நாரண துரைக்கண்ணன்

From Tamil Wiki
Revision as of 08:03, 1 February 2022 by Jeyamohan (talk | contribs)

நாரண துரைக்கண்ணன் (1906-1996) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். விடுதலைப்போராட்ட வீரர். தொடக்ககால இதழாளர்களில் ஒருவர், எழுத்தாளர் சங்கச் செயல்பாட்டாளர். தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பின்னர் சுயமரியாதை இயக்க ஆதரவாளராகவும் திகழ்ந்தவர்.

பிறப்பு கல்வி

நாரண துரைக்கண்ணன் 1906ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் நாள் க.வே.நாராயணசாமி - அலமேலு அம்மையாரின் மகனாகப் பிறந்தார்.பெற்றோர் இட்ட பெயர் நடராஜன். ஆனால், வீட்டில் செல்லமாக அழைத்த ‘துரைக்கண்ணு’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. முதலில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், பிறகு திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். குப்புசாமி முதலியார் என்னும் ஆசிரியரிடம் மரபானமுறையில் தமிழ் கற்றார். திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் மைக்கேலிடம் ஆங்கிலம் கற்றார். மறைமலை அடிகளாரிடம் சிறிதுகாலம் தமிழ் பயின்றார்.

தனிவாழ்க்கை

1932 ஆம் ஆண்டு,​​ தன் 25வது வய​தில் மீனாம்​பாளை மணந்தார். சென்னை அடிசன் நிறுவனத்திலும் அச்சகங்களிலும் தொடக்கத்தில் இவர் பணியாற்றினார். ஜீவா பதிப்பகம் என்ற இவரின் சொந்த பதிப்பில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக, அக்கடனை அடைக்கத் தன் சொந்த வீட்டை விற்றார்.

1973 ஆம் ஆண்டு மயிலாப்பூர் சீனிவாச சாஸ்திரி அரங்கில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் நாரண. துரைக்கண்ணன் தமது பேச்சில் தன் வறுமைச்சூழலை சொன்னார். அதையொட்டி ஒளவை நடராஜன் முன்னெடுப்பில் ’திரு.நாரணதுரைக்கண்ணர் நலவாழ்வு நிதி’ எனும் நிதி உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி நிதி சேரவில்லை. ’அன்னை கலை, இலக்கிய நற்பணி மன்றம்’ என்னும் அமைப்பு 23.டிசம்பர்1973 அன்று கோகலே மண்டபத்தில் நடந்த விழாவில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி மூலம் நாரண. துரைக்கண்ணரிடம் ஒப்படைத்தது.

1982ல் மனைவி மறைந்தபின் தனிமையும் பொருளியல் நெருக்கடியும் அடைந்தார். அவரது படைப்புக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது வந்த சிறிய நிதியில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

நாரண துரைக்​கண்​ண​னின் முதல் கட்​டு​ரை ‘சரஸ்​வதி பூஜை' 1924-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இத​ழில் வெளியாகியது. 1932ல் ஆனந்தபோதினி இதழில் ‘அழகாம்பிக்கை’ என்ற முதல் சிறுகதையை எழுதினார். மை வண்ணன், வேள், துலாம், தராசு, திருமயிலைக் கவிராயர், துரை, லியோ என வெவ்வேறு புனைப் பெயர்களில், கதை, தொடர்கதை, அரசியல் தலையங்கம், விமர்சனங்கள், விவாதங்கள், நாடகங்களை எழுதி வந்தார். ‘ஜீவா’ என்ற இவரது புனைப் பெயர்தான் பிரபலமாக அறியப்பட்டது. செந்தமிழ்ச்செல்வி, திராவிடன், தமிழ்நாடு, சிந்தாமணி, தேசபந்து போன்ற இதழ்களில் இவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.1942-இல் "உயிரோவியம்' என்ற நாவலை எழுதியபோது வ.ரா. அந்த நாவலுக்கு முன்னுரை வழங்கினார்.தேவதாசி ஒழிப்புச்சட்ட இயக்கத்தின் போது அதை ஆதரித்து ’தாசிரமணி' என்னும் நாவலை எழுதினார்.

அரசியல்

நாரண துரைக்கண்ணன் தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளராகவும் காந்திய ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் போது ‘தீண்டாதார் யார்?’ போன்ற நூல்களை எழுதினார். ராஜாஜிக்கு அணுக்கமானவராக இருந்த அவர் ராஜாஜியின் முதல் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். பின்னர் சுயமரியாதை இயக்கத்துடன் அணுக்கமானார். ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். 1948ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் குழுத் தலைவராகச் செயல்பட்டுள்ளார். ஈ.வே.ராமசாமி, சி.என்.அண்ணாத்துரை, பாரதிதாசன் ஆகியோர் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இதழியல்

நாரண துரைக்கண்ணன் பரலி சு.நெல்லையப்பர் பரிந்துரையில் ‘லோகோபகாரி’ வார இதழின் ஆசிரியரானார். 1932ஆம் ஆண்டு ‘ஆனந்த போதினி’ இதழின் ஆசிரியர் ஆனார். தேச பந்து, திராவிடன், தமிழ்நாடு ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். 1932-ல் ‘ஆனந்த போதினி’ இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். ர். 1934-ல் பிரசண்ட விகடன் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இறுதிவரை இதழாளராகவே பணியாற்றினார்.

அமைப்புப்பணிகள்

நாரண துரைக்கண்ணன் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், சென்னை கம்பர் கழகச் செயலாளர், முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர், தென்னிந்தியப் பத்திரிக்கையாளர் பெருமன்றத் தலைவர், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.

1949-இல் மகா​கவி பார​தி​யார் இலக்​கி​யங்​களை நாட்​டு​டை​மை​யாக்​கப் போராட ஏற்​பட்ட குழு​வில் தலைமை வகித்தார்.​ அதற்​கென ஏற்​பட்ட குழு​வி​னர் சார்​பில் பார​தி​யின் துணை​வி​யார் செல்​லம்​மாளை திரு​நெல்​வே​லிக்​குச் சென்று,​​ கண்டு,​​ ஒப்புதல் கடி​தம் வாங்​கி​னார்.

புதுமைப்பித்தன் மறைவுக்குப்பின் அவர் குடும்பத்திற்கு உதவ எழுத்தாளர் சங்கம் சார்பில் நிதி திரட்டிய குழுவின் தலைமை வகித்தார். இராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீடு வாங்கி அளிக்கப்பட்டது.

மறைவு

1996ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 22ஆம் நாள் தன் 90ஆம் வயதில் மரணத்தைத் தழுவினார்.

நூல்கள்

பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்கள்,சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130 நூல்களை இவர் எழுதியுள்ளார். இவ​ரது நூல்​கள் அர​சு​டைமை ஆக்​கப்​பட்​டுள்ளன.

நாவல்கள்

  • உயிரோவியம்
  • புதுமைப்பெண்
  • நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?
  • தாசி ரமணி
  • காதலனா? காதகனா?
  • வேலைக்காரி
  • தரங்கிணி
சிறுகதைகள்
  • அழகாம்பிகை
  • தியாகத்தழும்பு
  • சீமான் சுயநலம்
நாடகங்கள்
  1. வள்ளலார்
  2. உயிரோவியம்
  3. தீண்டாதார் யார்?
பாடல்கள்
  • அருட்கவி அமுதம் (பக்திப்பாடல் தொகுப்பு)
ஆய்வுகள்
  1. திருவருட்பா ஆய்வு
  2. இலட்சிய புருடன்

உசாத்துணை

  1. https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jun2017/33297-2017-06-16-19-59-15
  2. http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2371
  3. http://thfreferencelibrary.blogspot.com/2014/04/blog-post_8216.html
  4. நாரண துரைக்கண்ணன் வாழ்க்கை வரலாற்று நூல்
  5. நாரண துரைக்கண்ணன் நூல்கள் மூலம்