being created

குமரி மலர்

From Tamil Wiki
Revision as of 19:48, 7 August 2022 by ASN (talk | contribs) (Para Added)
குமரி மலர் மாத இதழ்

குமரி மலர்’, 'உலகம் சுற்றிய தமிழர்' என்று போற்றப்பட்ட ஏ.கே.செட்டியாரின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த இதழ். ஏ.கே. செட்டியார், பல முறை உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். அத்தகைய பயணங்களைப் பற்றியும் தனது அனுபவங்களையும் நூலாக எழுதிப் புகழ் பெற்றவர். காந்தி பற்றி முதன் முதலாக ஓர் ஆவணப் படத்தை எடுத்து வெளியிட்டவர்.

ஏ.கே. செட்டியார்

பதிப்பு, வெளியீடு

ஏ.கே.செட்டியார் காந்தி பக்தர். மக்களிடையே காந்தியத் தத்துவங்களைப் பரப்புவதையும், பொது அறிவைப் பரவலாகச் செய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏப்ரல் 1943-ல், குமரி மலர் மாத இதழைத் தொடங்கினார்.

அது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலம் என்பதால், இதழ்கள் வெளியிடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அரசு விதித்திருந்தது. அதனால் ‘மாத இதழ்’ போலவும், அதே சமயம் புத்தகம் போலவும் ‘குமரி மலர்’ இதழைக் கொண்டு வர ஏ.கே. செட்டியார் திட்டமிட்டார். அதன்படி, தனி இதழாகவும், அதே சமயம் தனிப் புத்தகம் போன்றும் இவ்விதழ் மாதந்தோறும் வெளியானது. அதனைக் குறிப்பிடும் வகையில், ‘மாதம் ஒரு புத்தகம்’ என்ற வாசகமும் இதழின் முதல் பக்கத்தில் இடம் பெற்றது.

ஒரே மாதிரியான முகப்புப் படத்தில் வண்ணங்கள் மட்டும் இதழுக்கு இதழ் மாற்றப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது. குமரி மலர், புத்தகக் கடைகளில் விற்கப்படவில்லை. விரும்பிச் சேர்ந்த சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டது. இதழின் விலை எட்டணா. திரு.வி.க.வின் சகோதரருக்குச் சொந்தமான சாது அச்சுக் கூடத்தில்  ‘குமரி மலர்’ இதழ்கள் அச்சடிக்கப்பட்டன.

உள்ளடக்கம்

தமிழ் இலக்கியம், உளவியல், கைத்தொழில், ஆன்மீகம், அரசியல் போன்றவை குமரி மலர் இதழில் இடம் பெற்றன. மாதந்தோறும் பல கட்டுரைகளையும், பல நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட அறிவுரைகளையும், பல இதழ்களில் வெளியான முக்கியத் தகவல்களையும் தொகுத்து குமரி மலர் இதழ் வெளியிட்டு வந்தது. 

ஆண்டுதோறும் வெளியான ஆண்டுமலர் பல்வேறு தகவல்களையும், அரிய செய்திப் படங்களையும், உலக அளவிலான செய்திகளையும் தாங்கி வந்தது. ஏ.கே. செட்டியாரின் உலகப் பயண அனுபவங்களும் இவ்விதழில் வெளியாகின. மக்களுக்குப் பயணளிக்கக் கூடிய விளம்பரங்கள் சில இதழ்கள் தோறும் வெளியாகியுள்ளன.









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.