being created

உமையவன்

From Tamil Wiki
Revision as of 19:59, 4 November 2022 by ASN (talk | contribs) (Para Added, Images Added)
உமையவன் (ப.இராமசாமி)
சாகித்ய அகாதமி இளம் எழுத்தாளர் சந்திப்பு, மணிப்பூர்

ப. இராமசாமி (உமையவன்: பிறப்பு - மார்ச் 15, 1990) ஒரு தமிழக எழுத்தாளர், கவிஞர். ஹைக்கூ கவிதைகளில் ஆர்வமுடையவர். சிறார் இலக்கிய வளர்ச்சியில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். தனது இலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார்.

பிறப்பு, கல்வி

உமையவன் என்னும் புனைபெயரில் எழுதிவருபவர் ப.இராமசாமி. இவர், ஈரோட்டில் உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில், மார்ச் 15, 1990-ல், பழனிச்சாமி - சரஸ்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். உயர்நிலைக் கல்வியை முடித்ததும், வணிகவியலில் முதுகலைப் பட்டமும் தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் கோவையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். மனைவி ரேகாமணி.

வண்டிமாடு (ஹைக்கூ தொகுப்பு)

இலக்கிய வாழ்க்கை

உமையவன், கவிதைகள் மீது கொண்ட ஆர்வத்தால் பள்ளியில் படிக்கும்போதே  கவிதைகள், கதைகள் எழுதினார். பதினொன்றாம் வகுப்புப் பயிலும் போது, ‘அறிவுரை கூறும் அற்புதக் கதைகள்’ என்ற நூலை வெளியிட்டார். கல்லூரிக் காலத்தில் ‘கவியோசை’ என்ற கவிதை நூல் வெளியானது. பேராசிரியர்கள் அளித்த ஊக்கத்தால் ‘நீர் தேடும் வேர்கள்’ என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டார். உமையவன் படித்த கோவை எஸ்.என்.எஸ். கல்லூரியிலேயே அந்நூல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ‘விதையின் விருட்சம்’ கவிதைத் தொகுப்பு 2013-ல் வெளியானது.

2015-ல் வெளியான ‘வண்டி மாடு’ கவிதைத் தொகுப்பு இலக்கிய உலகிற்கு உமையவனைப் பரவலாக அடையாளம் காட்டியது. விவசாயம் சார்ந்து தமிழில் வெளியான முதல் ஹைக்கூக் கவிதை நூல் இதுதான். அதற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அணிந்துரை வழங்கிப் பாராட்டினார். கவிஞர் ஈரோடு தமிழன்பனும் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, கவிஞர் மு.மேத்தா, கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் எனப் பலர் உமையவனின் படைப்புகளைப் பாராட்டி ஊக்கமளித்தனர்.

கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலங்கள் பற்றியும், கொங்கு நாட்டின் பகுதிகள், கொங்கு திருமணங்களில் பாடப்படும் பாடல்களைப் பற்றி உமையவனால் ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் ‘கொங்கு நாட்டு மங்கள வாழ்த்து.’ அந்நூலில், கொங்கு நாட்டின் பகுதிகளான பூந்துறை நாடு எது, தென்கரை நாடு எது, பொங்கலூர் நாடு எது, ஆறை நாடு எது, மண நாடு, கிழக்கு நாடு, அண்ட நாடு, வெங்கால நாடு, ஆனைமலை நாடு போன்றவையெல்லாம் எவை என்று விளக்கியுள்ளார் உமையவன். கொங்கு நாட்டுக் கோயில்கள்’ என்பது ஆலய வரலாறுகள் பற்றிக் கூறும் நூல்.

இனிப்பு மாயாவி
சிறார் நூல்கள்

'மந்திரமலை’, ‘மழலை உலகு’, ‘தங்க அருவி ரகசியம்’, ‘இனிப்பு மாயாவி’ போன்றவை உமையவனின் குறிப்பிடத்தகுந்த சிறார் படைப்புகளாகும். ‘ஆகாய வீடு’ அறிவியல் செய்திகளைக் கொண்ட சிறார் கதைகளின் தொகுப்பு. ‘பறக்கும் யானையும் பேசும் பூக்களும்’ என்ற சிறார் நூல் ஆங்கிலத்தில் 'The flying Elephant' என்ற தலைப்பில் துளசி பட் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் சில சிறார் படைப்புகள் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இதுவரை வெளிவராத சிறார் சிறுகதைகளை ‘தற்கால சிறார் கதைகள்' என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். கோவிட்-19 ஊரடங்கில் சிறார்கள் எழுதிய 15 சிறுகதைகளை ‘அந்தியில் மலர்ந்த மொட்டுகள்’ என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். ஐந்து முதல் 15 வயதுடைய சிறார்கள் இக்கதைகளை எழுதியுள்ளனர். 11 கதைகளை எழுதியவர்கள் பெண் குழந்தைகள். இவரது ‘நவீன வேளாண்மையும் திருக்குறளும்’, ‘உழுத புழுதி’ உள்ளிட்ட சில நூல்கள் விரைவில் வெளியாக உள்ளன. கதை, கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், ஆன்மிகம் என சுமார் 20 நூல்களை எழுதியுள்ளார் உமையவன்.

பதிப்புகள்

வையவன், கம்பரின் ‘ஏரெழுபது’ நூலை, தெளிவுரை எழுதிப் பதிப்பித்துள்ளார்.

மந்திரமலை - சிறார் நூல்
இலக்கியச் செயல்பாடுகள்

உமையவன், சாகித்ய அகாதமியின் சார்பில் மணிப்பூரில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாகக் கலந்து கொண்டார். ‘இலக்கியச் சாரல்’ அமைப்பின் தலைவர், ஆசிரியர் பொறுப்புகளை வகித்தார். ‘ஏர்கலப்பை’ என்ற சமூக சேவை அமைப்பின் தலைவராக உள்ளார். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது பங்களிப்புகளை வழங்கி வருகிறார். வானொலியிலும் இவரது சிறப்பு நிகழ்ச்சிகள் பல ஒலிபரப்பாகியுள்ளன. இவரது விவசாயம் சார்ந்த கவிதை ஒன்று, பொள்ளாச்சியில் உள்ள எம்.ஜி.எம். கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறார்களுக்கான சிறுகதைத் தொகுப்பான உமையவனின் மந்திரமலை, ‘பால்சாஹித்ய புரஸ்கார் 2022’-க்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றது. அதே சிறுகதை, ‘யுவபுரஸ்கார் 2022’-க்கான பரிந்துரைப் பட்டியலிலும் இடம் பெற்றது.

உமையவன் படைப்புகள் பற்றிய ஆய்வு நூல்

ஆய்வு நூல்கள்

உமையவனின் படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து ஓவியர் சா. பழனிச்சாமி,‘உமையவனின் இலக்கியப் பயணம்’ என்ற நூலையும், எழுத்தாளர் லட்சுமணன், ‘ மெய்க்கீர்த்தி’ என்ற நூலையும் எழுதியுள்ளனர்.

தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது
பாரதியார் விருது, கம்போடியா
United Writers Association Award

விருதுகள்

  • தமிழக அரசின் ’தமிழ்ச்செம்மல்’ விருது
  • கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை வழங்கிய ‘பாரதியார் விருது’
  • ‘ரவுண்ட் டேபிள் இந்தியா’ அமைப்பு வழங்கிய ‘பெருமை மிகு தமிழர்’ விருது
  • அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய ‘கவியரசு கண்ணதாசன் விருது’
  • ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவை வழங்கிய ‘புதுக்கவிதைப் புதையல்’ விருது
  • இலக்கியச் சாரல் வழங்கிய ‘குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது’
  • ‘சக்தி டி.கே.கிருஷ்ணசாமி’ விருது
  • ‘தமிழ் இலக்கிய மாமணி’ பட்டம்
  • ‘பைந்தமிழ்க் கவி’
  • ‘துளிப்பா சுடர்’
  • ‘ஹைக்கூ செம்மல்’
  • ‘சாதனை இளஞ்சுடர்’
  • ‘விவசாயப் பாவலர்’
  • ‘ஸ்ரீ ராமாநுஜர் விருது’
  • டாக்டர் மு.வ. விருது - ‘பறக்கும் யானையும் பேசும்’ பூக்களும் நூலுக்கு
  • தியாக துருவம் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த நூலுக்கான பரிசு - ’பறக்கும் யானையும் பேசும் பூக்களும்’ நூலுக்கு
  • குறளகத்தின் சிறந்த நூல்களுக்கான பரிசு -  ‘குழலினிது யாழினிது’ நூலுக்கு
  • குறளகத்தின் சிறந்த நூல்களுக்கான பரிசு - ‘மழலை உலகு’ நூலுக்கு
  • பொதிகை மின்னல் பரிசு - வண்டி மாடு’ கவிதைத் தொகுப்புக்கு
  • மித்ரா துளிப்பா விருது - ‘என் குளத்தில் சில முத்துக்கள்’ - கவிதைத் தொகுப்பு
  • United Writer's Association வழங்கிய UWA, Effulgent Star of the Decate Award’
  • திருப்பூர் இலக்கிய விருது (2020)

இலக்கிய இடம்

கவிஞர், எழுத்தாளர், பதிப்பாசிரியர் என இயங்கி வரும் உமையவன், சிறார் நூல்கள் உருவாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். உமையவனின் இலக்கியச் சாதனைகளைப் பாராட்டி, “இவர் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பெரும் பேறு” என்று வாழ்த்தியிருக்கிறார் சிலம்பொலி செல்லப்பன். உமையவனின் சிறார் நூல்கள் பற்றி, நீதியரசர் தி.நெ.வள்ளிநாயகம், “சிறுவர்களுக்காகப் படைத்துள்ள கதைகள் அத்தனையும் தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாக ஒளி விடுகின்றன.” என்று பாராட்டுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • வண்டி மாடு
  • நீர் தேடும் வேர்கள்
  • விதையின் விருட்சம்
  • என் குளத்தில் சில முத்துக்கள்
சிறார் நூல்கள்
  • இனிப்பு மாயாவி
  • சிறுவர் நீதிக் கதைகள்
  • மந்திரமலை
  • குழலினிது யாழினிது
  • மழலை உலகு (திருக்குறள் நீதிக்கதைகள்)
  • பறக்கும் யானையும் பேசும் பூக்களும்
  • ஆகாய வீடு
  • தங்க அருவி ரகசியம்
ஆன்மிக நூல்கள்
  • அன்னூர் அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் திருத்தல வரலாறு
  • திருமணத் தடை நீக்கும் தெய்வீகத் திருத்தலம்
  • கொங்கு நாட்டுக் கோயில்கள்,
இலக்கிய ஆய்வு
  • கம்பரின் ஏரெழுபது - மூலமும் உரையும்
கட்டுரை நூல்கள்
  • இனிது இனிது இல்லறம் இனிது
பதிப்பித்த நூல்கள்
  • திருக்கை வழக்கம்
  • கொங்கு நாட்டு மங்கள வாழ்த்து
தொகுப்பு நூல்
  • தற்கால சிறார் கதைகள்
  • அந்தியில் மலர்ந்த மொட்டுகள்




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.