ஐசக் அருமைராசன்

From Tamil Wiki
ஐசக் அருமைராசன்

ஐசக் அருமைராசன் (1939- ) தமிழில் நாவல்களையும் கதைகளையும் எழுதிய எழுத்தாளர். கிறிஸ்தவக் கம்யூனிசம் என்ற பெயரில் விடுதலை இறையியலின் அடிப்படைகளை தன் நாவல்களில் முன்வைத்தவர். கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்லூரித் தமிழாசிரியராக இருந்தார்

பிறப்பு, கல்வி

ஐசக் அருமைராசன் 19 பிப்ரவரி 1939 ல் நாகர்கோயிலில் ஐசக் -மேரி தங்கம் இணையருக்கு பிறந்தார். தந்தை தென்னிந்தியத் திருச்சபைக் கூட்டமைப்பு (சி.எஸ்.ஐ) போதகராகவும் ஊழியராகவும் இருந்தார். நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவப் பள்ளியில் உயர்நிலைப்படிப்பையும் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை மற்றும் பொருளியலில் பி.ஏ.படிப்பையும் முடித்தார். நாகர்கோயில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஐசக் அருமைராசன் 1969ல் லீலாவதியை மணந்தார். நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் பயிற்றுநராகப் பணியாற்றிக்கொண்டே மதுரைக் காமராஜர் பல்கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றார். பின்னர் மார்த்தாண்டம் கிறிஸ்தவக்கல்லூரி (தற்போது நேசமணி நினைவு கல்லூரி)யில் தமிழாசிரியராகச் சேர்ந்து துறைத்தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்

இலக்கியவாழ்க்கை

ஐசக் அருமைராசன் இந்துக்கல்லூரியில் படிக்கையில் பேராசிரியர் எஸ்.சுப்ரமணியம் தூண்டுதலால் இலக்கியவாசிப்புக்குள் நுழைந்தார்.நாகர்கோயில் கிறிஸ்து ஆலய போதகர் வி.டி.சகாயம் அவருக்கு எழுத தூண்டுதல் அளித்தார். 1970ல் முல்லைமாடம் என்னும் கவிதைநாடகத்தை முதல்படைப்பாக எழுதினார். அணில், அண்ணா, கண்ணதாசன், தீபம், தாமரை போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்தன. கண்ணதாசன் இதழில் இவர் எழுதிய காக்கைக்கூடு என்னும் கதைக்கு பரிசு கிடைத்தது. 1975ல் கீறல்கள் என்னும் முதல் நாவல் வெளிவந்தது. இதில் கிறிஸ்தவக் கம்யூனிசம் என்னும் கருத்தை மையமாக்கியிருந்தார். அதை தொடர்ந்து வளர்த்தெடுத்து எழுதினார். அழுக்குகள், வலியவீடு போன்ற நாவல்களை எழுதினார்.

மறைவு

ஐசக்.அருமைராஜன் 07 நவம்பர் 2011ல் மறைந்தார்.

இலக்கிய இடம்

ஐசக் அருமைராசன் கிறிஸ்த அமைப்புகளுக்குள் உள்ள ஊழல்கள் மற்றும் அடக்குமுறையை கண்டித்து எழுதியவர். கிறிஸ்தவம் கம்யூனிசத்தின் முதல்வடிவம் என வாதிட்டார். கிறிஸ்தவக் கம்யூனிசம் என்னும் கொள்கையை தன் நாவல்களில் முன்வைத்தார். அவையனைத்தும் பிரச்சாரப் படைப்புகளேயாயினும் அக்கொள்கையை தமிழில் முதலில் முன்வைத்தவர் என அவர் அறியப்படுகிறார். விடுதலை இறையியல் என பின்னாளில் அறியப்பட்ட சிந்தனைமுறையின் முன்னோடி ஐசக் அருமைராசன்.

நூல்கள்

நாவல்கள்
  • கீறல்கள் 1975
  • அழுக்குகள் 1980
  • கல்லறைகள்
  • வலியவீடு
  • தவறான தடங்கள்
  • காரணங்களுக்கு அப்பால்
கவிதைநாடகங்கள்
  • முல்லை மாடம்
  • நெடுமான் அஞ்சி
  • வேங்கைகள்
  • பாறை
ஆய்வு
  • சிலம்பு ஓர் இரட்டைக்காப்பியம்
  • தமிழ் நாவல்களில் சமுதாய மாற்றம்

உசாத்துணை