சூர்யகாந்தன்

From Tamil Wiki
Revision as of 11:43, 11 November 2022 by ASN (talk | contribs) (Para Added; Book List Added: Images Added)
எழுத்தாளர் சூர்யகாந்தன்

சூர்யகாந்தன் (மருதாசலம்; பிறப்பு:  ஜூலை 17, 1955) கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், வானொலி நிலைய அறிவிப்பாளர், பத்திரிகையாளர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார். கொங்கு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் ஆவணப்படுத்தி வருகிறார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

பிறப்பு, கல்வி

சூர்யகாந்தனின் இயற்பெயர் மருதாசலம். இவர், கோவையைச் சேர்ந்த ராமசெட்டிப்பாளையத்தில், ஜூலை 17, 1955 அன்று மாரப்பக்கவுண்டர்-சின்னம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். உள்ளூரில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்கல்வியை பேரூர் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் பள்ளியில் படித்தார். கோவை அரசுக் கலைக்கல்லூரியில் பி.யு.சி. மற்றும்  இளங்கலை புவியியல் பயின்றார். தமிழார்வத்தால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் படித்தார். ‘கவிதைகள்’ பற்றி ஆய்வு செய்து ‘ஆய்வியல் நிறைஞர்’ (எம்.பில்) பட்டம் பெற்றார். ‘தற்கால இலக்கியத்தில் நாவல்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

எழுத்தாளர் சூர்யகாந்தன் (படம் நன்றி: எழுத்தாளர், பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன்)

தனி வாழ்க்கை

சிறிது காலம் இதழியலாளராகப் பணியாற்றிய சூர்யகாந்தன், பின் கோவை ‘ரெயின்போ’ பண்பலை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து  கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி கண்ணம்மா. மகன் சரவணக்குமார். மகள்கள் திவ்யபாரதி, சுவேதா.

இலக்கிய வாழ்க்கை

சூர்யகாந்தனின் கல்லூரிக் காலத்தில் அறிமுகமான தீபம், தாமரை, வானம்பாடி போன்ற இதழ்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன. சூர்யதீபனின் ‘கனல் மணக்கும் பூக்கள்’ என்ற முதல் கவிதை, 1973 அக்டோபரில்,  கோவை ஈஸ்வரன் நடத்தி வந்த ‘மனிதன்’ இதழில் வெளியானது. தொடர்ந்து தாமரை, வானம்பாடி, தீபம், நீலக்குயில், மகாநதி, சிவந்தச் சிந்தனை, புதிய பொன்னி, மலர்ச்சி, வேள்வி போன்ற இதழ்களில் பல கவிதைகளை எழுதினார். கவிஞர் மு.மேத்தாவின் ஊக்குவிப்பில் சூர்யகாந்தனின் கவிதைகள் தொகுக்கப்பட்டு, ‘சிவப்புநிலா’ என்ற பெயரில் நூலாக வெளியானது. கவிஞர் மீராவின் அகரம் பதிப்பகம் அதனை வெளியிட்டது.

சூர்யகாந்தனின் முதல் சிறுகதை ‘தண்டிக்கப்படாத குற்றவாளிகள்’ 1974-ல், தாமரை இதழில் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகளும் கவிதைகளும் எழுதினார். அமுதசுரபி, குங்குமம், கல்கி, சுபமங்களா, புதிய பார்வை, தினமணி எனப் பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. முதல் நாவல், ‘அம்மன் பூவோடு’ 1984-ல் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எழுதினார்.  மகரந்த குமார், கடல் கொண்டான், ஆர்.எம்.சூர்யா, பர்வதா, சூரி எனப் பல புனை பெயர்களில் எழுதினார்.

மொழிபெயர்ப்புகள்

சூர்யகாந்தனை பரவலாக இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்த நாவல் ‘மானாவாரி மனிதர்கள்’. இதற்கு அகிலன் நாவல் போட்டி விருது கிடைத்தது. இதே நாவலுக்கு ‘இலக்கிய சிந்தனை' விருதும் அளிக்கப்பட்டது.  தமிழகத்தின் பல கல்லூரிகளில்  இந்நாவல் பாடமாக வைக்கப்பட்டது. இந்நாவல், ‘Men of the Red soil’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதே நாவல், ‘மாரி காரின்னு காத்திருக்குன்னு மனுசர்’ என்ற தலைப்பில் மலையாளத்திலும், ‘மேகா கீலியே தரஸ்தி லோக’ என்று ஹிந்தியிலும், ’மண்ணிண்ட மக்கள்' என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. கன்னடத்திலும், மராத்தியிலும் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. செக்கோஸ்லோவாக்கியா மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ‘பூர்வீக பூமி’ என்னும் இவரது நாவல், ‘Parents Land’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. இவரது சில சிறுகதைகள் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

பாட நூல்களும் ஆய்வுகளும்

சூர்யகாந்தனின் படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகளை ஆராய்ந்து பல மாணவர்கள், எம்.பில், முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சூரியகாந்தனின் படைப்பிலக்கியம் குறித்தத் திறனாய்வுக் கட்டுரைகளை இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

சூர்யகாந்தன் 15 நாவல்கள், 7 கட்டுரை நூல்கள், 3 கவிதைத் தொகுப்புகள், 11 சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.

இதழியல் வாழ்க்கை

சூர்யகாந்தன், ‘சோலை’, ‘தாய்’ போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். கோவையிலிருந்து 1980-களில் வெளியான  ’ஜனரஞ்சனி’ வார இதழில், துணை ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

விருதுகள்

  • அகிலன் நாவல் போட்டிப் பரிசு - ’மானவாரி மனிதர்கள்’ (நாவல்)
  • இலக்கிய சிந்தனையின் சிறந்த நாவலுக்கான விருது - ’மானவாரி மனிதர்கள்’ (நாவல்)
  • இலக்கிய வீதி விருது
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
  • அகிலன் நினைவு விருது
  • லில்லி தேவ சிகாமணி அறக்கட்டளை விருது
  • பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்ச்சான்றோர் விருது
  • உடுமலை இலக்கியப் பேரவை விருது
  • சேலம் தமிழ்ச்சங்க விருது

ஆய்வு

‘சூரியகாந்தன் நாவல்களில் நாட்டுப்புறவில் கூறுகள்’ என்ற தலைப்பில், ஆய்வாளர் ம. ராஜாத்தி செல்வக்கனி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு[1] செய்துள்ளார்.

இலக்கிய இடம்

தமிழ் இலக்கிய உலகில் விவசாயம் சார்ந்த படைப்புகளை முன் வைத்து, ‘செம்மண் இலக்கியம்’ என்ற வகைமையை உருவாக்கியவர்களில் முதன்மையானவராகச் ‘சூர்யகாந்தன்’ மதிப்பிடப்படுகிறார். கொங்கு மண்ணின் கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளை ஆவணப்படுத்தியுள்ளார். விவாசயத்தை நம்பி வாழும் எளிய கிராமத்து மக்களின் வாழ்க்கை, நகரத்தின் புதிய நாகரிக வளர்ச்சிகளால் எந்தெந்த விதத்தில் பாதிப்பைச் சந்திக்கிறது, விவசாயிகளுக்கு எந்தெந்தவிதத்தில் எல்லாம் அதனால் இழப்பு உண்டாகிறது என்பதைத் தனது படைப்புகளில் பதிவு செய்துள்ளார்.

சூர்யகாந்தனின் படைப்புகள் குறித்து, “மண்ணையும் மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர், படைப்பாளியாக அமைந்துவிட்டால், அது அவருடைய மண்ணுக்குக் கிடைத்த கொடை! மொழிக்குக் கிடைத்த பரிசு! இலக்கியத்திற்குக் கிடைத்த பேறு! அப்படிப்பட்டவராக இருக்கிறார் சூர்யகாந்தன்” என்று பாராட்டியுள்ளார், கவிஞர் புவியரசு.

சூர்யகாந்தன் புத்தகங்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • சிவப்புநிலா
  • இவர்கள் காத்திருக்கிறார்கள்
  • வீரவம்சம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • இனிப்பொறுப்பதில்லை
  • தோட்டத்தில் ஒரு வீடு
  • விடுதலைக் கிளிகள்
  • உறவுச் சிறகுகள்
  • பால்மனது
  • மண்ணின் மடியில்
  • வேட்கை
  • ரத்தப்பொழுதுகள்
  • முத்துக்கள் பத்து
  • பயணங்கள்
நாவல்கள்
  • அம்மன் பூவோடு
  • பூர்வீக பூமி
  • கிழக்குவானம்
  • கல்வாழை
  • அழியாச்சுவடு
  • எதிரெதிர் கோணங்கள்
  • ஒரு வயல்வெளியின் கதை
  • மானாவாரி மனிதர்கள்
  • முள்மலர்வேலி
  • விதைச் சோளம்
  • பிரதிபிம்பங்கள்
கட்டுரை நூல்கள்
  • கோவை மாவட்டக் கோவில்கள்
  • விருட்சமமும் விழுதும்
  • திரைசைவானில் இலக்கிய முத்திரைகள்
  • மனங்களை வரும் மயிலிறகு