காவல் முல்லை
காவல் முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், வேளார், வணிகர் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. அரசனின் காவல் சிறப்பைக் கூறுவது காவல் முல்லை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் இரு கொளுப்பாடல்கள் காவல் முல்லையின் இலக்கணத்தைக் கூறுகின்றன.
கொளு 1
கடல் சூழ்ந்த உலகத்தை காக்கும் அரசனின் காவல் சிறப்பைக் கூறுவது.
தவழ்திரை முழங்கும் தண்கடல் வேலிக்
கமழ்தார் மன்னவன் காவல் மீகந்தன்று(கொளு 8.24)
வெண்பா
பெரும் பூண் சிறுதகைப் பெய்மலர்ப் பைந்தார்க்
கருங்கழல் வெண்குடையான் காவல் - விரும்பான்
ஒருநாள் மடியின் உலகின் மேல் நில்லா
இருநால் வகையார் இயல்பு (178)
பொருள்: பெரிய அணிகளையும், நல்லோரை வணங்கும் வணக்கத்தையும், மலரிட்டுத் தொடுத்த பசிய மாலையினையும், வலிய வீரக்கழலையும்,வெண்மையான கொற்றக்குடையினையும் உடையனான வேந்தன், நாடு காத்தல் தொழிலைச் செய்வதற்கு விருப்பமற்றவனாகி, ஒரு நாள் அளவிற்கு உள்ளம் சோம்பினனாயின், இவ்வுலகின் மேற் குடிப்பிறப்பு முதலாகிய எண்வகை இயல்புடைய சான்றோரின் தன்மையும் தங்காதுபோம்.
கொளு 2
காவல் இயல்பை மன்னனுக்கு எடுத்துக் கூறுவதும் காவல் முல்லை.
தக்காங்கு பிறர் கூறினும்
அத்துறைக்கு உரித்து ஆகும் (கொளு 8.25)
வெண்பா
ஊறு இன்றி உவகையுள் வைக உயிர் ஓம்பி
ஆறில் ஒன்று ஆனாது அளித்துண்டு - மாறின்றி
வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலும்
தான் காவல் கொண்டல் தகும் (179)
பொருள்: ஆறில் ஒருபங்கு வரி வாங்கி அதனைப் பிறர்க்குக் கொடுத்துத் தானும் நுகர்ந்து தன் ஆளுகைக்கு உட்பட்ட உயிர்கள் தீதின்றி நல்வாழ்வு வாழுமாறு தந்தை போன்றே பாதுகாக்க வேண்டும்’ எனச் சான்றோர் கூறுவர்.
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.