பட்டாம்பூச்சி

From Tamil Wiki

பட்டாம்பூச்சி ( ) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த பிரெஞ்சு நாவல். பிரெஞ்சு மூலம் ஹென்றி ஷாரியர். ஆங்கிலம் வழி தமிழாக்கம் செய்யப்பட்ட இந்நாவல் ஒரு சுதந்திர மொழிபெயர்ப்பு. ஒரு பிரெஞ்சு தீவாந்தரச் சிறைக்கைதி விடாமுயற்சியுடன் சிறையில் இருந்து தப்புவதற்காக முய்ற்சிசெய்தபடியே இருப்பதை காட்டும் தன் வரலாற்று நாவல்.

மூலம்

இந்நூலின் பிரெஞ்சுமூலம் ஹென்றி ஷாரியர் (Henri Charrière ) என்னும் ஆசிரியரால் எழுதப்பட்டது. தன்வரலாற்று நாவல். 30 ஏப்ரல் 1969 ல் பிரான்ஸில் வெளியானது. பாப்பிலான் என்பது ஹென்றி ஷாரியரின் பட்டப்பெயர். உலகமெங்கும் 21 மொழிகளிலாக 239 பதிப்புகள் வெளிவந்துள்ள இந்நாவல் பாட்ரிக் ஓ’ப்ரியன் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளியாகியது. ஆங்கிலம் வழி தமிழுக்கு ரா.கி.ரங்கராஜனால் மொழியாக்கம் செய்யப்பட்டது

ஆசிரியர்

பிரெஞ்சு மூலத்தின் ஆசிரியர் ஹென்றி ஷாரியர் (16 நவம்பர் 1906  – 29 ஜூலை 1973) கேளிக்கைக் களியாட்டுகளில் ஈடுபாடுள்ள ஓர் இளைஞராக இருந்தபோது போலீஸுக்கு உளவுசொல்லும் ஆள்காட்டியும் பெண்தரகருமான ரோலண்ட் லெ பெட்டிட் (Roland Le Petit)என்பவரை கொலைசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிரெஞ்சு கயானானாவுக்கு 26 அக்டோபர்r 1931 ல் நாடுகடத்தப்பட்டார். அக்கொலையை தான் செய்யவில்லை என ஷாரியர் அவருடைய நூலில் கூறுகிறார், ஆனால் பாரிஸின் நிழல் உலகுடன் தொடர்புடையவராக இருந்த அவர் வேறு பல குற்றங்களை ஏற்கனவே செய்தவராகவே இருந்தார்.

ஷாரியர் 28 நவம்பர் 1933 ல் முதல்முறையாக பிரெஞ்சு கயானாவிலிருந்து தப்பினார். பிடிக்கப்பட்டாலும் மனம் சோராமல் பலமுறை சிறையில் இருந்து தப்பினார். மீண்டும் மீண்டும் பிடிக்கப்பட்டார். சிறிதுகாலம் கோவாஜிரா செவ்விந்தியர்களுடன் ஒரு தீவில் வாழ்ந்தார். இறுதியா தப்பி பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் வழியாக வெனிசுவேலாவை அடைந்த ஹென்றி ஷாரியர் ஓராண்டு சிறைத்தண்டனைக்குப்பின் 3 ஜூலை 1944ல் விடுதலையானார். ஐந்தாண்டுகளுக்குப்பின் வெனிசுவேலா குடிமகனாக ஏற்கப்பட்டார்

ஷாரியர் ரீட்டா பென்சைமன் (Rita Bensimon) என்னும் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகள். வெனிசுலாவில் காரகாஸ் மற்றும் மாராகைபோ ஆகிய ஊர்களில் அவர் உணவகங்களை நடத்தினார். 1969ல் அவருடைய பாப்பிலான் நாவல் வெளியான பின் பாரீஸுக்கு அழைக்கப்பட்டார். 1970ல் வெளிவந்த Popsy Pop என்னும் திரைப்படத்தில் நடித்தார். 1970ல் பிரெஞ்சு நீதிமன்றம் ஷாரியருக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு மன்னிப்பு வழங்கியது. அவர் பிரெஞ்சு அரசின் விருதுகளை பெற்றார். 29 ஜூலை 1973 ல் ஷாரியர் ஸ்பெயினில் மாட்ரிட் நகரில் தொண்டைப்புற்றுநோயால் மறைந்தார். தன் இரண்டாம் காலகட்ட வாழ்க்கையைப் பற்றி ஷாரியர் எழுதிய Banco என்னும் நூல் அவர் மறைந்த ஆண்டு வெளியானது. அது புகழ்பெறவில்லை.

உண்மைகள்

ஆய்வாளர்கள் 1970க்குப்பின்னர் ஆவணங்களைச் சோதனை செய்தபோது ஷாரியரின் வரலாறு அவருடைய நாவலில் உள்ள சித்தரிப்பில் இருந்து பெரிதும் வேறுபட்டிருப்பதை கண்டனர். ஷாரியர் தன் அனுபவங்களை சற்று மிகையாக்கியதுடன் வேறுபலரின் அனுபவங்களையும் கலந்தே தன் வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார் என்று இன்று கூறப்படுகிறது. பாப்பிலான் பற்றிய நான்கு உண்மைகள் (Les quatre vérités de Papillon) என்னும் நூலில் பிரெஞ்சு இதழாளரும் நூலாசிரியருமான நூஜார்ஜ் மீனேஜர் (Georges Ménager) ஷாரியர் ஒரு பெண்தரகராக தன் தோழியுடன் வாழ்ந்தார் என்றும் அவள் கொலைசெய்ததாக பின்னர் சொன்னார் என்றும் சொல்கிறார். ஷாரியர் டெவில்ஸ் ஐலண்ட் எனப்படும் பாறை நிறைந்த தீவில் வாழவில்லை என்றும் கூறினார். ஆவணங்களின் படி ஷாரியர் சொல்லும் பல சிறைவாசங்கள் நிரூபிக்கப்படாதவை என மீனேஜர் சொன்னார்

நூல்

தன் வரலாற்று நாவலான பாப்பிலான் ஷாரியரின் தளராத சுதந்திரவேட்கையை சித்தரிக்கிறது. பலமுறை பிடிக்கப்பட்டு கடும் தண்டனையை அனுபவித்தாலும், உடன் தப்பியவர்கள் பலர் உயிரிழந்தாலும் ஷாரியரின் விடுதலைவேட்கை தணியவில்லை. இறுதியில் தனித்தீவுகளில் ஏறத்தாழ விடுதலையடைந்த கைதியாக வாழும் வாய்ப்பைப் பெற்றபோதிலும்கூட முழுவிடுதலைக்காகவும் , கௌரவமான குடிமகன் என்னும் அடையாளத்துக்காகவும் ஷாரியர் போராடிக்கொண்டே இருந்தார். பாப்பிலான் ‘விடுதலைக்கான அடிப்படை விழைவை காட்டும் மானுடஆவணம்’ என நியூயார்க் டைம்ஸ் இதழால் கொண்டாடப்பட்டது.

திரைப்படம்

  • பாப்பிலான் (Papillon) (1973) இயக்கம் ஃப்ராங்கிலின் ஸ்காஃனெர் (Franklin J. Schaffner)
  • பாப்பிலான் (Papillon) (2017) இயக்கம் மைக்கேல் நோயர் (Michael Noer)

காமிக்ஸ்

கார்லோஸ் பெடஸ்ஸினி (Carlos Pedrazzini ) காமிக் நூலாக வெளியிட்டுள்ளார்

மொழியாக்கம், வெளியீடு

1970ல் ஆங்கிலத்தில் பாட்ரிக் ஓ ப்ரியன் மொழியாக்கத்தில் வெளியானது பாப்பிலான்.ஜீன்.பி.வில்சன் மற்றும் வால்டேர் பி. மைக்கேல் மொழியாக்கமும் உள்ளது. ஆங்கிலத்தில் இருந்து இந்நாவலை ரா.கி.ரங்கராஜன் 1976ல் மொழியாக்கம் செய்து குமுதம் வார இதழில் தொடராக வெளியிட்டார். வரிக்கு வரி மொழியாக்கம் அல்ல, தழுவல் ஆக்கம். இதற்கு ஓவியர் ஜெயராஜ் வரைந்த நிழல்வெட்டு ஓவியங்கள் புகழ்பெற்றவை. தமிழில் புகழ்பெற்ற தொடர்கதையாக பட்டாம்பூச்சி கருதப்பட்டது. பல மறுபதிப்புகள் வெளிவந்துள்ளன.

உசாத்துணை