standardised

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

From Tamil Wiki
Revision as of 07:12, 12 October 2022 by Tamizhkalai (talk | contribs)

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கநூல் தொகுப்பு நூலான புறநானூற்றில் 246- வது பாடலாக  இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பெருங்கோப்பெண்டு எனும் பெண்பாற் புலவரின் கணவர் ஒல்லையூர் தந்த பூதம்பாண்டியன்.  இவரும் ஒரு புலவர்.

பகைவரை வெல்வேன், வெல்லாவிட்டால் இன்னது நிகழட்டும் என்று பூதப்பாண்டியன் பாடிய பாடல் ஒன்று புறநானூறு நூலில் 71- வது பாடலாக உள்ளது. இந்தப் போரில் அவன் வெற்றி கண்டான். எனிதும் அவன் பின்னர் மாண்டான். அப்போதுதான் அவன் மனைவி பெருங்கோப்பெண்டு அவனது உடல் எரியும் தீயில் தானும் விழுந்து உயிர் துறந்தாள்.

பெருங்கோப்பெண்டு கணவனை இழந்து தீப்பாயச் சென்றபோது நேரில் கண்ட புலவர் பேராலவாயார் என்னும் புலவர் பெருங்கோப்பெண்டு இளமையுடன் இருந்ததை தனது புறநானூறு பாடலில் (புறம் 247) குறிப்பிடுகிறார்.

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, இப்படித் தீயில் விழப்போகும்போது  பாடிய பாட்டுதான் புறநானூறு 246. இதில் இவர் சொல்லும் செய்திகள் அக்காலத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தை அறியத் தருகிறது

பாடல் நடை

புறநானூறு 246


பல்சான் றீரே; பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்,
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!

பொருள்

தடுக்கும் பொல்லாத சான்றோரே! அரிந்த வெள்ளரிக்காய் விதை போல் தோன்றும் நெய் சேர்க்காமல், இலையில் கைப்பிடி அளவு அரிசியில் வெள்ளை எள் சாந்தம் சேர்த்துப் புளி ஊற்றி வெந்த சோற்றை மட்டும் உண்டுகொண்டும், பரப்பிய பரல் கற்களைப் பாயாக்கிப் படுத்துக்கொண்டும் வாழும் பெண் நான் இல்லை. எல்லாருக்கும் இடம் கொடுக்கும் பெருங்காட்டில் என் பெருந்தோளில் இன்பம் தந்த கணவன் மாய்ந்து எரியும் ஈமத் தீ உங்களுக்கு நெருங்குவதற்கு அரிதாக இருக்கட்டும். எனக்கு அது அரும்பே இல்லாமல் முழுதுமாக மலர்ந்திருக்கும் குளுமையான தாமரைப் பொய்கையும், ஈமத் தீயும் ஒன்றுதான்" என்று புலவர் கூறு தீ புகுகிறார்

பாடல் தரும் செய்திகள்

புறநானூறு 246
  • திணை: பொதுவியல்
  • துறை: ஆனந்தப் பையுள்
  • அரசன் பூதபாண்டியன் இறந்தான். அவன் மனைவி பெருங்கோப்பெண்டு இறந்த கணவனை எரிக்க மூட்டிய தீயில் தானும் விழுந்து சாகச்செல்லும்போது சான்றோர் தடுக்கின்றனர்.
  • உடன் கட்டை ஏறுவதும் கைம்மை நோன்பும் வழக்கத்தில் இருந்தன என்று அறிய வருகிறது.
  • “மன்னனின் மனைவிக்கே கைம்மை நோன்பு இத்தனை கொடுமை தரும் எனில் பிறபெண்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்?”என்ற கருத்துப் பெண்ணியவாதிகளால் முன்வைக்கப்படுகிறது.

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.