under review

ரம்யா

From Tamil Wiki
Revision as of 03:44, 28 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
எழுத்தாளர் ரம்யா

ரம்யா (பிறப்பு: நவம்பர் 10, 1990) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நீலி மின்னிதழ் ஆசிரியர், நீலி பதிப்பகத்தின் நிறுவனர். தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.

பிறப்பு, கல்வி

ரம்யா தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜகுமார், ராதாருக்மணி இணையருக்கு நவம்பர் 10, 1990-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை.

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள சேர்மத்தாய்வாசன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி நிறைவு செய்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் செராமிக் தொழில்நுட்பத்தில் பி.டெக் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ரம்யா ஆகஸ்ட் 17, 2018-ல் பிரவினை மணந்தார். 2013-2015-ல் சென்னையில் மென்பொறியாளராக பணியில் இருந்தார். 2020 முதல் தமிழ்நாடு அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பணியில் உள்ளார்.

இதழியல்

கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த பெண்களை அறிமுகப்படுத்துவதும், பெண் படைப்புகளுக்கான ரசனை விமர்சனக் கட்டுரைகள் வெளிவரும் தளமான நீலி மின்னிதழை நண்பர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 2022 முதல் நடத்தி வருகிறார். இதன் வழியாக பெண் படைப்புகள், பங்களிப்பை ஒட்டி விவாதங்கள், உரையாடல்களை முன்னெடுக்கிறார். நீலி இதழின் பொறுப்பாசிரியர்.

பதிப்பியல்

தீவிர இலக்கியத்தில் தமிழ்ப்பெண் எழுத்துக்கான திடமான அறிவுச்சேகரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் 2025-ல் நீலி பதிப்பகத்தை நிறுவினார். இந்த பதிப்பகத்தின் முதல் நூல் "விந்தியா எனும் தீற்றல்" எழுத்தாளர் விந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

இலக்கிய வாழ்க்கை

ரம்யா எழுத்தாளர் ஜெயமோகன் வழியாக நவீனத்தமிழ் இலக்கிய அறிமுகம் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். ஜெயமோகன் தளத்தில் வெளியான வாசகர் கடிதங்கள் வழியாக அறியப்பட்டார். முதல் சிறுகதை நீலத்தாவணி மார்ச் 2022-ல் வனம் இதழில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு நீலத்தாவணி மற்றும் பிற கதைகள் யாவரும் பதிப்பகம் வெளியீடாக 2024-ல் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதிவருகிறார்.

தமிழ்விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • நீலத்தாவணி (2024, யாவரும் பதிப்பகம்)
தொகுப்பாசிரியர்
  • விந்தியா எனும் தீற்றல் (2025, நீலி பதிப்பகம்)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Mar-2025, 11:44:50 IST