under review

சூனார்

From Tamil Wiki
Revision as of 11:12, 20 September 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Template error corrected)
சூனார்

சூனார் மலேசியாவைச் சேர்ந்த கேலிச் சித்தரக் கலைஞர் ஆவார். அரசியல் பகடி கேலிச் சித்திரக் கலைஞரான இவரது நூல்கள் தடைவிதிக்கப்பட்டதுடன் சிலமுறை கைது செய்யவும் பட்டுள்ளார்.

பிறப்பு, கல்வி

ஜுல்கிஃப்லீ அன்வர் உஹாக் என்ற இயற்பெயரைக் கொண்ட சூனார் மே 15, 1962 ல் கெடாவில் பிறந்தார். கெடா பெண்டாங்கில் உள்ள பாடாங் டுரியான் ஆரம்பப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார். பின்னர், சூனார் சுங்காய் டியாங், பெண்டாங் மற்றும் ஜித்ராவில் உள்ள இடைநிலைப் பள்ளியில் தமது இடைநிலைக் கல்வியைப் பெற்றார். சூனாரின் பெற்றோர் சூனார் அறிவியல் துறையில் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டதால் கலைத் துறையில் படிப்பைத் தொடர சூனாருக்குத் தடை வந்தது. 1980-ஆம் ஆண்டு, சூனார் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தில் அறிவியல் கல்வியைத் தொடர்ந்தார். ஒரு வருடத்திலேயே படிப்பை முடிக்கத் தவறியதால் பல்கலைக்கழகத்தை விட்டு சூனார் வெளியேற்றப்பட்டார்.

திருமணம், தொழில்

பல்கலைகழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சூனார், கோலாலம்பூரிலேயே தங்கி தொழிற்சாலைகளிலும் கட்டுமானத் தளங்களிலும் வேலை செய்தார். இவர் மனைவியின் பெயர் திருமதி ஃபாஸ்லினா. 1986-ல் சூனார் முழு நேர கேலிச் சித்திர கலைஞராகச் செயல்பட்டார்.

கேலிச் சித்திரக் கலைஞர்

சூனார் கேலிச்சித்திரங்களில் ஒன்று

ஆரம்பப்பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சூனார் கேலிச் சித்திரம் வரைய தொடங்கினார். 1973-ஆம் ஆண்டு சூனார் ஐந்தாம் வகுப்பு பயிலும்போது சூனாரின் முதல் கேலிச் சித்திரம் ‘பம்பினோ’ இதழில் வெளிவந்தது. ‘அனாக் கிஜாங்’ மற்றும் ‘பாக் அடில்’ போன்ற இதழ்களில் தொடர்ந்து சூனாரின் கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டன. சூனாரின் படைப்புக்கு பணம் வழங்கப்படாமல் இதழின் பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டது. 1980-இல் நகைச்சுவைக்காக ‘தொம்தொம்பாக்’ எனும் தலைப்பில் பள்ளி இதழில் வரையப்பட்ட சூனாரின் கேலிச் சித்திரம் சர்ச்சைக்குரியதாகியது. அக்கேலிச் சித்திரம் பள்ளியையும் ஆசிரியர்களையும் விமர்சிக்கும் வண்ணம் வரையப்பட்டது.

கோலாலம்பூரில் தொழிற்சாலையிலும் கட்டுமானத் தளங்களில் வேலை செய்த காலக்கட்டத்தில்  சூனார் வரைந்த கேலிச் சித்திரங்கள் 'பிந்தாங் திமூர்' நாளிதழிலும் 'கிசா சின்தா' பொழுதுபோக்கு இதழிலும் வெளியிடப்பட்டன. அதற்காக சூனாருக்கு முதலில் காசோலை வடிவில் ரிங்கிட் மலேசியா 4.00 சன்மானமாக வழங்கப்பட்டது. ‘கீலா-கீலா’, ‘பெரித்தா ஹரியான்’, ‘ஹராக்கா’, ‘மலேசியாகினி’, ‘கெடுங் கார்டுன்’, ‘கார்டுன்-ஒ-ப்ஹொபியா’ போன்ற இதழ்களிலும் நாளிதழ்களிலும் கேலிச் சித்தரங்களை வரைந்தார்.

‘கீலா-கீலா’ இதழில் ‘கெபாங்-கெபாங்’ என்னும் பகுதி நிரந்தரமாக சூனாருக்கு வழங்கப்பட்டது. இதுவே சூனாருக்கு நையாண்டி மற்றும் அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதற்கான ஒரு தொடக்கமாக அமைந்தது.

சூனாரின் அரசியல் கேலிச் சித்திர துண்டு ‘பாபா’ என்னும் பகுதியைப் பெரித்தா ஹரியான் நாளிதழில் வெளியிட ஒப்புக் கொண்டார்கள்.  1990-இல் ‘சென்டவாரா’ என்ற தலையங்கக் கேலிச் சித்திரம் வரைய தனியாக ஒரு பகுதி சூனாருக்குக் கிடைத்தது.

1991 பெரித்தா ஹரியானில் முழு நேரமாக வேலை செய்ய கீலா-கீலா இதழில் இருந்து சூனார் வெளியேறினார். 1996ஆம் ஆண்டில் பெரித்தா ஹரியானை விட்டு சூனார் வெளியேறினார். வரைவதையும் நிறுத்தினார். அந்த நேரத்தில், சூனார் சுயமாக தனித்து செயல்படத் தொடங்கினார். கேலிச் சித்திரங்கள் வரைவது, அதை சுயமாக சந்தைப்படுத்துவது, கேலிச் சித்திரப் பட்டறை நடத்துவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வசனம் எழுதுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற பல வகையான வேலைகளைச் சூனார் செய்தார்.

1999 பிப்ரவரியில் சூனாரின் அரசியல் கேலிச் சித்திரம் ஹராக்காவில் வெளிவந்தது. எதிர்பாராதவிதமாக, வாசகர்களிடமிருந்து நல்ல கருத்துகள் கிடைத்தன. ஹராக்கா சூனாருக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் சூனார் மலேசியாகினியில் சேர்ந்தார்.

பொது அமைப்பில் பங்களிப்பு

சூனார் கேலிச்சித்திரங்களில் ஒன்று

1991ஆம் ஆண்டு சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பகுதி கேலிச் சித்திரக் கலைஞர்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த மன்றத்தில் சூனார் செயலாளராக நியமிக்கப்பட்டார்

நூல்கள்

  • கார்ட்டூன் ஓன் துன் (2006)
  • 1 ஃபனி மலேசியா (2009)
  • கார்ட்டூன்-ஓ-ஃபோபியா(2010)
  • இவன் மை பேன் ஹஸ் எ ஸ்தேன் (2011)
  • கெடுங் கார்டுன்(2009)
  • பேராக் டாரூல் கார்டூண்(2009)
  • ஈசு டலாம் கார்டூன்(2010)

கண்காட்சிகள்

  • 1993-ல் டோக்கியோ ஷிபியாவில்  உள்ள ஆசியான் கேலிச் சித்திர கண்காட்சியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த சூனார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2021-ல் மனித உரிமை என்ற கருவில் இயங்கலையில் கண்காட்சி நடத்தினார்.  ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 37 கேலிச் சித்திரக் கலைஞர்களின் 100 கேலிச் சித்திரங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
Zunar-sues-police.jpg

சர்ச்சைகள்/ கேலிச் சித்திரக் கலையில் எதிர்நோக்கிய சிக்கல்கள்

  • பொது ஒழுங்கிற்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக்கொண்டிருப்பதாகக் கூறி ஐந்து கேலிச் சித்திர புத்தகங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. (2010)
  • புத்தக வெளியீடு நடக்கவிருந்த கடைசி நிமிடத்தில் அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டார். (செப்டம்பர், 2010)
  • பதிப்பு நிறுவனம் முடக்கப்பட்டது. (2009)
  • வேறெந்த பதிப்பகத்திலும் இவரது புத்தகங்கள் பதிப்பிக்கப்படக்கூடாது என்று பதிப்பு நிறுவனங்களுக்கு மிரட்டல்கள். (2009)
  • வெளிநாட்டுக் கடப்பிதழ் முடக்கம் (அக்டோபர், 2016)

விருதுகள்

  • ‘CRNI’ - ‘துணிவுமிகு கேலிச் சித்திரக் கலையாக்கம்’ விருது. (2011)
  • BilbaoArte/Fundacion and BBK, Spain. நாட்டின் ‘Artist-in-Residence’ விருது(2011)
  • Hammett விருது (2011 & 2015)
  • Cartooning For Peace விருது (2016)
  • International Press Freedom விருது (2015)

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.