under review

புதிய ஆத்திசூடி

From Tamil Wiki
Revision as of 17:35, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆத்திசூடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆத்திசூடி (பெயர் பட்டியல்)
பாரதியின் புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி ஒரு நீதி நூல். ஔவையார் எழுதிய நீதி நூலான ஆத்திசூடியைப் போன்று, நற்கருத்துக்களை மக்களுக்குப் போதிக்க விரும்பி சுப்பிரமணிய பாரதியாரால் இயற்றப்பட்டது. இதில் 110 அறவுரைகள் இடம்பெற்றன.

வெளியீடு

புதிய ஆத்திசூடி, 1913-ல், பாரதி புதுச்சேரியில் இருந்த காலத்தில் வெளியிடப்பட்டது. பாரதி மறைவுக்குப் பின், 1930-களில், பாரதி பிரசுராலயம், ஹிந்தி பிரச்சார சபா போன்றவை தொகுத்து வெளியிட்ட பாரதி பாடல்கள் தொகுப்பில் இடம்பெற்றது. தொடந்து பலரால் அச்சிடப்பட்ட பாரதியார் பாடல்கள் நூலில் இடம்பெற்றது.

தொன்மம்

புதிய ஆத்திசூடி, ஔவையார் எழுதிய நீதி நூலான ஆத்திசூடியைப் பின்பற்றி இளையோரை ஊக்குவிக்கும் வகையில் எழுதப்பட்டது. பாரதியார் புதிய ஆத்திச்சூடியை இயற்றியதற்குப் பின்வரும் கதை கூறப்படுகிறது. "தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி சிறுவன் ஒருவன், இதனை உரத்துச்சொல்லி, மனப்பாடம் செய்துகொண்டிருந்தான். "இளமையில் கல்... இளமையில் கல்... இளமையில் கல்..." - அந்த வழியே சென்றுகொண்டிருந்த மகாகவி பாரதியார் இதனைக் கேட்டு, "முதுமையில் மண்' என்று முழங்கினார். உடன் சென்ற வ.ரா. இதனைக் கேட்டதும் வியப்புடன் பாரதியாரைப் பார்த்தார்.

பாரதியார் அவரைப் பார்த்து, "ஓய்! நமக்கு எதை எடுத்தாலும் திகைப்பாக இருக்கிறது. இளமையிலே தகதகவென்று மின்னும் கோடி சூரியப் பிரகாசத்துடன் நமது குழந்தைகள் ஜ்வலிக்க வேண்டும். அப்படி ஜ்வலித்தால், அவர்கள் முதுமையில் மண்ணாக மாட்டார்கள். உலகத்தார்கள் அவர்களை மதிப்பார்கள். பின்சந்ததியார் போற்றுவார்கள். இல்லாவிட்டால், நாம் இப்பொழுது பழி சுமத்துவதைப் போல, நம்மை நம் பின் சந்ததியார் தூற்றுவார்கள்." என்றார் [1].

பழி சொல்ல வழியில்லாமல், இளைய பாரதத்திற்குப் புதிய வழிசொல்ல, பாரதியார் பாடிய நூல்தான், 'புதிய ஆத்திசூடி'.

நூல் அமைப்பு

புதிய ஆத்திசூடி, நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து, பரம்பொருள் வாழ்த்து' எனும் தலைப்பில் இடம்பெற்றது. தொடர்ந்து,

  • அச்சம் தவிர்
  • ஆண்மை தவறேல்
  • இளைத்தல் இகழ்ச்சி
  • ஈகை திறன்

என்று அகர வர்க்கத்தில் தொடங்கி, ககர வர்க்கத்தில் அமைந்து,

  • வெடிப்புறப் பேசு
  • வேதம் புதுமை செய்
  • வையத் தலைமைகொள்
  • வௌவுதல் நீக்கு

- ஆகிய வரிகளுடன் நிறைவுற்றது.

மதிப்பீடு

புதிய ஆத்திசூடி நூல், சிறார்களையும், இளையோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறையினருக்காக எழுதப்பட்ட நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jul-2024, 01:16:41 IST