அஞ்சுவண்ணம் தெரு

From Tamil Wiki
அஞ்சுவண்ணம் தெரு

அஞ்சுவண்ணம் தெரு ( ) தோப்பில் முகமது மீரான் எழுதிய நாவல். இஸ்லாமியர்கள் நடுவே வழிபாட்டு முறையில் சீர்திருத்தங்களை கொண்டுவருபவர்களுக்கும் மரபானவர்களுக்குமான மோதலை விவரிக்கும் நாவல் இது.

பெயர்க்காரணம்

தக்கலையில் அமைந்திருக்கும் தெருக்களில் ஒன்று அஞ்சுவண்ணம் தெரு. தக்கலையில் அஞ்சுவண்ணம் பீர்முகம்மதிய்யா முஸ்லீம் அசோசியேஷன் என்னும் அமைப்பும் உள்ளது. அஞ்சுவண்ணம் என்பது அஞ்சுமன் என்னும் சொல்லில் இருந்து மருவியது எனப்படுகிறது. அந்த தெருவே இந்நாவலின் கதைக்களம்.

வரலாற்றுப்பின்னணி

1991 முதல் இஸ்லாமிய வழிபாட்டு முறைக்குள் சவூதி அரேபியாவை மையமாக்கிய தௌஹீத் என பொதுவாகச் சொல்லப்படும் புதிய மதச்சீர்திருத்த வழிபாட்டுமுறைகளின் ஊடுருவல் நிகழ்ந்தது. அவர்கள் தொழுகையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தனர். அதை மரபுவழிப்பட்டவர்கள் எதிர்க்க அதனால் பல இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தன.அதைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம்

தக்கலை என ஊகிக்கப்படும் அஞ்சுவண்ணம் தெருவே கதைக்களம். மகாராஜா ஓர் இஸ்லாமியப் பெண்ணை விரும்ப அவளை காஃபிருக்கு கொடுக்கக்கூடாது என குடும்பத்தவரே கொன்றுவிடுகின்றனர். அவளை புதைத்து அந்தச் சமாதியருகே தைக்கா பள்ளிவாசல் கட்டப்பட்டும் அதைச்சுற்றி ஒரு தெரு அமைகிறது. சோழநாட்டிலிருந்தும் பாண்டியநாட்டிலிருந்தும் வரவழைக்கப்பட்ட நெசவாளர்களான இஸ்லாமியர்களின் தெரு அது. அவர்கள் மரபான பலநம்பிக்கைகளை இஸ்லாமிய மதநம்பிக்கையுடன் கலந்துகொண்டு வழிபட்டு வருகிறார்கள். பள்ளிவாசலை விட தனிநபர் வீடுகள் உயரமாக இருக்கலாகாது போன்ற நம்பிக்கைகள் பல அம்மக்களிடம் உள்ளன.

தர்ஹா வழிபாட்டுடன் தக்கலை பீரப்பா பாடலுடன் , ஆலீம்புலவரின் மொஹராஜ் மாலை போன்ற நூல்களின் பாடல்களை பாடியபடி புதிதாக சவூதி சென்று வந்த தௌஹீத் கட்சியினர் எதிர்க்கின்றனர். பழையவர்களுக்கும் புதியவர்களுக்கும் மோதல் நிகழ்கிறது. பழைய தைக்கா மசூதி கைவிடப்பட்டு அழிய புதியதாகக் கட்டப்பட்ட தௌஹீத் கட்சியினரின் மசூதி வழக்கில் சிக்குகிறது. இருதரப்பின் சண்டையில் இங்கும் அப்பாவிகள் இறக்கிறார்கள் . எந்தப் பகுதியிலும் சேராது சுக்குக் காப்பி விற்று வயிறு வளர்க்கும் இஸ்மாயில் மரணமடைகிறான் . இருபகுதியினரும் அவனைத் தியாகியாக்கிறார்கள்.

இலக்கிய இடம்

சமகாலத்தில் இஸ்லாமிய வழிபாட்டு முறைக்குள் நிகழும் மோதலைச் சித்தரிக்கும் நாவல் இது.