பங்களிப்பு பற்றிய முன்னோடி ஆய்வுநூல்

எழுத்து, வெளியீடு

மயிலை சீனி.வேங்கடசாமி 5 ஜனவரி 1940 ல் இந்நூலை எழுதினார். இதை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. இந்நூலை தன் ஆசிரியரான ச.த.சற்குணருக்கு மயிலை சீனி வேங்கடசாமி காணிக்கையாக்கினார். இந்நூலின் இரண்டாம் பதிப்புக்கு சிங்கள பௌத்த அறிஞ்சர் ஏ.டி.எஸ்..நி.புஞ்சிஹோவா அணிந்துரை வழங்கினார். மயிலை சீனி.வேங்கடசாமி கூவம் ஆற்றங்கரையில் கண்டுபிடித்த புத்தரின் சிலை இந்நூலின் முகப்பில் உள்ளது.

உள்ளடக்கம்

மயிலை சீனி.வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் நூலில் புத்தரின் வரலாறு, பௌத்த மதக்கோட்பாடுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்கிறார். தமிழகத்திலிருந்த பௌத்த ஆலயங்கள், பௌத்த கட்டிடக் கலை ஆகியவற்றை விளக்குகிறார். சைவம் வைணவம் ஆகியவற்றுக்கும் பௌத்ததிற்குமான உறவு, பௌத்த போதிசத்வர்கள் சாஸ்தா அல்லது ஐயனார் என்ற பெயரில் இந்துமதத்திற்குள் நுழைந்தது, புத்தர் இந்து மதத்திற்குள் ஏற்கப்பட்டமை, பௌத்த நாட்டுப்புற தெய்வங்கள், பௌத்த அறம் ஆகியவற்றை இந்நூல் ஆவணப்படுத்துகிறது.

இலக்கிய இடம்

தமிழக இலக்கிய வரலாறும் பண்பாட்டு வரலாறும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த தொடக்க காலத்தில் பௌத்த மதத்திற்கு போதிய கவனம் அளிக்கப்படவில்லை. சமண, பௌத்த மதங்கள் நிலவிய களப்பிரர் காலம் இருண்டகாலம் என்னும் நம்பிக்கை நிலவியது. இந்நூல் அந்த முடிவுகளை உடைத்து தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் பௌத்தம் அளித்த பங்களிப்பை நிறுவிய முன்னோடி நூல்

உசாத்துணை