standardised

வேலு செல்வமணி

From Tamil Wiki
Revision as of 09:09, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
வேலு செல்வமணி (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

வேலு செல்வமணி(ஆகஸ்ட் 6, 1935) ஈழத்து இசை நாடக கிராமியக் கலைஞர். அண்ணாவியார். காத்தவராயன் கூத்து பல மேடைகளில் பழக்கி அரங்கேற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை கொத் ஆல் கொக்கணைவளைவில் ஆகஸ்ட் 6, 1935-ல் பிறந்தார். உடன் பிறந்தவர் இரு சகோதரிகள். தந்தை நாடகக் கலைஞர். தந்தையின் மூலம் நாடகக் கலையில் ஈர்ப்பு வந்தது. பாலாலி பாடசாலையில் பள்ளிப்படிப்பு பயின்றார். கங்கேசந்துறை நடேஸ்வரக் கல்லூரியில் பயின்றார். தாய் நோய்வாய்ப்பட்டார். ஆறாவது படிக்கும்போது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் படிப்பு தடைபட்டது. குருநாதப்பிள்ளை வாத்தியாரின் உதவி இருந்தது. முல்லைத்தீவில் கடல்தொழில் செய்தார். அகமது அலியாசு குருவிடம் சிலம்பு கற்றுக்கொண்டார்.

வ. கிருஷ்ணப்பிள்ளையிடம் உடுக்கு, கரகம், காவடி, தெய்வப்பாடல்கள் கற்றார். 1974-ல் ஒன்றுவிட்ட சகோதரனின் மரணத்திற்குப் பின் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியின் பிள்ளைகள் ஐந்து பேர். இரண்டாவது மனைவியில் ஒரு மகள் பிறந்தார்.

கலை வாழ்க்கை

பள்ளிக்காலங்களில் நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்தார். பாடல் பாடக்கூடிய திறமை இருந்தது. மாமனார் அண்ணாவியார் எஸ். மயில்வாகணனுடன் சேர்ந்து வாசவிளான் கண்ணகை அம்மன் ஆலயத்தில் மனோன்மணி நாடகத்தை மேடையேற்றினார். மயில்வாகணன் பழக்கிய காத்தவராயன் கூத்தில் அம்மன் வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றார். "விதியின் சதி மதியின் கண்ணீர்" நாடகத்தை எழுதி, பிரதானப்பாத்திரத்தை ஏற்று நடித்து அரங்காற்றுகை செய்தார். கொடிக்காமம், அச்சுவேலி, புத்தகலட்டி, யாழ்ப்பாணம், ஆரியகுளம், முத்திரைச்சந்தை, இருபாலை ஆகிய இடங்களில் நாடகங்களைப் பயிற்றுவித்து மேடையேற்றினார். மாமனார் கிருஷ்ணப்பிள்ளையுடன் இணைந்து நடித்து நாடகங்களை மேடையேற்றினார். காத்தவராயன் கூத்தை பதினைந்துக்கும் மேற்பட்ட மேடைகளில் பழக்கி ஏற்றினார்.

விருதுகள்

  • காத்தவராயன் கூத்தை அருணோதையா பாடசாலையிலும், கந்தையா பாடசாலையிலும் பதினைந்து மேடைகளுக்கு மேல் அரங்காற்றுகை செய்து பாராட்டைப் பெற்றார்.

நடித்த நாடகங்கள்

  • விதியின் சதி மதியின் கண்ணீர்
  • நந்தனார் நாடகம் - ஐயன்
  • காத்தவராயன் கூத்து - அம்மன்

அரங்கேற்றிய கூத்துகள்

  • விதியின் சதி மதியின் கண்ணீர்
  • மனோன்மணி நாடகம்
  • காத்தவராயன் கூத்து
  • மலர்புரியின் மணிமுடி
  • மலைக்கோட்டை மன்னன்
  • பண்டார வண்ணியன்

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.