ஞானக்கூத்தன்

From Tamil Wiki
Revision as of 10:20, 23 September 2022 by Jeyamohan (talk | contribs)

ஞானக்கூத்தன் ( ஆர்.ரங்கநாதன்) ( 7 அக்டோபர் 1938- ) தமிழ் நவீனக் கவிஞர். கவிதைக் கோட்பாடு, கவிதை விமர்சனம் என முழுமையாகவே கவிதை சார்ந்து செயல்பட்டவர். பகடியும் அங்கதமும் கொண்ட கவிதைகளுக்காக அறியப்பட்டவர். கசடதபற என்னும் இலக்கிய இதழுடன் தொடர்புகொண்டு செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

ஞானக்கூத்தனின் இயற்பெயர் ஆர்.ரங்கநாதன் . 07 அக்டோபர் 1938ல் பழைய தஞ்சாவூர் மாவட்டம் மாயவரம் அருகே உள்ள திருஇந்தளூர் என்னும் இடத்தில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மாத்வ மரபைச் சேர்ந்த குடும்பத்தில் ராமராவ் - சாவித்ரி இணையருக்கு பிறந்தார். ஞானக்கூத்தனின் தந்தை ராமராவ் கும்பகோணம் வட்டாரத்தில் ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி தன் 68 ஆவது வயதில் மறைந்தார். ஞானக்கூத்தனின் குடும்பம் ஆறுவேலி என்னும் பட்டம் கொண்டது. அதற்கு ஆறாயிரம் என்று பெயர். தமிழ்நாட்டு கன்னட அந்தணர்களில் ஆறுவேலு என்றும் அரவத்தொக்கலு என்றும் இரண்டு பிரிவுகளுண்டு. அரவத்தொக்கலு பிரிவினர் தமிழ்க்கலப்பு கொண்டவர்கள். ஆறுவேலி பிரிவினர் காவிரிக்கரையோரமாக குடியேறினவர்கள். ஞானக்கூத்தனின் கொள்ளுத்தாத்தா காலத்தில் அவர்கள் தமிழகம் வந்து குடியேறியதாகவும், அவர் துவைதமரபு சார்ந்த தத்துவக் கல்வியும், சம்ஸ்கிருதக் கல்வியும் கொண்டவர் என்றும் ஞானக்கூத்தன் நேர்காணல்கள் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

ஞானக்கூத்தனுடன் பிறந்தவர்கள் பத்துபேர். இரண்டாவது குழந்தையாகிய ஞானக்கூத்தன் கல்விகற்கும் செலவுமிகுதியாக இருந்தமையால் பள்ளியிறுதிக்கு மேல் படிக்க முடியவில்லை. அவர் தருமபுரம் ஆதீனத்து தமிழ்க்கல்லூரியில் சேர விரும்பினாலும் தந்தை அவர் வேலைக்குச் சென்று குடும்பத்தை பேணவேண்டுமென விரும்பினார். ஞானக்கூத்தன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கையில் தமிழில் ரெட்டியார் உபகாரச் சம்பளம் பெற்று முதல் மாணவராக திகழ்ந்தார்

தனிவாழ்க்கை

ஞானக்கூத்தன் பள்ளிக்கல்வி முடிந்தபின் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகவும், சிறப்புப் பணி ஆய்வாளராகவும் பணியாற்றினார். பின்னர் தமிழகப்பொதுப்பணித்துறை ஊழியராக பணியில் சேர்ந்தார். ஞானக்கூத்தன் 3 ஜூலை 1972ல் கும்பகோணத்தில் சரோஜாவை திருமணம் செய்துகொண்டார். சரோஜாவும் பொதுப்பணித்துறை அலுவலக உதவியாளர் பணியில் இருந்தார். ஞானக்கூத்தனுக்கு இரண்டு மகன்கள். திவாகர் ரங்கநாதன் இதழாளர், இன்னொருவர் சிங்கப்புரில் வசிக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

ஞானக்கூத்தன் திருமந்திர ஈடுபாட்டால் ஞானக்கூத்தன் என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டார். 1956ல் வெளிவந்த தோத்திரப்பாடல் அவருடைய முதல் படைப்பு. தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த ஞானக்கூத்தன் புதுக்கவிதை மற்றும் நவீன இலக்கியத்தின் எதிர்மனநிலை கொண்டிருந்தார். பின்னர் நவீன இலக்கியத்துக்குள் வந்து புதுக்கவிதைகள் எழுதியபோதும்கூட மரபுக்கவிதையின் சந்தம் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

விருதுகள்

  • 2003 கவிதைக்கணம் விருது
  • 2006 விளக்கு விருது
  • 2006 புதுமைப்பித்தன் விருது
  • 2009 விடியல் பாரதி விருது
  • 2010 சாரல் விருது
  • 2014 விஷ்ணுபுரம் விருது

வாழ்க்கை வரலாறு

  • ஞானக்கூத்தன் -அழகிய சிங்கர். சாகித்ய அக்காதமி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை

நூல்கள்

கவிதை
  • அன்றுவேறு கிழமை 1971
  • சூரியனுக்குப் பின்பக்கம் 1980
  • கடற்கரையில் சில மரங்கள் 1983
  • மீண்டும் அவர்கள் 1994
  • ஞானக்கூத்தன் கவிதைகள் (விருட்சம்) 1998
  • பென்சில்படங்கள் 2002
  • ஞானக்கூத்தன் கவிதைகள் (மையம்) 2008
  • என் உளம் நிற்றி நீ 2014
  • இம்பர் உலகம் 2016
  • ஞானக்கூத்தன் கவிதைகள் முழுத்தொகுப்பு (திவாகர் ரங்கநாதன்) 2018
தொகுப்பு நூல்கள்
  • ந.பிச்சமூர்த்தி நினைவாக (தொகுப்பாசிரியர்) 2000
  • பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் (தொகுப்பாசிரியர்) 2000
  • கட்டுரைகள்
  • கவிதைக்காக 1996
  • கவிதைகளுடன் ஒரு சம்வாதம் 2004
  • ஞானக்கூத்தன் நேர்காணல்கள் 2019

உசாத்துணை

ஞானக்கூத்தன் -அழகிய சிங்கர். சாகித்ய அக்காதமி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை