பிராணாயாமம்
பிராணாயாமம் என்பது திருமூலர் குறிப்பிடும் அஷ்ட யோகங்களில் ஒன்று. எட்டு வகையான யோகங்கள் மூலம் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்களாகின்றனர். எட்டு யோகங்களில் பிராணாயாமம் மூன்றாவது நிலையில் உள்ளது.
பிராணாயாமம்
பிராணாயாமம் என்பது பிராணனை (மூச்சு அல்லது சுவாசம்) கட்டுப்படுத்தும் பயிற்சியாகும். பிராணாயாமக் கலையை வாசிக்கலை என்றும், மூச்சுக்கலை என்றும் அழைப்பர். உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலையாதலால் சித்தர்கள் இதனை 'சரகலை' எனவும் கூறுவர்.
- திருமந்திரம் – மூன்றாம் தந்திரம்
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.
விளக்கம்: ஆன்மா ஐம் பொறிகளின் தலைவன். ஆன்மா உடலுக்கும் தலைவன். அந்த ஆன்மா உய்வதற்கு (கடையேறுவதற்கு) உதவிடவும் மனம் என்னும் குதிரையைக் கட்டுப்படுத்தவும் பிராணன் என்ற ஒன்று உள்ளது. உடலைப் பற்றாமல் பிராணனைப் பற்றி நிற்பவர்களுக்கு (மூச்சினைக் கவனிப்பவர்களுக்கு) அவை வயப்படும். உடலைப் பற்றி நிற்பவர்களுக்கு அவை அகப்படா.
- திருமந்திரம் – மூன்றாம் தந்திரம்
ஆரியன் நல்ல குதிரை இரண்டு உள
வீசிப் பிடிக்கும் விரகுஅறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே
விளக்கம்: மனம் என்னும் ஆரியனுக்கு இரு குதிரைகள் உள்ளன. அவை இரு முக்கிய வாயுக்களான பிராணன், அபானன் ஆகியவை. அவற்றைக் கட்டுப்படுத்தும் உபாயத்தை அறிவது மிகவும் கடினம். பிராண ஜெயம் பெற்றுள்ள குருநாதரின் அருள் கிடைத்தால் அவ்விரு வாயுக்களையும் சேர்த்துப் பிடித்து பிராணனைக் கட்டுப்படுத்த மனம் கட்டுப்படும்.
அதாவது வாசியை கட்டுப்படுத்தி மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியை உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து துரியத்தை நோக்கிக் கொண்டுவரும் பயிற்சியே பிராணாயாமம் எனப்படும். குண்டலினி சக்தி துரியத்தை எட்டும்போது சகலவித சித்திகளும் கிட்டும்.
சுவாசத்தின் வகைகள்
நாம் சுவாசிக்கும் சுவாசக் காற்றினை உள்ளே எடுக்கும் வாயுவின் அளவை வைத்து அதாவது அவ்வாயு சுவாசப் பையினை நிரப்பும் அளவை வைத்து உயர் சுவாசம், மத்திம சுவாசம், கீழ் சுவாசம், முழுமையான சுவாசம் என நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
- உயர் சுவாசம் என்பது கழுத்தெலும்பு சுவாசம் எனவும் அழைக்கப்படும். கழுத்தெலும்பு போன்றவைகளை மேலே உயர்த்துவதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்து காற்றினை உள்ளே இழுக்கும் முறையாகும் நுரையீரலின் மேற்பகுதியில் மட்டுமே காற்று நிரம்புகிறது. குறைந்த அளவு வாயுவே நுரையீரலுக்கு கிடைக்கிறது.
- மத்திம சுவாசம் என்பது விலா எலும்புகளை உயர்த்தி இயக்குவதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்வதாகும். இந்த முறையில் காற்று நுரையீரலின் மேல் மற்றும் மத்திய பகுதியில் மட்டுமே நிரம்பும். இம்முறையிலும் குறைந்த அளவு வாயுவே நுரையீரலுக்குக் கிடைக்கிறது
- கீழ் சுவாசம் இது ஆழ்ந்த சுவாசம் எனவும் அழைக்கப்படும். மேற் குறிப்பிட்ட இரு சுவாச முறைகளை விடவும் மேலானது. இந்த முறையில் நுரையீரலின் மேல், மத்திய மற்றும் கீழ் பகுதிகளில் காற்று நிரம்புகிறது. இதில் மார்புக் கூடு, உதரவிதானம், விலா எலும்புகள் ஆகியவை இயங்குவதால் நிகழ்கிறது. சுவாச பயிற்சியின் ஆரம்ப நிலையில் இவ்வாறான சுவாசம் நடைபெறும்.
- முழுமையான சுவாசம் என்பது யோகிகளின் சுவாசம் எனவும் அழைக்கப்படும். இது சுவாசப் பயிற்சியின் அதாவது பிராணாயாமப் பயிற்சியின் மூலம் பெறப்படும் உயர்நிலை சுவாசமாகும். இந்த முறையில் நுரையீரலை முழுமையாக விரிவடையச் செய்வதன் மூலம் அதன் முழுப்பகுதியிலும் காற்றை நிரப்புவதாகும், இதன் மூலம் உடலுக்கு முழுமையான பிராணசக்தி கிடைக்கிறது. இது முறையான தொடர் பிராணாயாமப் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.
பத்து வாயுக்கள்
மனித உடலில் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என பத்துவாயுக்கள் உள்ளன. இவை தசவாயுக்கள் எனவும் அழைக்கப்படும்.
- பிராணன்: எனப்படுவது உடலுக்கு ஆதாரமான உயிர்காற்று, இது ரத்த ஓட்டத்திற்கும், சுவாசத்திற்கும் பயன்படுகிறது.
- அபானன்: எனப்படுவது குடலில் தங்கும் மலக்காற்று, இது மலத்தினை கீழ்நோக்கிச் செலுத்த உதவுகிறது.
- வியானன்: எனப்படுவது மண்ணீரலில் இருந்து நரம்புகளையும், மூளையையும் பலப்படுத்துவது. இதனை தொழிற்காற்று என்றும் கூறுவர்.
- உதானன்: எனப்படுவது குரல்வளையில் தொழிற்படுகிறது. இது குரலை, பேச்சை உருவாக்குகிறது. இதனை ஒலிக்காற்று எனவும் அழைப்பர்.
- சமானன்: எனப்படுவது உண்ட உணவை சீரணமாக்கி உடலில் செரிக்க செய்கிறது. இதனை நிரவுகாற்று எனவும் அழைப்பர்.
- நாகன்: எனப்படுவது நாசியிலிருந்து வெளிப்படும் வேகமான தும்மல் காற்றாகும்.
- கூர்மன்: எனப்படுவது விழி காற்றாகும். விழிகளின் அசைவுக்கு உதவும் காற்றாகும்.
- கிருகரன்: எனப்படுவது கொட்டாவி வரவழைக்கும் காற்றாகும். தூக்கம் வருவதற்கான அறிகுறியையும், உடலில் பிராணசக்தி குறைதலையும் (களைப்பு) தெரியவைக்கும் காற்றாகும்.
- தேவதத்தன்: இதனை இமைக்காற்று எனவும் அழைப்பர். இமைகள் இமைக்க இவ்வாயு உதவுகிறது. இவ்வாயு 'நிமி' எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
- தனஞ்செயன்: இதை வீங்கல் காற்று எனவும் அழைப்பர். மரணத்தின்போது உடலை விட்டு ஒன்பது வாயுக்களும் வெளியேறிய பின்னர் இறுதியாக வெளியேறும் காற்றாகும். நுண் கிருமிகளால் உடல் வீங்கி வெடிக்கும்போது கடைசியில் வெளியேறும் காற்றாகும்.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.