standardised

மாதர் மித்திரி

From Tamil Wiki
Revision as of 03:47, 7 September 2022 by Tamizhkalai (talk | contribs)
மாதர் மித்திரி, ஜூன் 1915
மாதர் மித்திரி இதழ்

பெண் கல்வியை, பெண்கள் மேம்பாட்டை வலியுறுத்தி வெளியான இதழ் மாதர் மித்திரி. 1887-ல் வெளியான இவ்விதழ், பிற்காலத்தில் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தையும் முன் வைத்தது. இதன் ஆசிரியர் திருமதி ரூத். பெண் ஒருவரால் வெளியிடப்பட்ட பெண்களுக்கான முன்னோடி இதழ் இது.

பதிப்பு, வெளியீடு

‘இந்து ஸ்திரீகளின் உபயோகத்தின் பொருட்டு சித்திரப் படங்களுடன் மாதந்தோறும் பிரசுரமாகும் பத்திரிகை’ என்ற குறிப்புடன், ஜூலை 1887 முதல் வெளியான இதழ் மாதர் மித்திரி. ‘மித்திரி’ என்றால் ‘தோழி’  என்பது பொருள். அந்த வகையில் பெண்களுக்கான தோழியாக, அவர்களது கல்வி, உடல் நலம், சுகாதாரம் போன்ற செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது. இதன் ஆசிரியர் திருமதி ரூத்.

1888 முதல் 1889 வரை வெளியான இதழ்களில் மட்டுமே பெண்ணியக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. பின்னர் வந்த இதழ்களில், கிறித்தவ மதக்கோட்பாடுகள் குறித்த செய்திகள், கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இதழ் முற்றிலும் மாற்றம் பெற்றதற்கான காரணத்தை அறிய இயலவில்லை.

இந்த இதழ் சென்னை ‘மெதடிஸ்ட் எப்பிஸ்கோபல்’ அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதழின் அச்சாக்கம் மற்றும் வெளியீடு குறித்து, ஆங்கிலத்தில் கீழ்காணும் செய்தி ஒவ்வொரு இதழிலும் இடம் பெற்றுள்ளது.

“The Woman's friend in Tamil Mather mithri published by the womens foreign missionary society methodist Episcopal church, Published in USA"

மாதர் மித்திரி இதழின் நோக்கம்
மாதர் மித்திரி கட்டுரை விளக்கப் படம்

இதழின் நோக்கம்

இதழின் நோக்கமாக, “இது இந்து ஸ்திரீகளின் உபயோகத்தின் பொருட்டு சித்திரப் படங்களுடன் மாதந்தோறும் பிரசுரமாகும் பத்திரிகை. பிரதி ஒன்றுக்கு ஒரு வருஷத்திற்கு கையொப்பம் இரண்டு அணா. ஒரு மேல்விலாசத்துக்கு அனுப்பப்படும் ஒரு பிரதிக்கு ஒரு வருஷத்திற்குத் தபாற் கூலி மூன்று அணா. ஒரு மேல் விலாசத்துக்கு அனுப்பப்படும் ஐந்து பிரதிகளுக்கு ஒரு வருஷத்திற்குத் தபாற் கூலி ஆறு அணா. கையொப்பப் பணமும் தபாற் கூலியும் முன்னதாக அனுப்பப்பட்டாலொழிய பத்திரிகை அனுப்பப்படமாட்டாது. கடிதங்கள், கையொப்பங்கள் அனுப்புவோர் சென்னை மவுண்ட் ரோட்டிலிருக்கும் மெதடிஸ்ட் பப்ளிஷிங் ஹவுஸில், ‘மாதர் மித்திரியைப்’ பிரசுரிக்கும் ஏஜெண்டு அவர்களுக்கு அனுப்பவேண்டும்.” என்ற குறிப்பு, ஒவ்வொரு இதழிலும் இடம் பெற்றுள்ளது.

கிரீடங்கள் - மாதர் மித்திரி கட்டுரை
கிறிஸ்து கீதம்

உள்ளடக்கம்

‘மாதர் மித்திரி’ ஆரம்பத்தில் 12 பக்கங்களுடனும், பிற்காலத்தில் 16 பக்கங்களுடன் வெளியானது. கட்டுரைகளோடு விளக்கப் படங்களும் இடம் பெற்றுள்ளன. ஆண்டைக் குறிக்க புத்தகம் எனவும், மாதங்களைக் குறிக்க இலக்கம் என்றும் பயன்படுத்தியுள்ளனர். பெண்கள் நலனிற்காக வெளியான இதழ் இது என்றாலும் பொதுவான செய்திகள் பலவும் இடம் பெற்றுள்ளன. கிறிஸ்துவ மதப் பிரசாரச் செய்திகள் பிற்காலத்தைய இதழ்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒவ்வொரு இதழிலும் கிறிஸ்துவைப் பற்றிய துதிப்பாடல் இடம் பெற்றுள்ளது. 1901-ம் ஆண்டிற்கு முன் வெளிவந்த இதழ்களில் பெண்களுக்கான கட்டுரைகளும் பெண் கல்வியை வலியுறுத்தும் கட்டுரைகளும் அதிகம் இடம் பெற்றுள்ளன.

குழந்தைகளுக்கான பக்கங்களும் அவ்வப்போது இடம் பெற்றுள்ளன. சிறு சிறு கட்டுரைகள், பிற நாடுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் இதழில் இடம் பெற்றுள்ளன. ‘வர்த்தமானக் குறிப்புகள்', ‘சமாசாரக் குறிப்புகள்’ போன்ற தலைப்புகளில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகள் மற்றும் குறிப்புகளின் தலைப்புகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியாகியுள்ளன. எழுதியவர் பெயர் எந்தக் கட்டுரையிலும் குறிப்பிடப்படவில்லை. தொடர் கட்டுரை ஒன்றில் மட்டும் ’மி.மி’ என்ற பெயர் காணப்படுகிறது. மி,மி. என்றால், ‘மித்திரிகளின் மித்திரி’ (தோழிகளின் தோழி) என்பது பொருள்.

பெண் அடிமைத்தனத்திற்குக் காரணமாக இருக்கும் அணிகலன்களின் மீது ஆசை, அழகில், அலங்கரித்துக் கொள்வதில் இருக்கும் விருப்பம் போன்றவற்றைக் கண்டித்தும், அவற்றைக் களைய வேண்டியதன் அவசியம் குறித்தும் இவ்விதழில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

ஹன்னா மோர் அம்மாள், மாட்டிமெர் அம்மாள், பர்டெட் கூட்ஸ் பெருமாட்டி, விக்டோரியா மகாராணியார், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பெண்களின் வாழ்க்கைப் பதிவுகள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. தாஜ்மகால்; லாகூர் பக்கிங்காம் அரண்மனை போன்ற இடங்கள் பற்றிய செய்திகளும் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆவணம்

’மாதர் மித்திரி’ இதழின் ஒரு சில பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்

பெண் ஒருவரால் பெண்களுக்காக வெளியிடப்பட்ட முன்னோடி இதழ் மாதர் மித்திரி. இவ்விதழ் பெண்களின் கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள், நன்னடத்தை, மருத்துவம், சுகாதாரம் போன்ற  கருத்துகளைத் தாங்கி வெளிவந்தது. பெண்களின் முன்னேற்றம் குறித்துச் சிந்தித்த முதன்மை இதழாக ‘மாதர் மித்திரி’ இதழை மதிப்பிடலாம்.

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.