தண்ணீர் தண்ணீர் (நாடகம்)

From Tamil Wiki

தண்ணீர் தண்ணீர் (1980) நாடகத்தை எழுதியவர் கோமல் சுவாமிநாதன். அன்றைய காலகட்ட அரசு எந்திரம் மந்தகதியில் இயங்கியது என்பதற்கான ஆதாரமாக இந்த நாடகம் உள்ளது. அரசாங்கம் கிராமங்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்பதும் கிராம மக்கள் தங்கள் தேவையைத் தாங்களே நிறைவேற்றிக்கொள்ளவும் அரசு அனுமதிதருவதில்லை என்பதும் இந்த நாடகத்தின் மையப்புள்ளிகள். இந்த நாடகம் பின்னாளில் தமிழ்த் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

பதிப்பு

தண்ணீர் தண்ணீர் நாடகத்தை கோமல் சுவாமிநாதன் எழுதி, 1980 இல் அரங்கேற்றம் செய்தார். 1981இல் நூல் வடிவம் பெற்றது. இயக்குநர் கே. பாலச்சந்தர் இந்த நாடகத்தைத் திரைப்படமாக்கினார்.

நாடக ஆசிரியர்

தண்ணீர் தண்ணீர் நாடகத்தை கோமல் சுவாமிநாதன் (ஜனவரி 27, 1935 - அக்டோபர் 28, 1995) எழுதி, இயக்கினர். இவர் தமிழ் எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர். தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர். சுபமங்களா என்னும் இலக்கிய இதழை நடத்தினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

நாடகமாந்தர்கள்

முதன்மை நாடகமாந்தர் - வெள்ளைச்சாமி என்ற வெள்ளைத்துரை.

துணைமை நாடகமாந்தர் - செவந்தி, அழகிரிசாமி, வைத்தியலிங்கம், கோவாலு, ஓட்டப்பிடாரம் வெங்கடேசன், அடைக்கப்பன், குருசாமி, பூசாரி மாரிமுத்து,           கந்தையன்.

நிழல்நிலை நாடகமாந்தர் - குப்பனாசாரி, வேலுச்சாமி நாய்க்கர், பாராங்குசம், கோதண்டபாணி.

நாடகக் கதைச் சுருக்கம்

வெள்ளைத்துரை ஒரு கொலைக்குற்றவாளி. அவனைக் காவல்துறை தேடுகின்றது. அவன் அத்திபட்டி என்ற கிராமத்திற்கு வருகின்றான். தன்னை வெள்ளைச்சாமி என்று அறிமுகப்படுத்திக்கொண்கின்றான். அந்தக் கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவுவதை அறிகின்றான். தன்னால் இயன்ற அளவு தற்காலிகமாகத் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்கின்றான். நிறந்தரமாத் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க அவன் எடுக்கும் முயற்றி அரசாங்கத்தால் தடுக்கப்படுகின்றது. இறுதியில் வெள்ளைத்துரைக் காவலரிடமிருந்து தப்பியோடி மடிகின்றான். அத்திபட்டி மீண்டும் தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கின்றது. சிலர் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வழக்கம்போல் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர்.