தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி

From Tamil Wiki
Revision as of 09:34, 13 June 2022 by Jeyamohan (talk | contribs)

தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி ( ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்- சம்ஸ்கிருத அறிஞர்.மொழிபெயர்ப்பாளர். நாடகத்தமிழ் முன்னோடிகளில் ஒருவர். இவருடைய மகன்களாகிய த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி இருவரும் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள்.

தனிவாழ்க்கை

தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி தண்டலம் நாராயண சாஸ்திரி என்ற பெயரில் அறியப்படார். தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரியின் தமையன் தண்டலம் வேங்கடசுப்பையர் புகழ்பெற்ற வழக்கறிஞர். தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி தமையனுக்கு உதவியாளராகப் பணியாற்றினார். த.நாராயண சாஸ்திரியின் முதல்மனைவி மணமான ஆண்டிலேயே மறைந்தார். இரண்டாவதாக வட ஆற்காடு மோசூர் என்னும் ஊரைச்சேர்ந்த சுப்ரமணிய ஐயரின் மகள் ராஜம்மாளை மணந்தார். அதில் அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரியின் மகன்கள் தண்டலம் நாராயண சாஸ்திரி குமாரசாமி (த.நா.குமாரசாமி) மற்றும் தண்டலம் நாராயணசாமி சேனாபதி(த.நா.சேனாபதி) ஆகியோர் மொழிபெயர்ப்பாளர்களாகப் புகழ்பெற்றவர்கள். அவர்களின் இன்னொரு சகோதரர் குருசாமி சாரணர் இயக்கத்தில் பங்களிப்பாற்றியவர்.

இலக்கிய ஆய்வுகள்

தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி இந்தியவியலில் ஆர்வம் கொண்டு ஆய்வுநூல்களை எழுதினார். மகதமன்னர்கள், ஆதிசங்கரர் காலம் இரண்டும் அவர் எழுதிய ஆய்வுநூல்கள். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஆங்கிலத்தில் இருந்து சம்ஸ்கிருதத்திற்கு, சம்ஸ்கிருத காவியநாடக அமைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

நாடகவாழ்க்கை

தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி எழுதிய போஜசரித்திரம் மாளவநாட்டு அரசன் போஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, போஜனைப் பற்றிய சம்ஸ்கிருத நூல்களை அடியொற்றி எழுதப்பட்டது. இந்நாடகம் 16 ஏப்ரல் 1898ல் வித்வத் மனோரஞ்சனி நாடகக் குழுவினர் நடிக்க சென்னை விக்டோரியா அரங்கில் மேடையேறியது. தமிழ்நாடகத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய பம்மல் சம்பந்த முதலியாருக்கு தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி மிக அணுக்கமான நண்பராகவும், அவருடைய பல நாடகங்களில் பங்குகொண்டவராகவும் திகழ்ந்தார்

உசாத்துணை

த.நா.குமாரசாமி -த.நா.அஸ்வின்குமார். சாகித்ய அக்காதமி வெளியீடு