மோகங்கள் (மலேசிய குறுநாவல்)
மோகங்கள். மலேசிய எழுத்தாளர் எம்.ஏ இளஞ்செல்வனால் எழுதப்பட்ட குறுநாவல்.
பதிப்பு
76 பக்கங்களைக் கொண்ட இந்தக் குறுநாவல் மலேசிய இதழான வானம்பாடி முன்னெடுத்த குறுநாவல் பதிப்புத்திட்டத்தின் கீழ் 1980-ல் பதிப்பிக்கப்பட்டது.
கதைச்சுருக்கம்
ஒரு குடும்பத்தின் மருமகளான நிர்மலா என்ற பெண்ணைச் சுற்றி உருவாக்கப்பட்ட கதை. அவள் கணவன் வியாபாரத்தின் மீதான அதீத ஈடுபாட்டால் குடும்பத்தைப் புறக்கணிக்கிறான். கணவனின் தம்பியான மனோகர் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் அறிவார்ந்த செயல்பாடுகளின் மீது ஈடுபாடு உடையவனாக இருக்கின்றான். கணவனின் தங்கை மஞ்சுளா மதர்ப்பான உடலழகைக் கொண்ட அழகி. நிர்மலாவின் மாமியார் ஜானகி ஒரு அப்பாவிக் குடும்பத்தலைவி. மாமனார் சிவசங்கரன் ஒரு அரசியல்வாதி. நிர்மலாவின் தம்பி முரளிக்கு மஞ்சுளாவின் மீது காதல். மஞ்சுளாவுக்கு அவனைப் பிடிக்கவில்லை. தன் அண்ணன், அண்ணியை ஒழுங்காக கவனிப்பதில்லை என்ற கரிசனை மனோகருக்கு. அது அண்ணியின் மீது சபலமாக மாறுகிறது. அண்ணி (நிர்மலா) அவன் ஆசையை மறுத்து அவமதிக்க அவன் மூன்று நாள் சாப்பிடாமல் அறையில் சுருண்டு கிடக்கிறான். இதே காலகட்டத்தில் மஞ்சுளாவின் காதலன் அவளைக் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டுப் போகிறான். இத்தனை அவலங்கள் நடக்கும் அதே தருணத்தில் நிர்மலாவின் கணவன் கற்பழிப்புக் குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்படுகிறான். இப்படி வீடே குழம்பிப் போயிருக்கும்போது அரசியல் கட்சியில் உள்ள சிவசங்கரன் பூசல்களால் தலையில் அடிபட்டு காயத்துடன் தன் ஆதரவாளர்களுடன் வீட்டுக்கு வருகிறார். அந்த நேரத்தில் மஞ்சுளா மயங்கி விழ அவள் கர்ப்பமாக இருப்பது அம்பலமாகிறது. இதைக் கண்டு முரளி கர்ப்பத்திற்குத் தான்தான் காரணமெனச் சொல்லி அந்தக் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுகிறான். அண்ணியிடம் அவமானப்பட்ட மனோகர் அண்ணனை மீட்க காவல் நிலையம் செல்வதோடு நாவல் முடிகிறது.
- கதைமாந்தர்கள்
- நிர்மலா – குடும்பத்தலைவி
- மனோகர் – ஆசிரியர்,
- முரளி – நிர்மலாவின் தம்பி, மஞ்சுளாவை ஒருதலையாகக் காதலிக்கிறான்
இலக்கிய இடம்
மையப்பாத்திரத்தைச் சுற்றிலும் சிக்கல்களைத் தோற்றுவித்து எளிய பாலியல் மீறல்களை முன்வைக்கும் மிகையுணர்ச்சி நாவலாக மோகங்கள் நாவலை எழுத்தாளர் ம.நவீன் குறிப்பிடுகிறார். அத்துடன் மையக் கதைமாந்தரான நிர்மலாவின் ஆளுமை மேல் மனோகருக்கு ஏற்படும் அறிவு சார்ந்த ஈர்ப்பைக் கலையாகும் தருணத்தை இந்நாவல் தவறவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். மோகங்கள் நாவலில் ஆசிரியர் பல இடங்களில் நிகழ்வுகளின் அர்த்தங்களையும் போதனைகளையும் ஆசிரியரே நிகழ்த்தும் தலையீடுகள் இருக்கின்றன என எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு குறிப்பிடுகிறார்.
உசாத்துணை
மோகங்கள், குறுநாவல் (1980)
இளஞ்செல்வன் நாவல் விமர்சனம் - ம .நவீன்
விமர்சன முகம் 2011, ரெ.கார்த்திகேசு
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.