ரிச்சர்ட் கார்பே
ரிச்சர்ட் கார்பே, ரிச்சர்ட் கார்ல் வான் கார்பே, Richard Karl von Garbe (மார்ச் 9, 1857 - செப்டம்பர் 22, 1927) ஜெர்மானிய தத்துவவியலாளரகவும், இந்தியவியலாளராகவும் அறியப்படுகிறார். இந்திய தத்துவங்களை, குறிப்பாக சாங்கிய தத்துவத்தை முறையாக ஆவணப்படுத்தியதில் முக்கியமானவராக அறியப்படுகிறார். இவரின் ஆய்வுகள் இந்திய தத்துவவியலாளர்களாலும், மேற்கத்திய தத்துவவியலாளர்களாலும் மதிப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.
பிறப்பு, கல்வி
ரிச்சர்ட் கார்பே மார்ச் 9, 1857 ஆம் ஆண்டில் தற்போதைய ப்ரஷ்ஷியாவின் ஸ்டெட்டின் என்ற நகரத்தில் அருகில் உள்ள ப்ரெட்டோ என்ற இடத்தில் குஸ்டவ் கார்பே-யூஜீன் இணையருக்கு மகனாக பிறந்தார்.
இவர் ஹெர்மன் க்ராஸ்மன் என்ற பலகலை வல்லுனரிடம் கல்வி கற்றார். மேலதிகமாக சமஸ்கிருதத்தையும் கற்று 1873-ல் மேல்நிலை கல்வி முடித்தார். பின்னர் டுபிஞ்ஜன் பல்கலைகழகத்தில்(Tübingen University) சமஸ்கிருதம் மற்றும் ஜெர்மானிய மொழியியல் கல்வியை புகழ்பெற்ற இந்தியவியலாளரான ருடோல்ப் வான் ரோத் (Rudolph von Roth) இடம் பயின்று 1876-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
கிருத்தவ ப்ரோடஸ்டண்ட் பிரிவை சேர்ந்தவரான ரிச்சர்ட் கார்பே 1887-ல் அன்னா விச்செர்ட் என்பவரை ப்ரஷ்ஷியாவின் கோனீஸ்பெர்க் நகரில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் பிறந்தனர்.
ரிச்சர்ட் கார்பே 1878-ல் கோனிக்ஸ்பெர்க் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து, இரு வருடங்களில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். முன்னதாக 1876-க்கு பிறகு இங்கிலாந்துக்கு சென்று சிலகாலம் நூலகத்தில் பணி புரிந்தார். அப்போது புகழ்பெற்ற இந்தியவியலாளரான மாக்ஸ் முல்லரை சந்தித்தார்.
இவர் பேராசிரியராக பணிபுரிந்த போது அதர்வவேதத்தை ஒர் ஆய்வுபதிப்பாக ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார், மேலும் இவர் இந்திய தத்துவத்தைப்பற்றி பல கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார். மிக முக்கியமாக பொ.மு 1-ஆம் நூற்றாண்டு நூலான அபஸ்தம்ப தர்மசுத்திரம் என்ற நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
1885-ல் ஒரு நல்கை பெற்று வாரணாசி சென்று இரண்டு ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது தமது அனுபவ குறிப்புகளை (Reiseskizzen (Travelling Sketches)) எழுதி வெளியிட்டார். அவை அக்காலத்தில் பெரும் மதிப்பு வாய்ந்தவையாக கருதப்பட்டன. அவை குறுகிய காலத்தில் இரு பதிப்புகள் வெளிவந்தன.
1887-ல் பெர்லினில் உள்ள அறிவியல் கழகத்தின் (Royal Academy of Sciences in Berlin ) உதவியுடன் மேலும் பல ஆண்டுகள் இந்தியாவில் ஆய்வுகள் மேற்கொண்டார். இவற்றுக்கு மாற்றாக பல சமஸ்கிருத நூல்களை இவர்களுக்கு வழங்கினார்.
சில காலம் இந்தியாவில் இருந்த ரிச்சர்ட் கார்பே கோனிஸ்பெர்க் திரும்பி அவருடைய பெரும் படைப்பான, இந்திய ஆறு தரிசனங்களில் ஒன்றான, சாங்கியத்தைப்பற்றி Samkhya Philosophie என்ற நூலை வெளியிட்டார். மேலும் சாங்கிய தரிசனத்தின் பல மூல நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1892-ல் வெளியிட்டார்.
ரிச்சர்ட் கார்பே 1894-ல் மீண்டும் கோனிக்ஸ்பெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.
1895-ல் இவரின் ஆசிரியர் ருடோல்ப் வான் ரோத் (Rudolph von Roth) டுபிஞ்ஜன் பல்கலைகழகத்தில் மறைந்ததால், அவர் வகித்துவந்த சமஸ்கிருதம் மற்றும் ஒப்பியல் மத ஆய்வியல் இருக்கைக்கு விண்ணப்பித்து பணியில் அமர்ந்தார். அப்போது இந்திய தத்துவங்களையும், குறிப்பாக பகவத்கீதையை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
ரிச்சர்ட் கார்பே 1908-ல் டுபிஞ்ஜன் பல்கலைகழகத்தின் (Tübingen University) முதல்வாரக பதவி உயர்வு பெற்று, இந்திய தத்துவத்தையும், மதக்கல்வியும் அளித்து பல மாணவர்களை உருவாக்கினார். இவர்களில் இந்தியவியலாளரான ருடோல்ப் ஓட்டோ முதன்மையானவராக கருதப்படுகிறார்.
மறைவு
ரிச்சர்ட் கார்பே தமது 70-வது வயதில் ஜெர்மனியில் உள்ள டுபிஞ்ஜன் (Tübingen) என்னும் இடத்தில் மறைந்தார்.
விருதுகள்
- 1909 Cross of Honour of the Order of the Württemberg Crown
- 1926 Honorary diploma of the Faculty of Philosophy, Tübingen University
பங்களிப்பு
நூல்கள்
- von Garbe, Vaitâna sûtra: das ritual des Atharvaveda (1878)
- von Garbe, Die indischen Mineralien: ihre Namen und die ihnen zugeschriebenen Kräfte (repr. Gerstenberg, 1974)
- von Garbe, Indien and das Christentum: eine untersuchung der religions-geschichtlichen zusammenhänge (1914)
- von Garbe, Die Sâmkhya-Philosophie: eine Darstellung des indischen Rationalismus (1917)
- von Garbe, “Die” Bhagavadgītā (1921)