first review completed

அறநெறிச்சாரம்

From Tamil Wiki
Revision as of 12:56, 27 October 2022 by Madhusaml (talk | contribs)

அறநெறிச்சாரம்' ஒரு தமிழ் நீதி நூல். அறத்தின் வழியை சாரமாகக் கொண்டதால் அறநெறிச்சாரம் எனப்பட்டது. 226 வெண்பாக்கள் கொண்ட இந்நூலின் ஆசிரியர் முனைப்பாடியார்,

ஆசிரியர்

அறநெறிச்சாரம் பாடிய முனைப்பாடியார் தொண்டை மண்டலம் முனைப்பாடியில் வாழ்ந்த புலவர்.

பதிப்பு

அறநெறிச்சாரம் ஏட்டுச்சுவடியிலுள்ளபடி திரு. தி. ச. ஆறுமுக நயினார் அவர்களால் பிரதியெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. திருமணம். செல்வக்கேசவராய முதலியார் எளிதாகப் படிக்கும் முறையில் வகைப்படுத்தி அருங்கலச் செப்பின் துணையுடன் அருஞ்சொல் குறிப்புடனும் சில மேற்கோள்களுடனும் இந்நூலை 1905-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

நூல் அமைப்பு

அறநெறிச்சாரம் இருநூற்றிருபத்தாறு வெண்பாக்கள் கொண்டது. அருகக் கடவுளும் அருக சமயமும் அருக ஆகமமும் கூறும் பாக்களும், அறம் மற்றும் ஒழுக்கத்தை வலியுறுத்தும் பாக்களும் உள்ளன.

பாடல் நடை

கடவுள் வாழ்த்து

தாவின்றி எப்பொருளுங் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேற் சென்றான் புகழடியை - நாவின்
துதித்தீண் டறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து

பொருள்: -குற்றம் இல்லாமல், எப்பொருளும்ஆராய்ந்து அறிந்து, தாமரைப் பூவின் மேல்-தாமரை மலரின் மேல், சென்றான்-சென்ற அருகனது, புகழடியை நாவினால் புகழ்ந்து, இங்கே அறநெறிச்சாரமாகிய இந்நூலை விளங்க, மிக விரைவாக, விரித்துக் கூறுவேன்.

அறவுரைக் கின்றியமையா நான்கு

உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ
  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி
  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
  வான்மையின் மிக்கார் வழக்கு.

பொருள் : அறங் கூறுபவனையும், அதனைக் கேட்பவனையும், உரைக் கப்படும் அறத்தினையும், உரைப்பதனால் உண்டாகும் பயனையும், குற்றமிலா வகை ஆராய்ந்து, அந் நான்கனுள்ளும் பிழைபடுவன வற்றை நீக்கி, அவையினை நிலைபெறச் செய்தல்ஒழுக்கத்தால் உயர்ந்தோர் கடனாகும்.

உலகவாழ்க்கை உறுதியன்று

மறந்தொருவன் வாழுமிம் மாயமாம் வாழ்க்கை
அறிந்தொருவன் வாழுமேல் இல்லை--செறிந்தொருவன்
ஊற்றம் இறந்துறுதி கொள்ளாக்கால் ஓகொடிதே
கூற்றம் இடைகொடுத்த  நாள்.

பொருள்: ஒருவன் தனது ஆன்ம சொரூபத்தை மறந்து வாழ்வதலாகிய இப்பொய்யாகிய வாழ்க்கைஇவன் ஆன்மவடிவை அறிந்து வாழ்வானாயின் இல்லையாகும்; ஒருவன் மிகவும் பற்றைவிட்டு ஞானத்தையடையானாயின்அவன் கூற்றினிடம் அகப்படும் அனுபவிக்கும் துன்பம் மிகக்கொடியதாகும்.

இறைவனைப் பாடிப் பெற்றது

முனைப்பாடி யானைச்சூர் முக்குடைச் செல்வன்
றனைப்பாடி வந்தேற்குத் தந்த பரிசில்
வினைப்பாடு கட்டழித்து வீட்டின்ப நல்கி
நினைப்பாடி வந்தோர்க்கு நீமீக வென்றான்*
நிறைவிளக் குப்போ லிருந்து.

பொருள்: திருமுனைப் பாடியின்கண் எழுந்தருளியிருப்பவனும் தெய்வத்தன்மைவாய்ந்த மூன்று குடைகளுடைய செல்வனுமாகிய அருகனைபாடியடைந்த எனக்குஅவன் அருளிய பரிசிலாவதுமிக்க வினைத் தொடர்பை அழித்துமுத்தியின்பத்தை யருளினதேயன்றி நந்தாவிளக்கே போன்று விளங்கி உன்னைப் பாடியடைந்தவர்கட்கும் அறிவினை நல்குவாயாக என்று கூறியருளியதுமாகும்.

உசாத்துணை

முனைப்பாடியர் இயற்றிய அறநெறிச்சாரம் ஆ பொன்னுசாமிப் பிள்ளை பதிப்புரை

அகிம்சை யாத்திரை-அறநெறிச்சாரம்

                             


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.