being created

அன்னை

From Tamil Wiki
Revision as of 19:45, 16 October 2022 by ASN (talk | contribs) (Para Added)
ஸ்ரீ அன்னை

அன்னை (ஸ்ரீ அன்னை; தி மதர்; மதர் மிர்ரா; மிர்ரா அல்ஃபாஸா: 1878-1973) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். ஸ்ரீ அரவிந்தரின் யோக முறைகள் இவரைக் கவர்ந்ததால் இந்தியா வந்தார். ஸ்ரீ அரவிந்தர் வசித்த புதுச்சேரியிலேயே தங்கி அவரது ஆன்மிக, யோகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை நிர்மாணித்தார். ஆரோவில் என்ற சர்வதேச நகரை உருவாக்கினார். ‘செயலாற்றுவதே யோகம்’ என்பதைச் சாதகர்களுக்குப் போதித்தார்.

பிறப்பு, கல்வி

அன்னை, பிப்ரவரி 21, 1878-ல், பிரான்ஸ் நாட்டில், மௌரிஸ் அல்ஃபாஸா-மதில்டா இஸ்மலூன் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இயற்பெயர் மிர்ரா. பள்ளிக் கல்வியை முடித்ததும் ஓவிய ஆர்வத்தின் காரணமாக, ஓவியப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். ஓவிய நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். பல ஊர்களுக்கும் சென்று ஓவியக் கண்காட்சியை நடத்தினார்.

தனி வாழ்க்கை

1897-ல், சக ஓவியராக இருந்த ஹென்றி மோரிசெட்டைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ஆண்ட்ரு என்று பெயரிட்டார்.

ஆன்மிக வாழ்க்கை

இளம் வயது முதலே அன்னைக்குப் பல்வேறு சித்தாற்றல்கள் வசப்பட்டிருந்தன. பிறர் சொல்லாமலேயே அவர்கள் மனதில் நினைப்பது என்ன என்பதை அறிவது முதல் அவர்களது பிரச்சனைகள் என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பதையும் அறிந்திருந்தார். அடிக்கடி அன்னையின் கனவில் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்கள் தோன்றி ஆன்மிகத் தத்துவ ஞானங்களை போதித்து வந்தனர்.

அன்னைக்கு ஆன்மீகத் தேடல் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தன்னைப் போன்றே எண்ணங்கள் கொண்டவர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல கருத்தரங்குகளை நடத்தினார். பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகள் எழுதினார். பல அமைப்புகளுக்குச் சென்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

சித்துக்கள்

அல்ஜீரியாவில் வசித்து வந்த சித்துக்களில் வல்லவரான மாக்ஸ் தியோன் என்பவர் பற்றிக் கேள்விப்பட்டார் அன்னை. அவரைச் சந்தித்து அவரிடமிருந்து சித்துக்களைக் கற்றுக் கொண்டார். தனது உடலைக் கிடத்திவிட்டு வெளியேறுவது, உதவி வேண்டுபவர்களுக்கு சூட்சும உடலுடன் சென்று உதவுவது என்பது உள்பட பல்வேறு சித்துக்களை நிகழ்த்தினார். பிரான்ஸுக்குத் திரும்பி ‘காஸ்மிக்’ என்ற தத்துவ ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் பல ஆன்மிகப் பணிகளைச் செய்து வந்தார்.

தனிப்பட்ட சில காரணங்களால் ஹென்றி மோரிசெட் மிராவை விட்டுப் பிரிந்தார். நாளடைவில் பிரான்ஸ் அரசாங்கத்தில் ஓர் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்த பால் ரிச்சர்ட் என்பவர் அன்னையின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அவர்களின் அன்பு காதலாக மாறியது. 1911-ல், அன்னைக்கும் பால் ரிச்சர்டுக்கும் திருமணம் நிகழ்ந்தது.

ஆன்மிகத் தேடல்

அப்போது புதுச்சேரிப் பகுதி ப்ரான்ஸ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அலுவலக வேலையாக ஒருமுறை இந்தியாவின் புதுச்சேரிக்குச் சென்ற ரிச்சர்ட், அப்போது அங்கே வந்து தங்கியிருந்த ஸ்ரீஅரவிந்தரைச் சந்தித்தார். அந்த சந்திப்பைப் பற்றி பிரான்ஸ் திரும்பியதும்  அன்னையிடம் எடுத்துரைத்தார். அன்னையும் அவரைத் தரிசிக்க ஆவல் கொண்டார். அதற்கு முன்னால் அவ்வப்போது கடிதம் மூலம் ஸ்ரீ அரவிந்தரைத் தொடர்பு கொண்டு ஆன்மிகம் குறித்த தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார்.

புதுச்சேரியில் அன்னை

புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ரிச்சர்டிற்குக் கிடைத்தது. அவருட


ன் வேட்பாளரின் மனைவி என்ற முறையில் அன்னையும் உடன் புறப்பட்டார். புதுவை வந்த அவர்கள் 1914-ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ஆம் தேதி, ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பு அன்னையின் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. சிறு வயதில் இருந்தே தனது கனவில் வந்து தனக்கு ஆன்மிக உண்மைகளைப் போதித்து வந்த குருமகான்களில் அரவிந்தரும் ஒருவர் என்பதும், ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார சக்தி அவர் என்பதும் அன்னைக்குத் தெரிய வந்தது. அரவிந்தரை முழுமையாகச்  சரணடைந்தார்.

ஜப்பானில் அன்னை

சிலகாலம் புதுச்சேரியில் தங்கியிருந்து ஆன்மிக விளக்கம் பெற்ற மிர்ரா, மீண்டும் பிரான்ஸ் திரும்பினார். சூழல்கள் காரணமாகச் சிலகாலம் ஜப்பானில் வசிக்க நேர்ந்தது. அங்கும் அவருக்குப் பல்வேறு ஆன்மிக அனுபவங்கள் ஏற்பட்டன. அதற்கு விளக்கம் கேட்டு அடிக்கடி அவர், ஸ்ரீ அரவிந்தருடன் கடிதத் தொடர்பு மேற்கொண்டார். தனது கருத்துக்களை, ஆன்மீக அனுபவங்களை ஸ்ரீ அரவிந்தருக்குத் தெரிவிப்பதுடன் தனது மற்றும் நண்பர்களின் ஆன்மீக சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதுமாக ஜப்பானில் அவரது வாழ்க்கை கழிந்தது. அதேசமயம் நிரந்தரமாக இனி இந்தியாவிலேயே தங்கி ஆன்மிகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கமும் வலுப்பட்டது

மீண்டும் பாண்டிச்சேரியில்...

1920-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24ம் தேதி மீண்டும் பாண்டிச்சேரிக்கு வந்தார் அன்னை. அவருடன் ரிச்சர்ட், அன்னையின் தோழி டோரதி ஆகிய இருவரும் உடன் வந்திருந்தனர். தன் எதிர்கால வாழ்வு முழுவதையும் பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரின் பணிக்கே முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற முடிவான உறுதியோடு வந்திருந்தார் அன்னை. மனதிற்குள் அவ்வாறே சங்கல்பித்து ஸ்ரீ அரவிந்தரை வணங்கினார். மிர்ரா என்ற மகாசக்தி ஸ்ரீ அரவிந்தர் என்னும் ஆன்ம ஜோதியில் அன்று முழுமையாகச் சரணடைந்தது.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.