மகதேசன் பெருவழி

From Tamil Wiki
ஆறகளூர் கல்வெட்டு

மகதேசன் பெருவழி (பொயு 13 ஆம் நூற்றாண்டு) (பிறபெயர்கள். மகதைப் பெருவழி. ஆழகளூர் பெருவழி). சேலம் மாவட்டத்தில் ஆழகளூர் என்னும் சிற்றூரில் தொலைவுகாட்டிக் கல் ஒன்று கண்டடையப்பட்டது. அதில் அவ்வழியாக சென்ற ஒரு பெருவழியின் செய்தி உள்ளது. அந்த பெருவழி மகதேசன் பெருவழி என அழைக்கப்படுகிறது. இது சோழநாட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பாதை

இடம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், தலைவாசல் அருகே 6 கி.மீ. தொலைவில் ஆறகளூர் கிராமம் (பின் கோடு 636101 – 11° 33′ 39.1428” N அட்சரேகை 78° 47′ 29.5332” E தீர்க்கரேகை) வாணக்கோவரையர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட இந்நிலம் மகதை மண்டலம் எனப்பட்டது. இவ்வூரில் கோட்டைக்கரை என்ற இடத்துக்கு அருகே 13-ஆம் நூற்றாண்டு வணிகக் கல்வெட்டு (ஆறகழூர் மகதை பெருவழி யோசனைக்கல்) ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கல்வெட்டு

ஆறகளூர் யோசனைக்கல்லில் உள்ள கல்வெட்டு இது 1.ஸ்வஸ்திஸ்ரீ களப்

2.பாளராயனும் புரவ

3.ரியாருக்கு செய்யும்படி

4.வடக்கில் வாயிலில் உலக

5.ங்காத்த சோளீச்0வரமு

6.டைய னாயனார்கு வா

7.ணியர்கு முந்பு நம் ஒன்

8.பதாவது தை மாதம் மு

9.தல் இ நாயனார்கு பூ

10.ஜைக்குந் திருப்பணி

11.க்குமுடலாகக் குடுத்

12.தோம் என்று திருவெழு

13.த்துச் சாத்தின திருமுகப்

14.படிக்கு கல்வெட்டு

15. இது தன்ம தாவ

16.ளந் தந்மம்

கல்வெட்டுச்செய்தி

பொன்.வெங்கடேசன் (சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர்) இக்கல்வெட்டை இவ்வண்ணம் விளக்குகிறார்

ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும், புரவாரியாருக்கு’ என கல்வெட்டு துவங்குகிறது. சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் முக்கிய அதிகாரியாக இருந்துள்ள களப்பாளராயர் என்பவர் நிலங்களை நிர்வகித்து வந்துள்ளார். புரவாரியார் என்பவர் வரிக்கணக்கை சரி பார்க்கும் அலுவலர். அப்போது வாழ்ந்த வணிகர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டியை வரியை செலுத்த தேவையில்லை. இதற்கு பதிலாக வடக்கில் வாயிலில் உள்ள உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனாருக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜைக்கும், திருப்பணிக்கும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியில் தன்ம தாவளம் என்ற சொல் உள்ளது. தாவளம் என்பது ஒரு மிகப் பெரிய வணிக நகர். ஆறகழூரில் 12-ஆம் நூற்றாண்டில் மகதைப்பெருவழி என்ற வணிக வழிப் பாதை இருந்துள்ளதற்கு ஆதாரமாய் ஆறகழூர் காமநாதீசுவரர் கோயிலில் ஒரு மைல் கல் இருந்துள்ளது. அதில், “ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்’ என கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒரே அளவிலான 16 குழிகள் வெட்டப்பட்டுள்ளன.

வரலாறு

வாணர் என்ற சிற்றரச மன்னர் குலத்தினர் கொங்கு நாட்டின் வடக்கு பகுதியில் ’மகதை மண்டலம்’ எனக் கூறப்படுகின்ற இடத்திற்கு மன்னராக இருந்துள்ளனர். இவர்களுள் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கீழிருந்து மகதை நாடாழ்வான் ’காஞ்சியும், வஞ்சியும் கொண்ட’ என்ற பெயரையும் பெற்றிருந்தான். இவன் காஞ்சி கொண்டதன் நினைவாக காஞ்சிக்கு செல்லும் மகதேசன் பெருவழி எழுப்பியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆறகழூர் மகதை பெருவழி மைல் கல்லில் உள்ள 16 குழிகள் ஆறகழூரிலிருந்து காஞ்சிபுரத்துக்குமிடையே உள்ள தொலைவை குறிக்கிறது. இந்த மைல் கல் கல்வெட்டு தற்போது சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தில் கட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

உசாத்துணை

13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு - தினமணி செய்தி