under review

கண்ணன் விஸ்வகாந்தி

From Tamil Wiki
Revision as of 11:08, 29 December 2025 by Boobathi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கண்ணன் விஸ்வகாந்தி

கண்ணன் விஸ்வகாந்தி (பிறப்பு: ஏப்ரல் 24, 1972 ) தமிழில் எழுதிவரும் கவிஞர். 'வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்' எனும் குழுவில் வாசிப்பு அனுபவங்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

பிறப்பு, கல்வி

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் ஏப்ரல் 24, 1972-ல் பிறந்தார். தந்தை விஸ்வகாந்தி, தாய் செண்பகவள்ளி.

பத்தாம் வகுப்பு வரை, சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி. பன்னிரண்டாம் வகுப்பு சேலம் செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார் .

சேலம் மாவட்டம், அரியானூரில் உள்ள, விநாயகா மிஷன் பொறியியல் கல்லூரியில், இளநிலைப்பட்டம் பெற்றார் .

தனிவாழ்க்கை

சிந்துஜாவை 2003-ல் திருமணம் செய்துகொண்டார். மகன் விகாஸ் கண்ணன்; மகள் சாத்விகா.

கண்ணன் விஸ்வகாந்தி பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் கம்பெனியில், மேலாளராகப் பணிபுரிகிறார். சேலத்தில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கண்ணன் விஸ்வகாந்தி உவமைக்கவிஞர் சுரதாவுடனான பழக்கத்தில் கவிதை எழுதத் தொடங்கினார். கவிதைகள் பல இலக்கியச் சிறுபத்திரிகைகள் மற்றும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

'கோதமலை குறிப்புகள்' கவிதைத் தொகுதியின் கவிதைகள் பெற்றோர் -குழந்தைகளுக்கிடையான உறவு, இறப்பின் காட்சிப்படுத்தல்கள், மரணத்துடனான அணுக்கம் போன்றவற்றைப் பேசுபொருளாகக் கொண்டவை.

கண்ணனின் கவிதைகளில் எளிய மனிதர்களின் அலைபாய்தலும், அவமானங்களும், மரணமும் பேசப்படுகின்றன. கவிதைகளில் பேச்சு மொழியும் பல இடங்களில் எடுத்தாளப்படுகிறது.

அமைப்புப் பணி

கண்ணன் விஸ்வகாந்தி 'வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்' குழுவில் செயல்பட்டுவருகிறார்.இருநூறுக்கும் மேற்பட்ட வாசிப்பு அனுபவங்களை எழுதி உள்ளார்

இலக்கிய இடம்

'கோதமலை குறிப்புகள்' கவிதை தொகுதி பழமலையின் 'சனங்களின் கதை' என்கிற தொகுதிக்கு ஈடான தொகுதி. கவிதைகளின் முடிவுகள் பல துன்பத்தை சுமந்து நிற்கின்றன. இவரது கவிதைகளை நாம் புன்னகைத்தபடி வாசிக்க முடியாது. என்கிறார் வா.மு. கோமு.

"கண்ணனின் கவிதைகள் பெரும்பாலும் ஒரு கதையைச் சொல்கின்றன. வாழ்வியல் அனுபவங்கள் சிதறல்களாகின்றன. சிறுநகரின் வாழ்க்கையை, இருபதாம் நூற்றாண்டுத் தாம்பத்யத்தை, உறவுகளின் நெருக்கத்தைச் சொல்லும் கவிதைகள்" என்று சரவணன் மாணிக்கவாசகம் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • கோதமலைக் குறிப்புகள்
  • நதி தொலைந்த கதை
  • அதீதத்தின் பசி
சிறுகதைத் தொகுப்பு
  • கறுப்பு வண்ணமடித்த இரும்புக் கதவுகள்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Sep-2025, 17:58:18 IST