மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

From Tamil Wiki

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் சங்க காலப் புலவர். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் உருவாகத் துணை புரிந்தவர். மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சீத்தலை என்பது மலை நாட்டிலுள்ள ஒரு ஊர். அவ்வூரிலுள்ள ஐயனாரை சாத்தனார் என்றழைப்பர். சில அறிஞர்கள் “சீத்தலை” எனப்து திருச்சி மாவட்டம் பெருமாளூர் வட்டத்திலுள்ள ஊர் என்றும் கூறுவர். மதுரையில் நெல்லரிசி, புல்லரிசி, வரகு, தினை, சாமை, சோளம், தோரை, மூங்கில் நெல் ஆகிய எட்டுவகை கூலங்களை விற்கும் வாணிபத்தொழில் மேற்கொண்டு வந்தார். இவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர். சமணத் துறவி இளங்கோவடிகள் மிக நெருங்கிய நண்பராக இருந்ததாக அறியப்படுகிறது.

தொன்மம

புலவர்கள் அவையில் பாடும் பிழையான பாட்டுக்களை சகித்துக் கொள்ள முடியாமல் தலையில் தன் எழுத்தாணியால் குத்திக் கொண்டு சீழ்வடிந்ததால் “சீழ்தலைச் சாத்தனார்” என்றழைக்கப்பட்டார். இந்தச் செய்தியை சாத்தனாரின் சமகாலத்தவரான மருத்துவன் தாமோதரன் திருவள்ளுவமாலையில் பாடியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

கடைச்சங்கப்புலவர்களுள் நக்கீரர், பரணர், கபிலர் போன்றோருடன் ஒப்பு நோக்கத்தக்கவர். சேரமுனியாகிய இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனாரை “தண்டமிழ்ச் சாத்தன்”; “தண்டமிழாசான் சாத்தன்”; நன்னூற்புலவன்” என பாராட்டுகிறார். நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களிலுள்ள சில பாடல்களைப் பாடிய சீத்தலைச் சாத்தனார் என்பவர் இவருக்கு முன்பு வாழ்ந்த வேறொரு புலவர் ஆவார்.

மணிமேகலை

சாத்தனார் இயற்றிய மணிமேகலை என்னும் காப்பியம் புத்த சமயக் கொள்கைப் பற்றிய நூல். புத்த மதக் கருத்துகளை ஆழ்ந்த அனுபவ முறையில் மிக விரிவாக மணிமேகலையில் கூறியுள்ளார்.

பாடல் நடை

  • மணிமேகலை பதிகம்

இளங்கோ வந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திற மணிமேகலை துறவு
ஆறைம் பாட்டில் அறியவைத் தனன்

உசாத்துணை