being created

மாதர் மறுமணம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 20:01, 18 August 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
மாதர் மறுமணம் இதழ்

கைம்பெண்களின் மறுமணத்தை ஆதரித்துத் தமிழில் வெளியான முதல் மற்றும் ஒரே மாத இதழ் 'மாதர் மறுமணம்'. 1936, ஆகஸ்டில் இவ்விதழ் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர் சொ.முருகப்பா. கைம்பெண் மறுமணம் குறித்து இவ்விதழில் வெளியான கட்டுரைகளும், பாடல்களும், செய்திகளும் சமூக விழிப்புணர்வைத் தூண்டுவதாய் அமைந்திருந்தன.

பதிப்பு, வெளியீடு

தன வைசிய ஊழியன்’, ‘குமரன்’ போன்ற இதழ்களை நடத்தி வந்தவர் சொ.முருகப்பா. சுயமரியாதை இயக்க ஆதரவாளரான இவர், அதன் சார்பாக ‘சண்டமாருதம்’ என்ற இதழையும் தொடங்கி நடத்தி வந்தார். தமிழ்நாட்டில் கைம்பெண்களின் நிலையைக் கண்டு மனம் வருந்திய இவர், அவர்களை மீட்கும் பொருட்டு காரைக்குடியில் 1934-ல் ‘மாதர் மறுமண இயக்கம்' என்ற அமைப்பைத்  தொடங்கினார். அமைப்பின் முன் மாதிரியாக, முருகப்பா, கைம்பெண்களில் ஒருவரான மரகதவல்லியைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆண்கள் பலரும் விதவைகளை மணக்க முன் வர வேண்டும் என்ற எண்ணத்தில், விதவைப் பெண்களின் அவலம் நீக்குவதற்காகவும், அவர்களின் மறுமணத்தை வலியுறுத்தியும் ‘மாதர் மறுமணம்’ இதழை 1936, ஆகஸ்டில்  ஆரம்பித்தார் சொ. முருகப்பா. அவரது மனைவி மு. மரகதவல்லி அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.

உள்ளுறை
விதவை மறுமண ஆதரவுப் பாடல்

இதழின் நோக்கம்

‘மாதர் மறுமணம்’ இதழை ஓர் இலட்சிய இதழாக நடத்தினார் மரகதவல்லி. இதழின் நோக்கமாக அவர், “கணவனிழந்து வருந்தும் பெண்ணின் தொகை இந்திய நாட்டில் இரண்டரை கோடிப்பேர் என்று சொன்னால் யாரும் திடுக்கிடாதிருக்க முடியாது. இவர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். ஆனால் பொது ஜன வழக்கமானது இச்செயலை ஒரு விளையாட்டாக மதித்து வருகிறது. இப்படியே இப்பெண்களை வதைத்து வயிறெரிந்து கொண்டிருப்பது மத-சமூகக் கடமையென்று கருதுவார் தொகையும் குறைவடையவில்லை. இந்த நிலையில் இப்பெண்களின் கூட்டத்திற்கு விடுதலை நல்க வேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது பத்திரிகை தோன்றியிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். பால்ய விவாகம் என்பது சகஜமாக இருந்த அக்காலக்கட்டத்தில், அறியாத இளம் வயதிலேயே (5, 6 வயதுகளில்) குழந்தைகள் மணம் செய்விக்கப்பட்டனர். அந்த வயதுகளிலேயே தங்கள் கணவர்களை இழந்து, வாழ்நாள் முடிவது வரை ‘கைம்பெண்’ணாக வாழ்ந்து மறைந்தவர்கள் பலர். அவர்களின் மறுவாழ்வை லட்சியமாகக் கொண்டே  ‘மாதர் மறுமணம்’ இதழ் செயல்பட்டது. சொ. முருகப்பா - மு. மரகதவல்லி இருவரும் இணைந்து கைம்பெண் மணத்தை ஆதரித்து ‘மாதர் மறுமண சகாய சங்கம்’ என்ற அமைப்பையும் தோற்றுவித்தனர். இச்சங்கம் கைம்பெண் மணம் செய்ய முன் வருவோருக்கு உதவிகள் செய்ததுடன், கைம்பெண் மணத்தை ஆதரித்துப் பல நூல்களையும் வெளியிட்டது.

இதழின் உள்ளடக்கம்

இதழின் உள்ளடக்கம்

620 சந்தாதாரர்களுடன் இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்டது. தனி இதழின் விலை ஒன்றரை அணா. இந்தியா, சிலோன் போன்ற நாடுகளுக்கு ஆண்டு சந்தா - ஒரு ரூபாய். பர்மா, மலாயா, சைகோன், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கு ஆண்டு சந்தா - ஒரு ரூபாய் எட்டு அணா. பிற வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு சந்தா 2 ஷில்லிங், 6 பென்ஸ்.     கைம்பெண் திருமணத்தை ஆதரிக்கும், ஆசிர்வதிக்கும் காந்தியின் படமே இதழின் முகப்புப் படமாக இடம்பெற்றது. ஒரு கைம் பெண் மண்டியிட்டு காந்தியை வணங்க, காந்தி அவளை ஆசிர்வதிப்பது போன்ற ஓவியம் ஒவ்வொரு இதழிலும்     முகப்பு அட்டையில் இடம் பெற்றது.

இதழின் முதல் பக்கத்தில் தலையங்கக் கட்டுரை அமைந்துள்ளது . பெரும்பாலான இதழ்களின் முதல் பக்கத்தில் மாதர் மறுமணம் தொடர்பான கவிதை, பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கைம்பெண்கள் பற்றிய காந்தியின் கருத்து, கைம்பெண் மறுமணத்தை ஆதரித்து சுத்தானந்த பாரதியாரின் பாடல், பாரதிதாசன் எழுதியிருக்கும் கைம்பெண் ஒருத்தியின் துயரக் கதைப்பாடல் என முதல் இதழிலேயே முக்கியமான கட்டுரைகள், பாடல்கள் இடம் பெற்றன.     வண்ணப் புடவைகளையும் நகைகளையும் அவள் வாழ்க்கையின் இடையில் வந்த கணவனுக்காக ஒரு பெண் ஏன் துறக்க வேண்டும் என்ற கேள்வியை முன் வைக்கிறார் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நீலாவதி ராமசுப்பிரமணியம்.








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.